"நீல நிற உடை அணிவிக்கப்பட்ட நிலையில், ஒரு பைக்குள் இருந்து என்னைக் கண்டெடுத்தனர்."
வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் அன்பும் அரவணைப்பும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த டேவிட் மெக்பிரைடுக்கு, தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பது எப்போதுமே தெரிந்திருந்தது.
ஆனால், 15 வயதில் ராணுவத்தில் சேர்வதற்காகப் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தபோதுதான், தனது பிறப்பு குறித்த தகவல்கள் எந்த அளவுக்குக் குறைவாக இருந்தன என்பதை அவர் உணர்ந்தார்.
அந்தப் பிறப்புச் சான்றிதழில் பெரும்பாலான விவரங்கள் இடம் பெறவில்லை. அவரது உயிரியல் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல அவர் பிறந்த இடம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களும் தெரியவில்லை.
அப்போது, தன்னைத் தத்தெடுத்து வளர்த்த தந்தை, தனக்குத் தெரிந்த சில தகவல்களை மெக்பிரைடிடம் தெரிவித்தார்.
குழந்தையாக இருந்தபோது மெக்பிரைட் கைவிடப்பட்டதாகவும், பூட்டப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் முன் இருக்கையில் இருந்து அவர் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரது தந்தை கூறினார்.
இதையடுத்து, தனது பிறப்பு குறித்துக் கிடைக்கக்கூடிய அனைத்து விவரங்களையும் கண்டறிய மெக்பிரைடும் அவரது தந்தையும் முடிவு செய்தனர்.
அவர்கள் உள்ளூர் பொது நூலகத்திற்குச் சென்று, பழைய செய்தித்தாள்களில் வெளியான செய்திகளை ஒவ்வொன்றாகக் கவனமாக ஆராயத் தொடங்கினர்.
மெக்பிரைட் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்போது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருந்தது. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் வடக்கு அயர்லாந்தில் குழந்தைகள் கைவிடப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாக இருந்தது.
திருமணத்திற்குப் புறம்பாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தேவாலயங்கள் பெரும்பாலும் உதவி செய்ததாகவும், குறைந்தபட்சம் அவர்கள் தங்குவதற்கு இடமளித்ததாகவும் மெக்பிரைட் விளக்குகிறார்.
"திருமணமாகாத ஒரு பெண் கர்ப்பமடைந்தால், அவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்டார். எல்லாவற்றையும் மறைத்து வைக்க முயன்றதுதான் இதில் பிரச்னையாக இருந்தது."
பழைய நாளிதழ்களில் வெளியான செய்திகள் மூலம் மெக்பிரைட்டால் தனது பிறப்பு குறித்துப் பெரிய அளவில் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும், குழந்தையாக இருந்தபோது அவர் நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தார் என்பதை அந்தச் செய்திகள் உறுதி செய்தன.
"எனக்கு நன்றாக உணவளித்திருந்தனர். என்னை மிகவும் கவனமாகப் பராமரித்திருந்தனர்" என்று அவர் கூறுகிறார். தன்னைப் பெற்றெடுத்த தாய் இளம் வயதுடையவராக இருந்திருக்கலாம் என்றும், அச்சத்தின் காரணமாகத் தன்னைக் கைவிட்டிருக்கலாம் என்றும் மெக்பிரைட் கருதினார். இதையடுத்து, தனது உயிரியல் தாயைக் கண்டுபிடிக்க முயல அவர் முடிவு செய்தார்.
ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் மெக்பிரைட்டின் தேடலுக்குப் பெரிதாகப் பலன் கிடைக்கவில்லை. கைவிடப்பட்ட குழந்தைகள் தொடர்பான பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதிலும், தனது பிறப்பு குறித்த கேள்விகளுக்கு அவரால் பதில்களைக் கண்டறிய முடியவில்லை.
இதையடுத்து, தன்னுடன் வளர்ந்த சகோதரி அளித்த ஊக்கத்தால் டிஎன்ஏ பரிசோதனை செய்துகொள்ள மெக்பிரைட் முடிவு செய்தார். அந்தப் பரிசோதனையின் முடிவு அவரது வாழ்க்கையையே மாற்றியது. தனக்கு உயிரியல் சகோதரி ஒருவர் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
"அது ஓர் அற்புதமான ஆச்சரியமாக இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையே வந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்" என்று அவர் கூறுகிறார்.
அவரது சகோதரியின் பெயர் ஹெலன் வார்டு. ஆனால், தனது தாயைப் பற்றிய கேள்விகளுக்கு ஹெலன் பதிலளிப்பார் என்று மெக்பிரைட் எதிர்பார்த்த நிலையில், அவரிடமும் பதில்கள் கிடைக்காத பல கேள்விகள் இருந்தன. ஏனெனில், ஹெலனும் குழந்தையாக இருந்தபோது கைவிடப்பட்டிருந்தார்.
"பச்சை நிறப் பை ஒன்றில் வைத்து, தொலைபேசிக் கூண்டு ஒன்றுக்குள் என்னை விட்டுச் சென்றிருந்தனர். அங்கிருந்துதான் என்னைக் கண்டெடுத்தனர்" என்று ஹெலன் வார்டு கூறுகிறார்.
"நாங்கள் இருவரும் பைகளில் கண்டெடுக்கப்பட்ட இரட்டையர்களாக இருக்கலாம் என்பதுதான் முதலில் எனக்குத் தோன்றியது."
ஆனால், அவர்கள் இரட்டையர்கள் அல்ல. இருவரும் ஏழு ஆண்டுகள் இடைவெளியில் பிறந்தவர்கள். அயர்லாந்தின் எல்லைக்கு இருபுறமும் வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டவர்கள். இருப்பினும், அவர்களது வாழ்க்கையில் இருந்த ஒற்றுமைகள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தன.




