நான்கு மாநிலங்களில் நடந்த 28 சட்ட மேலவை தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை சமூக ஊடகமான எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்துள்ளார்.
நரேந்திர மோதி தனது பதிவில், "தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
புதன்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோதி இந்தப் பதிவை வெளியிட்டபோது, சட்ட மேலவைத் தேர்தலில் காங்கிரஸ் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற்றிருக்கவில்லை. ஆனால், பின்னர் மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
உத்தர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பிகார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 28 இடங்களில் 16 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் வாரணாசியும் அடங்கும். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள ஐந்து இடங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி இரண்டு இடங்களையும், இந்தியா கூட்டணி மூன்று இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த முறை நாக்பூர் தொகுதியை பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. நாக்பூரில்தான் ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ளது.
இருப்பினும், கர்நாடகாவில் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு நான்கு தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சட்ட மேலவை தேர்தல்கள் வாக்குச் சீட்டுகள் மூலமாக நடத்தப்பட்டன. வாக்குச் சீட்டு முறையில் பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டுமென காங்கிரஸும் அதன் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை குறித்து விவாதங்கள் எழுந்துள்ளதுடன், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பிரதமர் மோதியின் எக்ஸ் தளப் பதிவு காங்கிரஸுக்கு எதிரான நேரடித் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதன்கிழமை இரவு சுமார் ஒன்பது மணிக்கு வெளியிட்ட பதிவில், "28 இடங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது? பூஜ்ஜியம் (0)" என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், ஒருவர் கையில் பதாகை வைத்திருப்பது போன்ற படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். அந்தப் பதாகையில், "வாக்குப்பெட்டியே பதவி விலகு" என்று எழுதப்பட்டிருந்தது.
பாஜகவின் முன்னாள் தலைவரான ஜே.பி. நட்டா, "வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டுமெனக் கேட்டவர்களுக்கு, வாக்குச்சீட்டே பதில் அளித்துவிட்டது" என்று பதிவிட்டார்.
தற்போதைய பாஜக தலைவர் நிதின் நபீன், "பிரச்னை ஒருபோதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இருந்ததில்லை. மக்கள் காங்கிரஸை நிராகரிப்பதில்தான் பிரச்னை இருக்கிறது. ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் ஒரு புதிய காரணத்தை அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், எந்தப் பிரசாரத்தாலும் மக்களின் தீர்ப்பை மாற்ற முடியாது" என்று குறிப்பிட்டார்.
பிரதமரின் பதிவைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் 'பூஜ்ஜியத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள்' என்று கிண்டலாக பதிவுகள் வெளியிடப்பட்டன. எனினும், பாஜகவின் கேலிக்கும் விமர்சனங்களுக்கும் காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "தேர்தல் முடிவுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நரேந்திர மோதி நம்பினால், வெறும் வார்த்தைகளால் அல்லாமல் செயல்பாட்டின் மூலம் பாஜகவின் தேர்தல் பலத்தை அவர் நிரூபிக்க வேண்டும். இனி நடைபெறவுள்ள அனைத்து மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களும் வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்தப்படும் என்று அவர் உறுதியளிக்க வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை ரத்து செய்து, அதில் நீக்கப்பட்ட 13.3 கோடி வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்" எனக் கூறினார்.
"ஞானேஷ் குமாரை பதவி விலகச் செய்ய வேண்டும். அவருக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்கும் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். இதைச் செய்யாதவரை, மோதியின் வார்த்தைகளை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் வெளியிட்ட அறிக்கையில், "வாரணாசி பிரதமர் நரேந்திர மோதியின் மக்களவைத் தொகுதி. பாட்னா பாஜக தலைவர் நிதின் நபீனின் சொந்தத் தொகுதி. நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள இடம். அதேபோல, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் கோட்டையாகவும் நாக்பூர் உள்ளது.
"வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றபோது, பாஜகவின் கோட்டைகள் அனைத்தும் தகர்ந்துவிட்டன. அவர்களின் ஆணவப் பேச்சுகள் அனைத்தும் அடங்கிவிட்டன" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறோம். வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்திப் பாருங்கள். இப்போது சில கோட்டைகளில் தோல்வியடைந்துள்ளீர்கள். நாட்டில் உங்களுக்கான அரசியல் முடிவு இன்னும் காத்திருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் பதிவைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் விவாதம் எழுந்தது.
பிரதமரின் பதிவுக்குப் பதிலளித்த உள்ளடக்கப் படைப்பாளரான துருவ் ரத்தி, "போலி வாக்காளர் பட்டியலில்தான் முறைகேடு நடைபெறுகிறது. அந்த முறைகேடுகள் நடந்தபோதிலும், உங்கள் சொந்தத் தொகுதியான வாரணாசியில்கூட நீங்கள் தோல்வியடைந்துள்ளீர்கள்" என்று பதிவிட்டார்.
மேலும், "இதை வாக்குச்சீட்டு முறைக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் இடையிலான பிரச்னையாக மாற்றி, மக்களை முட்டாளாக்க முயல்கிறீர்கள். இது ஒரு நல்ல அரசியல் முழக்கம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோதி வாரணாசி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அந்தத் தொகுதியை உள்ளடக்கிய பகுதியில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது.
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், "காங்கிரஸ் நாக்பூர் பட்டதாரி சட்ட மேலவைத் தொகுதியைக் கைப்பற்றியுள்ளது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஐந்து இடங்களில் மூன்று இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது ஒரு முக்கியமான வெற்றி. ஏனெனில், நாக்பூர் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸின் கோட்டையாகும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதே தொகுதியிலிருந்து 24 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராக இருந்துள்ளார்" என்று பதிவிட்டார்.




