தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், சமூக ஊடகங்களில் 'குறைந்த விலையில் சிவகாசி பட்டாசுகள், வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யுங்கள்' என்ற வகையிலான விளம்பர 'ரீல்' காணொளிகளை அதிகம் பார்க்க முடிகிறது.

அதிலும், '90% தள்ளுபடியில் தீபாவளி கிஃப்ட் பாக்ஸ்', '10 ரூபாயிலிருந்து சிவகாசி பட்டாசுகள்' போன்ற விளம்பரக் காணொளிகள் பிரபல இன்ப்ளுயன்ஸர்கள் பலராலும் பகிரப்படுகின்றன.

மறுபுறம், 'பட்டாசுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, பணம் செலுத்தியும் இன்னும் பட்டாசுகள் வரவில்லை' அல்லது 'மோசமான தரமுடைய பட்டாசுகள் அனுப்பப்பட்டுள்ளன' என சில புகார் பதிவுகளையும் பார்க்க முடிகிறது.

"ஆன்லைனில் பட்டாசுகளை ஆர்டர் செய்வதிலும், போலியான பட்டாசு விற்பனை விளம்பரங்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள்" என தமிழக காவல்துறையும் கடந்த சில நாட்களாகப் பல்வேறு சமூக ஊடகப் பதிவுகளில் எச்சரித்து வருகிறது.

கடந்த 2024இல், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாகக் கூறப்பட்டதை நம்பிப் பணம் செலுத்தியதில், மோசடி நடந்ததாக 17 வழக்குகள் பதிவாகின. கடந்த வருடமும், இது தொடர்பாக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வருடம், ஆன்லைன் பட்டாசு மோசடி தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல்துறை 13 வழக்குகளைப் பதிவு செய்திருப்பதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

'ஆன்லைன் பட்டாசுகள்' தொடர்பான மோசடிகள் நடப்பது எப்படி? இது தொடர்பாக பட்டாசு விற்பனையாளர்கள் கூறுவது என்ன?

தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள விழிப்புணர்வுக் காணொளியில் இத்தகைய மோசடிகள் எப்படி நடக்கின்றன என விளக்கப்பட்டுள்ளது.

"மக்கள் சமூக ஊடகங்களில் குறைந்த விலையில் பட்டாசுகள் என்ற விளம்பரத்தைப் பார்த்து, 'வாட்ஸ் ஆப்' மூலம் விற்பனையாளர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். விற்பனையாளர்கள் பட்டாசு விவரங்களையும் குறைந்த விலைகளையும் காட்டி ஈர்த்து, ஆர்டரை உறுதி செய்ய முன்பணம் கேட்பார்கள்".

"விளம்பரத்தை நம்பி, அவர் கேட்ட தொகையை மக்கள் ஆன்லைனில் செலுத்துகிறார்கள். பின்னர் வெவ்வேறு பெயர்களில் சில கட்டணங்கள் கோரப்படுகின்றன. அவற்றைச் செலுத்திய பின்பும் பட்டாசுகள் வீட்டிற்கு வருவதில்லை, அதன் பின்னர் விற்பனையாளர்களும் பதிலளிப்பதில்லை," என காவல்துறை தெரிவிக்கிறது.

'சமூக ஊடகங்களில் வரும் மலிவு விலை பட்டாசு விளம்பரங்களை நம்பி முன்பணம் செலுத்தாதீர்கள். ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால், உடனே 1930 என்ற எண்ணில் அல்லது சைபர் க்ரைம் இணையதளத்தில் புகாரளிக்கவும்' என்றும் காவல்துறை அறிவுறுத்துகிறது.

அதேபோல, "இத்தகைய ஆன்லைன் விற்பனையாளர்களுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை அளிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றும் காவல்துறை கூறுகிறது.

உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு, அர்ஜுன் கோபால் vs இந்திய யூனியன் என்ற வழக்கில், "ஃப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட எந்தவொரு இணைய வணிக நிறுவனமும் பட்டாசுகள் தொடர்பான இணையவழி ஆர்டர்களை பெறவோ, இணையவழியில் விற்பனை செய்யவோ கூடாது. இணையவழியில் பட்டாசுகளை விற்பனை செய்யும் இணைய வணிக நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும்" எனக் குறிப்பிட்டது.

'உரிமம் பெற்ற வணிகர்கள் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்' என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

"உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை மீறியே பலர் ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்கிறார்கள். இதனால், சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் உள்பட நேரடியாக பட்டாசு விற்பனை செய்யும் பல வியாபாரிகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது" என்கிறார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்ஃபாமா) தலைவர் கணேசன் பஞ்சுராஜன்.

"ஆன்லைன் விற்பனை என்பதால் இவர்களில் பெரும்பாலானவர்களிடம் முறையான உரிமம் இருப்பதில்லை. முறையான வேதியியல் கலவையுடன் தயாரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளைத்தான் இவர்கள் விற்பனை செய்கிறார்களா என்பதையும் உறுதி செய்ய முடியாது" என்கிறார் அவர்.

தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) அறிக்கைப்படி, 'இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் சிவகாசி ஏறக்குறைய 90% பங்களிக்கிறது. இங்குள்ள 1,070க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற உற்பத்தி அமைப்புகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 7,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. நேரடியாக சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், பட்டாசு மற்றும் அது சார்ந்த தொழில்கள் மூலம் கிட்டத்தட்ட 5 லட்சம் குடும்பங்களுக்கு இவை ஆதரவளிக்கின்றன.'

"கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தான் இத்தகைய ஆன்லைன் விற்பனையாளர்களின் பிரதான உத்தி. பண மோசடி ஒருபுறம் என்றால், தரமற்ற பட்டாசுகளை குழந்தைகள் கையாளும்போது அவை எதிர்பாராமல் வெடிக்கும் அபாயம், அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் குழந்தைகளின் உடல்நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன," என்கிறார் கணேசன் பஞ்சுராஜன்.

"ஒழுங்குப்படுத்தப்படாத ஆன்லைன் பட்டாசு விற்பனைகளால் எங்களுக்கு விற்பனையில் 30% வரை சரிவு ஏற்படுகிறது" என்கிறார் சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர் சங்கத்தின் செயல் தலைவர் ஷேக் அப்துல்லா.

"ஆன்லைனில் 85% அல்லது 90% தள்ளுபடி என விளம்பரம் செய்கிறார்கள். அதை ஆர்டர் செய்துவிட்டு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். வீட்டிற்கு பார்சல் வந்த பிறகு பிரித்துப் பார்த்தால்தான் அது தரமானவையா அல்லது மோசமானவையா என்பது தெரிய வரும். சில ஆன்லைன் விற்பனையாளர்கள் டெலிவரிக்கும் குறிப்பிட்ட தொகையை வசூலிக்கிறார்கள்," என்கிறார் ஷேக் அப்துல்லா.

மேலும் அவர், "இவையெல்லாம் புகார்களாக பதிவாகாது. சரி வாங்கிவிட்டோமே வேறு என்ன செய்வது என்றுதான் மக்கள் கடந்து செல்வார்கள். இதைத் தாண்டி பணம் செலுத்திவிட்டு, பட்டாசுகள் வீட்டிற்கே வரவில்லை எனும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்படுகிறது." என்கிறார்.