சென்னை மாநகராட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டங்கள் குறித்து தனக்கும் கவுன்சிலர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்று மேயர் பிரியா குற்றம் சாட்டியுள்ள நிலையில், தவெக அரசு திட்டமிட்டு மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிப்பதாக திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் தவெக அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பாக மேயர் பிரியா பேசியிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் தவெக செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார், சென்னை மாநகராட்சிப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அண்மையில் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடத்திய ஆய்வுக் கூட்டத்திற்குத் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதே மேயர் பிரியாவின் முக்கியக் குற்றச்சாட்டு.

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டங்கள் குறித்து தனக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றார்.

"முதலமைச்சர் எப்போது வருகிறார் என்ற நேரத்தைச் சொன்னால் என்னால் வர முடியும். ஆனால், அந்தத் தகவலே எனக்குத் தெரிவிக்கப்படுவதில்லை" என்று அவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் கூட்டம் நடத்துவது குறித்த தகவல்கள்கூட தனக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், கவுன்சிலர்களுக்கும் இதே நிலைதான் இருப்பதாகவும் அவர் கூறினார். அதிகாரிகளுக்கு அரசுத் தரப்பில் ஏதேனும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாத நிலையில், இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களே பதவிக்காலம் இருக்கும், அவர்கள் எதற்காகத் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும்? மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மரியாதை இல்லாதபோது, எதற்காகப் பதவியில் இருக்க வேண்டும்? மாமன்றத்தைக் கலைத்துவிடுமாறு அரசிடம் சொல்லிவிடுங்கள்" எனப் பேசினார்.

தனது பகுதியில் அடிப்படைப் பணிகளான சாலைப் பராமரிப்பு, மழைநீர் தேங்கும் இடங்களில் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளைக்கூட மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு மேயர் பிரியா அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது இது முதல் முறையல்ல.

முந்தைய திமுக ஆட்சியின்போது சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்காக சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட ஒப்பந்தங்களைத் தவெக அரசு ரத்து செய்ததற்கு அவர் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதனால் மாநகராட்சிப் பணிகள் முடங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

சென்னை மாநகராட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் விளக்கேற்றும் நிகழ்வில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, தனக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற எழுப்பிய புகாரும் விவாதப் பொளாருளானது.

விளக்கேற்றுவதற்கான மெழுகுவர்த்தி தனக்கு வழங்கப்படவில்லை என்று பல்லவி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய பிரியா நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் அவர் வந்ததாகவும், அதனால் இந்தப் புகார் எழுந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

தவெக அரசு திட்டமிட்டே திமுக கவுன்சிலர்களுக்கும் மேயர், துணை மேயருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிப்பதாக சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கூறுகிறார்.

"சென்னை மாநகராட்சியில் நடைபெறும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், வேண்டுமென்றே எங்களைத் தவிர்க்கிறார்கள். முதலமைச்சர் ரிப்பன் மாளிகைக்கு வருவது குறித்துக்கூட எங்களுக்குத் தகவல் தெரிவிப்பதில்லை. அதே நேரத்தில், நாங்கள் முதலமைச்சரைப் புறக்கணிப்பதாகப் பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள்" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறும்போது அவரை வரவேற்பதும், கூட்டங்களில் பங்கேற்பதும் தங்களது வழக்கமான நடைமுறை என்றும் அவர் கூறினார்.

தவெக அரசுடன் ஒத்துழைக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறிய மகேஷ்குமார், அதற்கு அண்மையில் நடைபெற்ற பருவமழை முன்னெச்சரிக்கைக் கூட்டத்தையே உதாரணமாகக் குறிப்பிட்டார்.

சென்னையைச் சேர்ந்த அமைச்சர்களுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நடத்திய அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் அழைக்கப்பட்டதாகவும், அதில் பங்கேற்று மழைநீர் தேங்கும் பகுதிகள், தாழ்வான இடங்கள் குறித்த விவரங்களையும், முந்தைய திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார்.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாங்கள். மழைநீர் தேங்கினால் மக்களிடம் பதில் சொல்ல வேண்டியவர்கள் நாங்கள்தான். எனவே, அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

சென்னை மாநகராட்சி மண்டலம் 10க்கு உட்பட்ட சைதாப்பேட்டையில் அண்மையில் அம்மா பூங்கா திறக்கப்பட்டபோதும் உள்ளூர் கவுன்சிலருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் புகார் கூறினார்.