அமெரிக்க அரசியலில் கடந்த பத்தாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி, அதனை வியத்தகு வகையில் மாற்றியமைத்துள்ள டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவிக்காலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில், முக்கியமான தேர்தலை அவர் எதிர்கொள்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின்(காங்கிரஸின்) கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு மிகவும் சவாலான தருணத்தில் வந்துள்ளது.

வாழ்க்கைச் செலவினம்தான் தங்களின் மிகப்பெரிய கவலை என்று பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். அதிபரின் இறக்குமதி வரிகளாலும், மக்களிடையே செல்வாக்கிழந்துள்ள இரான் மீதான போராலும் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எனவே, வாக்களிக்கச் செல்லும் பலரின் மனதில் இந்தப் பிரச்னையே முதன்மையாக இருக்கும்.

கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த ஆதரவு மதிப்பீடுகளை பெற்றுள்ள டிரம்ப், நாடு முழுவதும் பல டஜன் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்திருக்கிறார்.

ஆனால், அனைத்துத் தரப்பு வாக்காளர்களையும் பாதிக்கும் பிரச்னையாக விலைவாசி உயர்வு இருப்பதால், குடியரசுக் கட்சிக்கு ஏற்கனவே சாதகமானதாகக் கருதப்பட்ட பகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்து வருகிறார். இறுதிக்கட்டப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, வார இறுதியில் அயோவா மற்றும் கன்சாஸ் மாகாணங்களுக்குச் சென்றார்.

கன்சாஸ் மாகாண செனட் தேர்தல் போன்ற பாரம்பரியமாகக் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான தொகுதிகளில், அக்கட்சி தேர்தல் விளம்பரங்களுக்காகப் பல நூறு மில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது.

"தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஒரு மாகாணத்தில் அரசியல் விளம்பரங்களுக்காக அதிக அளவில் பணம் செலவிடத் தொடங்கினால், அங்கே தங்களுக்குச் சிக்கல் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்," என்று தேர்தல்களையும் பிரசாரங்களையும் ஆய்வு செய்யும் குக் பொலிட்டிக்கல் ரிப்போர்ட்டின் நிர்வாக ஆசிரியர் கேரி டான் பிபிசியிடம் தெரிவித்தார்.

"கன்சாஸில் செலவிடப்படும் தொகை, குடியரசுக் கட்சியினர் முன்பு எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக இருக்கும்," என்றும் அவர் கூறினார். இந்தத் தேர்தலை தற்காப்பு நிலையில் இருந்தே குடியரசுக் கட்சி எதிர்கொள்கிறது என்பதை இது காட்டுகிறது.

பல பிரசாரக் கூட்டங்களில் டிரம்ப் வாக்காளர்களிடம் ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். "இந்தத் தேர்தலில், தயவுசெய்து நானே தேர்தலில் போட்டியிடுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அப்படியே கற்பனை செய்துகொள்ளுங்கள்," என்று கடந்த மாதம் அவர் கூறினார்.

நிச்சயமாக, அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அயோவாவிலும் அவர் மீண்டும் முன்வைத்த இந்தக் கோரிக்கை, ஒரு முக்கியமான கேள்வியின் மையத்தைத் தொடுகிறது: குடியரசுக் கட்சிக்கு டிரம்ப் இன்னும் தேர்தல் வெற்றியைத் தேடித்தரும் பலமாக இருக்கிறாரா?

2024 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய டிரம்ப், அப்போது வலுவான அரசியல் சக்தியாகத் திகழ்ந்தார். அவரது மக்கள் செல்வாக்கு குறித்த மதிப்பீடுகளும் உயர்வாக இருந்தன. அதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய இடைக்காலத் தேர்தலின்போது, வெற்றிபெற அவரது ஆதரவு மிகவும் அவசியம் என்று கருதிய குடியரசுக் கட்சியினர் அவரின் ஆதரவைப் பெறப் போட்டியிட்டனர்.

ஆனால், இரான் மீதான போர் நீடித்து வருவதுடன், அது அமெரிக்கர்களின் பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது. இதனால் டிரம்புக்கான ஆதரவு மதிப்பீடுகள் சரிந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி மாதத்தில் ஒரு கேலன் டீசலின் விலை 3.75 டாலராக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் அது இதுவரை இல்லாத அளவுக்கு 6.52 டாலராக உயர்ந்தது.

"எனது மகனை நாடு முழுவதும் காரில் பயணம் செய்ய வைத்தேன். ஒவ்வொரு மாகாணத்திலும் எரிபொருள் விலை என்னவென்று அவர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். 'கடவுளே, இது எவ்வளவு மோசமாக இருக்கிறது' என்று நான் நினைத்தேன்," என்று அயோவாவைச் சேர்ந்த ஒரு வாக்காளர் தெரிவித்தார்.

டிரம்ப் பதவியேற்றபோது 3 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகள் மீது அவர் பரவலாக விதித்துள்ள இறக்குமதி வரிகள் இல்லாவிட்டால் பணவீக்கம் இதைவிடக் குறைவாக இருந்திருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

டெக்சாஸ், ஓஹாயோ, கன்சாஸ் போன்ற குடியரசுக் கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த மாகாணங்களிலும் இந்தப் பொருளாதாரச் சூழல் தங்களுக்குப் பாதகமாக அமையக்கூடும் என்று அக்கட்சியினர் கவலைப்படுகின்றனர்.

"தெற்கு மாகாணங்கள், மத்திய மேற்கு மாகாணங்கள், அமெரிக்காவின் மையப்பகுதிகள் ஆகியவை பொதுவாகக் குடியரசுக் கட்சிக்கு ஆதரவானவை," என்று கருத்துக் கணிப்பு நிறுவனமான மோர் இன் காமனின் உலகளாவிய ஆய்வுப் பிரிவு இயக்குநர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறினார்.

"ஆனால், தற்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் செனட் தேர்தல்கள் இந்தப் பகுதிகளில்தான் நடைபெறுகின்றன."

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் டிரம்ப் 10, 12, 15 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மாகாணங்களில்கூட, இப்போது ஜனநாயகக் கட்சியினர் செனட் இடத்தைக் கைப்பற்றுவதற்கான நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ளனர்," என்றும் அவர் தெரிவித்தார்.

டிரம்ப் 2024 இல் வெற்றி பெற்ற மாகாணமும், தற்போது எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுமான அயோவா மாகாண வாக்காளர்களிடம், 'குடியரசுக் கட்சியினரை ஆதரிப்பதற்கு அதிபர் ஒரு சாதகமான காரணியாக இருப்பாரா அல்லது பாதகமான காரணியாக இருப்பாரா?' என்று நான் கேட்டபோது, அவர்கள் அளித்த பதில் பல உண்மைகளை வெளிப்படுத்துவதாக இருந்தது.

"ஒரு பரபரப்பான கல்லூரி கால்பந்து போட்டிக்கு வெளியே பால் ரோஸ் என்னிடம், 'தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால், நம்பினாலும் நம்பாவிட்டாலும், மக்கள் குடியரசுக் கட்சியினரை ஆதரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்' என்று கூறினார். 'நானும் ஒரு குடியரசுக் கட்சிக்காரன் என்ற முறையில், இது பாதகமாக அமையக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.'