சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி அதனை சீரமைப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்றை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு புதன்கிழமையன்று (நவம்பர் 4) உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னதாக, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள், டி.ஆர்.ரமேஷ் உள்பட நான்கு பேர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனம் தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறையின் அரசாணையை எதிர்த்தும் கோவிலின் பழமையான கட்டுமானங்கள் மற்றும் வருமானக் கணக்குகள் தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதியன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பில், 'கடந்த 12 ஆண்டுகளாக கோவிலுக்குக் கிடைத்த வருமானம் குறித்து முழுமையான மற்றும் உண்மையான கணக்குகளை பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை' எனக் கூறப்பட்டுள்ளது.
பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தின்கீழ் கோவிலின் பழமையான கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கோவிலுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் புதிய கட்டுமானங்களை மேற்கொண்டிருப்பதன் மூலம் கோவில் சொத்துகள் முறைகேடாக நிர்வகிக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது' என உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
கோவில் நிர்வாகத்தில் தலையிடுவது அவசியம் எனக் கூறிய நீதிபதிகள், நிர்வாகக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தனர்.
'ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் இணைத் தலைவராகவும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.ராஜேந்திரன்உறுப்பினராகவும் பொது தீட்சிதர்களின் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயலாளர் ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்' எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
'கோவில் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை, புதிய நிர்வாகக் குழு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்' எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவில் சொத்துகள், கணக்கு வழக்குகள் மற்றும் பிற நிர்வாக விவகாரங்களை கண்காணிக்கும் பொறுப்பும் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துகளை மீட்பது, நிலுவையில் உள்ள வாடகையை வசூலிப்பது, கனகசபையில் அனைவரும் நின்று தரிசனம் செய்வதற்கான சமவாய்ப்புகளை உறுதி செய்தல் போன்ற பணிகளையும் நிர்வாகக் குழு மேற்கொள்வது தொடர்பாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
அதேநேரம், 'கோவிலின் அன்றாட வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள் ஆகியவை காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள் மற்றும் வழக்கங்களுக்கு உட்பட்டு பொது தீட்சிதர்களின் அதிகாரத்துக்குள் இருக்கும்' எனவும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந்தது.
உயர் நீதிமன்றத்தில் உத்தரவு, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 26ன்படி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோவில் நிர்வாக உரிமையில் தலையிடுவதாகக் கூறி பொது தீட்சிதர்கள், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் உள்பட நான்கு பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு, புதன்கிழமையன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது ஏறி கடவுளை வழிபடுவது தொடர்பான சர்ச்சைகள் கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து தொடங்கின.
கடலூரை சேர்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி கனகசபையின் மீது ஏறி தேவாரம் பாட முயன்றதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறநிலையத்துறை ஆணையர் அனுமதியளித்தும் சர்ச்சைகள் நீடித்தன.
கடந்த 2022-ஆம் ஆண்டு கனகசபையில் ஏறி ஜெயசீலா என்ற பெண்மணி வழிபாடு நடத்த முயன்றார். அவரை வழிபாடு நடத்தவிடாமல் தீட்சிதர்கள் முற்றுகையிட்டனர். இதனைக் கண்டித்து காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சிவனடியார்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, 'கனகசபை மீது ஏறி வழிபாடு நடத்தலாம்' எனக் கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் அரசாணை ஒன்றை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டது.
இந்த அரசாணை தங்களுடைய பாரம்பரிய நிர்வாக உரிமையில் தலையிடுவதாகக் கூறி பொது தீட்சிதர்கள் எதிர்த்தனர். 'இது பக்தர்களின் வழிபாட்டு உரிமை. அதைத் தீட்சிதர்கள் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்த முடியாது' என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




