ஆந்திர பிரதேசத்தின் தொலைதூர பழங்குடிக் கிராமம் ஒன்றில் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 41 குழந்தைகளுக்கான ஒரே ஆசிரியராக உள்ளார். ஆனால் அவரது பொறுப்புகள் கற்பித்தலுடன் மட்டுமே நின்றுவிடவில்லை.

"பள்ளிப் பராமரிப்பு, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மதிய உணவுத் திட்ட மேலாண்மை போன்ற நிர்வாகப் பணிகளையும் நான் கவனிக்கிறேன். மாணவர்களுக்கு கற்பிக்கப் போதுமான நேரமே கிடைப்பதில்லை. குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்கும் விஷயத்தில் முழுமையாக நியாயம் செய்ய முடியாமல் உள்ளது" என்று ரமேஷ் பிபிசி தெலுங்குவிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகத் தனது பெயரை வெளியிட வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டதால் இந்தக் கட்டுரையில் அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.

சரியாகக் கற்பிக்க முடியாத காரணத்தால் ஏற்படும் ஏமாற்ற உணர்வும், அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கான அச்சமும், இந்தியாவின் ஓராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்களிடையே பொதுவாகக் காணப்பட்டது.

கல்வி அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் பிளஸ் அமைப்பு (UDISE+) 2025-26 அறிக்கையின்படி, நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

மாநிலங்களிலேயே, 16,000-க்கும் அதிகமான ஓராசிரியர் பள்ளிகளுடன் ஆந்திர பிரதேசம் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

UDISE+ தரவுகள், 2022-23 முதல் இந்தியாவில் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதைக் காட்டுகின்றன. இந்தக் காலகட்டத்தில் அவற்றின் எண்ணிக்கை 1.18 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் இருந்து சுமார் 1.01 லட்சமாகக் குறைந்துள்ளது.

ஆனால், இதை முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதுவதில் நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

"இந்தக் குறையும் போக்கு, பள்ளிகள் மேம்பட்ட வசதிகளுடனும் போதுமான ஆசிரியர்களுடனும் தரம் உயர்த்தப்பட்டு இருப்பதைக் காட்டாது. முக்கியமாக, அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படுவதாலோ அல்லது மூடப்படுவதாலோ இந்த நிலை ஏற்பட்டுள்ளது," என்று இந்தியாவின் கல்வி உரிமையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் குடிமை அமைப்புகள் மற்றும் அடித்தள அமைப்புகளின் கூட்டமைப்பான கல்வி உரிமை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மித்ரா ரஞ்சன் கூறுகிறார்.

தான் கற்பிக்கும் ஐந்து வகுப்புகளுக்கும் தினமும் தலா நான்கு பாடவேளைகள் இருக்க வேண்டும் என்று ரமேஷ் கூறுகிறார். "அதாவது, ஒரு நாளில் சுமார் 20 பாடவேளைகள் இருக்க வேண்டும். ஆனால் மொத்தமாக ஐந்து அல்லது ஆறு பாடவேளைகளுக்கு மேல் எங்களால் நடத்த முடியவில்லை."

இருப்பினும், பாடவேளைகள் குறைவாக இருப்பது பணிச்சுமை குறைவாக இருப்பதைக் குறிக்காது. நிர்வாகப் பணிகள் தொடர்ந்து இருப்பதால், ரமேஷ் போன்ற ஆசிரியர்கள் எப்போதும் பணியில் மூழ்கியிருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஜார்க்கண்டின் லாதேஹார் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியரான ஷ்யாம்தேவ் ஓராவோனும் இதேபோன்ற சூழ்நிலையை விவரிக்கிறார். லாதேஹாரில் உள்ள ஒரு பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 111 மாணவர்களுக்கு அவர்தான் ஒரே ஆசிரியர்.

"பள்ளியை நிர்வகித்தும் பாடம் நடத்தியும் கொண்டிருக்கும் ஒரே ஆசிரியராக இருப்பதால், எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் விடுப்பு எடுக்க முடியாது. பல மாணவர்கள் என்னைச் சார்ந்து இருக்கிறார்கள். நான் நோய்வாய்ப்பட்டாலும், எப்படி விடுப்பு எடுக்க முடியும்?" என்று ஷ்யாம்தேவ் பிபிசி ஹிந்திக்கு தெரிவித்தார்.

இந்தியாவில் ஓராசிரியர் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில், ஆந்திர பிரதேசத்திற்கு அடுத்ததாக ஜார்க்கண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் 4.4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கல்வி கற்கின்றனர். UDISE+ அறிக்கைப்படி, ஜார்க்கண்டில் இத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானின் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் இதேபோன்ற இக்கட்டான நிலையை விவரிக்கிறார்.

"பல ஆண்டுகளாக நான் தனியாகவே பள்ளியை நடத்தி வருகிறேன். நிர்வாகப் பணிகளையும், சில நேரங்களில் தேர்தல் தொடர்பான பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இது தவிர்க்க முடியாமல் கற்பித்தல் மற்றும் கல்வியின் தரத்தைப் பாதிக்கிறது," என்கிறார் அவர்.

UDISE+ அறிக்கையின்படி, ராஜஸ்தானில் உள்ள 7,200 ஓராசிரியர் பள்ளிகளில் 1.7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியரும் தனிமை குறித்துப் புகார் தெரிவித்தார். "தொலைதூர பகுதிகளில், ஒரு கோப்பைத் தேநீரைக் கூட யாருடனாவது பகிர்ந்து குடிக்க ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம். ஒரே ஆசிரியராக இருக்கும் பள்ளியில் வேலை செய்வதைவிட எங்களுக்குப் பெரிய தண்டனை எதுவும் இல்லை," என்று அந்த ஆசிரியர் கூறினார்.

பிபிசியிடம் பேசிய ஆந்திர பிரதேச பள்ளிக் கல்வி ஆணையர் தமீம் அன்சாரியா, ஓராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகுந்த பணிச்சுமையை எதிர்கொள்வதை ஒப்புக்கொண்டார்.

"ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து கிடைக்கும் பின்னூட்டங்கள் மூலம், நாங்கள் கல்விசாராத பணிச்சுமை ஆசிரியர்களுக்கு எவ்வளவு சுமையாக உள்ளது என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.