அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அனைவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில், டிரம்பின் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
பட மூலாதாரம், Tom Williams/CQ-Roll Call, Inc via Getty Images
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் 10-ஆவது நாடாளுமன்ற தொகுதியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சுஹாஸ் சுப்ரமணியம் மீண்டும் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சி வேட்பாளர் டேவ் பெக்வித்தை அவர் தோற்கடித்தார்.
இந்தத் தேர்தலில் சுஹாஸ் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். டேவ் பெக்வித் சுமார் 38 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
வாஷிங்டன் மாகாணத்தின் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மீண்டும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரமிளா ஜெயபால். இந்தத் தேர்தலில் அவர் 87 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
ஃபுளோரிடா மாகாணத்தின் 22-ஆவது நாடாளுமன்ற தொகுதியில் குடியரசுக் கட்சி வேட்பாளர் கேசி ஆஸ்கரை தோற்கடித்து, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பியா தண்டியா. இதன் மூலம் அவர் முதல் முறையாகப் பிரதிநிதிகள் சபைக்குள் நுழைகிறார்.
2026 இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் மேற்கொண்ட தொகுதி மறுவரையறையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட புதிய தொகுதியில் பியா தண்டியா வெற்றி பெற்றுள்ளார்.
ஹார்லெம் பகுதியில் ஆசிரியராகவும் உயர்நிலைப் பள்ளி முதல்வராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்திலும் வேலை செய்துள்ளார்.
இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பாம் பீச் கவுண்டியில் பிறந்து வளர்ந்த பியா தண்டியா, தனது தேர்தல் பிரசாரத்தில் கல்வி, விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தார்.
கலிஃபோர்னியா மாகாணத்தின் 17-ஆவது நாடாளுமன்ற தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரோ கன்னா அமோக வெற்றி பெற்றார். 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, பிரதிநிதிகள் சபையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து போட்டியிட்ட அமி பேரா, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கு எட்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வேட்பாளர்களும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
குடியரசுக் கட்சியின் விவேக் ராமசாமியைத் தோற்கடித்து, ஓஹியோ ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார். கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஓஹியோ ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகக் கட்சியினராகவும், இந்தப் பதவியைப் பெறும் முதல் பெண்ணாகவும் ஆக்டன் மாறுகிறார்.
ஓஹியோ, கடந்த மூன்று அதிபர் தேர்தல்களிலும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்புக்கு வாக்களித்துள்ளது.
மருத்துவரான ஏமி ஆக்டன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஓஹியோ மாகாண சுகாதாரத் துறை இயக்குநராகப் பணியாற்றினார்.
ராமசாமியின் பிரசாரக் குழு, ஆக்டன் மீதான மிகவும் தனிப்பட்ட தாக்குதல் விளம்பரத்தை வெளியிட்டதையடுத்து இந்த தேர்தல் எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது. ஆக்டனின் பிரிந்துவாழும் தாய் இந்த விளம்பரத்தில் இடம்பெற்று ஆக்டனுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
அந்த விளம்பரத்தில், ஆக்டனின் தாயார் டோனா ஆர்தர், தனது மகள் "வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லியிருக்கிறார்" என்று கூறினார்.
ஆனால், ஆக்டன் சிறுமியாக இருந்தபோது அவரைப் பாலியல் வல்லுறவு செய்ததாக ஆர்தரின் கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறித்து விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை.




