"அன்று திருவிழா நடந்து கொண்டிருந்தது. இரவு சுமார் ஒன்பதரை மணியளவில் என் சகோதரரின் நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். முதல் மாடியில் அவர் ஏறும்போது மொத்த படிக்கட்டுகளும் பெயர்ந்து விழுந்துவிட்டன."
சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் வர்ஜின் குடும்பத்தில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நடந்த சம்பவம் இது.
இந்தச் சம்பவத்தில் இளைஞருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் இருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய வர்ஜின் தெரிவித்தார்.
இதேபோன்ற நிலையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. புதிய வீடுகளைக் கட்டித் தருவதாக கூறி, இந்த வீடுகளை காலி செய்யுமாறு அரசு கூறினாலும், அதனை ஏற்பதற்கு அங்கு வசிக்கும் மக்கள் மறுத்து வருகின்றனர். இதற்கான காரணங்களை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.
சென்னைப் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் (தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) 1970 ஆம் ஆண்டு 1,356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
68 தொகுப்புகளைக் கொண்ட குடியிருப்புகள் ஒவ்வொன்றும் நான்கு தளங்களைக் கொண்டதாக உள்ளன. சுமார் நாற்பது ஆண்டுகளில் கடல் காற்று போன்றவற்றால் இந்தக் குடியிருப்புகள் பலவும் சிதிலமடைந்து காணப்படுகின்றன.
இதன் காரணமாக வீடுகளில் கான்கிரீட் பெயர்ந்து விழுவது வாடிக்கையான ஒன்றாகவே இந்த மக்களுக்கு மாறிவிட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் உயிரிழப்புகளையும் உடல்ரீதியான பாதிப்புகளையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
மறுவாழ்வுக்கான நிவாரண தொகை, மாற்று வீடுகள் தொடர்பான வாக்குறுதிகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் அறிவித்தாலும் அதனை ஏற்க இப்பகுதி மக்கள் மறுத்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். "மாற்றுக் குடியிருப்பு கோரி கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். வீடுகளைக் கட்டித் தருவதாக அரசு கூறுகிறது. ஆனால், உறுதியான உத்தரவாதத்தைத் தர மறுக்கின்றனர்" என்கிறார் முள்ளிக்குப்பம் மீனவர் சங்க நிர்வாகி பாபு.
"மாற்றுக் குடியிருப்பைக் கட்டிவிட்டு அதற்கேற்ப மக்களை இங்கிருந்து பகுதி பகுதியாக வெளியேற்றலாம். இதற்காக மக்களிடம் கருத்துக் கேட்பை நடத்த வேண்டும் எனக் கூறுகிறோம். ஆனால், அதனை அதிகாரிகள் கேட்பதாக இல்லை" என அவர் தெரிவித்தார்.
சீனிவாசபுரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஆதிலட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டார்.
குடியிருப்பின் முதல் மாடியின் வீட்டு வாசலில் நின்றபடி இவரது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேல் சுவற்றின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அவரது பேரனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், அந்தச் சம்பவம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து அவரால் மீள முடியவில்லை. "ஏதோ இடிந்து விழுந்த சத்தம் கேட்டு வெளியில் வந்தேன். பேரனுக்கு எதுவும் ஆகவில்லை. இன்னும் அந்த பயத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை" எனக் கூறுகிறார்.
இவரது வீட்டின் வாசற்படியை அருகே உள்ள மாடிப்படியைத் தொட்டபோது அது ஆடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
"இனியும் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் எனத் தோன்றவில்லை. எங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் தான் வெளியே செல்ல வேண்டும்" எனக் கூறுகிறார் ஆதிலட்சுமி.
இவரது வீட்டின் மேற்கூரை சிதிலமடைந்து காணப்படுவதால் ஹெல்மெட் போட்டுக் கொண்டே சமையல் வேலை செய்வதாகக் கூறும் அவர், "தொட்டால் விழுந்துவிடும் என்பதால் பொருட்களை எடுக்கவே பயப்படுகிறேன். ஒவ்வொரு இரவும் பயத்துடன் தான் தூங்க செல்கிறோம்" என்கிறார்.
இந்த வீட்டில் சுமார் 25 ஆண்டுகளாக இவர் குடியிருந்து வருகிறார். இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். "மழைக்காலத்தில் சீலிங்கில் இருந்து தண்ணீர் ஒழுகும். வருடா வருடம் பேன் ரிப்பேர் ஆகிவிடும். ஓர் ஆணி அடித்தால் கூட கான்கிரீட் பெயர்ந்துவிடும்" எனக் கூறுகிறார் ஆதிலட்சுமி.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி இப்பகுதியில் குடியிருந்த சையது குலாப் என்ற இளைஞர், கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
குடியிருப்புகளின் நிலை காரணமாக இங்குள்ள தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை. "குழந்தைகளை விளையாட வேண்டாம் எனக் கூறி அவர்களைக் குலாப் விரட்டிவிட்டான். சில நிமிடங்களில் அவன் மீது நான்காவது மாடியில் இருந்த சன் ஷேடு விழுந்தது" என்கிறார், அவரது உறவினர் யாகூப் பாட்ஷா.
இந்தச் சம்பவத்தில் சையது குலாப் உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு வாரியத்தின் சார்பில் 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. "குடியிருப்புகளில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து எனது குடும்பத்தில் நடக்கும் இரண்டாவது மரணம் இது" எனவும் யாகூப் பாட்ஷா வேதனைப்பட்டார்.




