ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில், தனது குழந்தையை உடலோடு கட்டிக்கொண்டு ஒரு பெண் ஓடத் தொடங்கியது, பலரது கவனத்தை ஈர்த்தது.
குல்சூம் பானோ மாரத்தான் ஓடிய புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால், 34 வயதான அவர் மாரத்தானில் பங்கேற்க முடிவெடுத்ததற்குப் பின்னால் ஒரு கதையும், அவரது விடாமுயற்சியும் இருக்கின்றன.
அக்டோபர் 25-ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் இரண்டு பிரிவுகள் இடம்பெற்றன. 42.195 கிலோமீட்டர் தொலைவுக்கான முழு மாரத்தான் மற்றும் 21 கிலோமீட்டர் தொலைவுக்கான அரை மாரத்தான் ஆகியவை நடைபெற்றன.
இந்த மாரத்தான் போட்டியில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள போலோ மைதானத்தில் போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
குஜராத்தின் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த குல்சூம் பானோ, தற்போது ஸ்ரீநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 2012-ஆம் ஆண்டு பந்திபோரா மாவட்டத்தின் குரேஸ் பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் லோனைத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு முன்பு குல்சூம், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். ராணுவத்தில் சேர வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.
சிஆர்பிஎஃப் வீரரான இம்தியாஸ் லோன் தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக மூன்று குழந்தைகளையும் தனியாக வளர்த்து வருவதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகக் குல்சூம் கூறுகிறார்.
குல்சூமின் இளைய குழந்தைக்கு ஒரு வயது, மகளுக்கு இரண்டு வயது, மூத்த மகனுக்கு 12 வயது. குழந்தைகளை வளர்ப்பதில் தனது சொந்த ஆசைகளை இழந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
"என் கணவர் பணியில் இருந்ததால், எனது இரண்டு குழந்தைகளும் நான் தனியாக இருந்தபோது பிறந்தன. சில நேரங்களில் என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. எனக்கும் ஆசைகளும் கனவுகளும் இருந்தன. ஆனால், குழந்தைகளுக்காக அவற்றைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார்.
குல்சூம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு கிளப்பில் பகுதி நேர உடற்பயிற்சிப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். அவரது மூத்த மகன் அப்துல்லா இம்தியாஸ் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அதே கிளப்பில் ஸ்கேட்போர்டிங் பயிற்சி பெற்று வருகிறார்.
குல்சூம் தினமும் அதிகாலை மூன்று மணியளவில் எழுந்துவிடுவதாக கூறினார்.
''ஒரு குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும்போது, மற்றொரு குழந்தை விளையாடும் நேரமாக இருக்கும்; இன்னொரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தயாராகும். இவற்றுக்கு இடையில், எனக்காகச் சிறிது நேரம் கிடைக்கும். அந்த நேரத்தை எனக்காக வாழ்கிறேன்," என்று குல்சூம் கூறுகிறார்.
ஒரு துணை ராணுவ வீரரின் மனைவியின் வாழ்க்கை, போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்தது என்று குல்சூம் கூறுகிறார். மற்றவர்கள் வெளியில் தெரிவதை மட்டுமே பார்க்கிறார்கள்; ஒருவர் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
"வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என் கஷ்டங்கள் புரியாது. அவர்கள் போர்வீரர்கள் என்றால், நானும் ஒரு போர்வீரர்தான். உலகத்தையும், சமூகத்தையும், என்னையும் எதிர்த்துப் போராடுகிறேன். மனைவியாகவும், தாயாகவும், பெண்ணாகவும் எல்லாவற்றையும் தனியாகச் செய்வது கடினம். இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் மாரத்தானில் பங்கேற்க எனக்கு மிகுந்த துணிச்சல் தேவைப்பட்டது," என்று குல்சூம் கூறுகிறார்.
மாரத்தானில் பங்கேற்க முடிவு செய்தது குறித்து குல்சூம் கூறுகையில், "என் நண்பர் அப்துல்லா, பயிற்சியாளர் சஜ்ஜாத் ஆகியோரின் ஆலோசனையின்படி, போட்டிக்கு முந்தைய நாள் மாரத்தானில் பங்கேற்கப் பதிவு செய்தேன். இதை என் கணவரிடம் சொல்லவில்லை. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பினேன். என் புகைப்படங்களும் வீடியோக்களும் அவரைச் சென்றடையும் என நம்பினேன்," என்று குல்சூம் கூறினார்.
குல்சூமின் பயிற்சியாளர் சஜ்ஜாத் அகமது கான் ஒரு கிளப்பை நடத்தி வருகிறார்.
தனது மகன் ஸ்கேட்போர்டிங் பயிற்சிக்கு வந்தபோது அவர் குல்சூமைச் சந்தித்ததாக கூறுகிறார்.
"எங்கள் கிளப்பில் நிகழ்ச்சிகள் நடக்கும்போதெல்லாம், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேறு யாரும் இல்லாததால், குல்சூம் தனது குழந்தையையும் அழைத்து வருவார். அவருடைய திறமையை நான் அறிந்துகொண்டதால் , அவர் மாரத்தானில் பங்கேற்க வேண்டும் என்று நினைத்தேன்," என்கிறார் பயிற்சியாளர் சஜ்ஜாத் அகமது கான்.
ஆனால், போட்டி நடந்த அன்று காலை, தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மாரத்தானில் பங்கேற்பது கடினம் என்று குல்சூம் அவரிடம் கூறினார்.
"என்னால் மாரத்தானை முடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால், அப்துல்லா தனது தங்கையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறினார். மாரத்தானைவிட நீங்கள் எனக்கு முக்கியம் என்றும் அவர் சொன்னார்," என்கிறார் குல்சூம்.




