''ஊருக்குள் நடக்கும் எந்த திருமணத்துக்கும், இறுதிச் சடங்குக்கும் நாங்கள் போவதில்லை. எங்களை யாரும் இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நாங்கள் ஒதுங்கி எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவருகிறோம். ஆனால் பலரும் சேர்ந்து வாழும் ஒரு கூட்டுக்குடும்பத்துக்கு குடிநீரும் கூட முறையாகக் கிடைக்காமல் செய்வதுதான் எங்களை பெரும் வேதனைக்குள்ளாக்குகிறது.''

பிபிசியிடம் இப்படி தன் வேதனையைப் பகிர்ந்தார் ஊத்தங்கரை அருகேயுள்ள காரப்பட்டு வண்ணாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திவ்யா.

இவர் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்தவர். இதனால் இரு சமுதாயத்தினரும் சேர்ந்து இந்த தம்பதியினரையும், அவர்கள் குடும்பத்தினரையும் ஊரிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். தங்களுக்கு குடிநீரை கிடைக்கவிடாமல் தடுத்து வருகின்றனர் என்பதுதான் இந்த தம்பதியரின் குற்றச்சாட்டு.

எதிர்தரப்பினர் இதுபற்றிப் பேச விரும்பவில்லை என்றும், ஊரைப்பற்றி லட்சுமணன் குடும்பத்தினர் தவறான தகவலைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் அதிகாரிகள், தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால்தான், வீட்டிற்குள் உள்ள குழாய்களில் தண்ணீர் தரமுடியவில்லை என்றும், இதில் எந்தவொரு சமுதாயப்பிரச்னையும் இல்லையென்றும் பிபிசியிடம் பதிலளித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் மணல் அள்ளும் வாகன ஓட்டுநராக இருக்கும் லட்சுமணனுக்கு சொந்த ஊர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள காரப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பள்ளி கிராமம். இவருடைய மனைவி திவ்யா.

லட்சுமணன் பிபிசியிடம் பகிர்ந்த தகவலின்படி, அவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். திவ்யா பி.காம் படித்துள்ளார். தங்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்த லட்சுமணனும், திவ்யாவும் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு, ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் அடைக்கலமாகியுள்ளனர். இரு குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதும், இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் காவல் நிலையத்தில் திரண்டனர்.

அப்போது நடந்தது பற்றி பிபிசியிடம் விளக்கிய லட்சுமணன், ''திவ்யா தரப்பினர், எங்களை ஊருக்குள்ளேயே வரக்கூடாது என்று காவல் நிலையத்திலேயே மிரட்டினர். எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போதே, நாங்கள் அங்கிருந்து கிளம்பி பஸ் ஏறி கேரளத்துக்குச் சென்று விட்டோம். ஒரு வாரத்துக்குள் வரவேண்டுமென்று அவகாசம் கொடுத்து எங்களைத் தேடினர். கேரளத்தில் எங்களைத் தேடிவந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றினர். அதன்பின் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 60 குடும்பங்களையும் ஊரிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டனர்.'' என்றார்.

சில மாதங்கள் கழித்து, 2 சமுதாயத்தினரும் ஒன்று சேர்ந்து, தங்கள் குடும்பத்தை மட்டும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும், திவ்யாவின் தாயார் ஊரை விட்டே வெளியேறி விட்டதாகவும் கூறிய லட்சுமணன் தனது அண்ணன் மனைவியின் வளைகாப்புக்கு ஊருக்குச் சென்ற போது எதிர்கொண்ட அனுபவமாக சில விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

''சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பின்பு 10 நாளில் எனது அண்ணி இறந்துவிட்டார். அவருடைய உடலை வீட்டிற்குக் கொண்டுவரவிடாமல் தடுத்ததால் நேரடியாக மயானத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. அண்ணியின் மரணத்தில் 2 வீட்டார் மட்டுமே இருந்தோம். ஊர்க் கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமல் சிலர் மட்டும் வந்தனர். அதன்பின் என் மனைவி கர்ப்பிணியாக இருந்ததால் கேரளத்தில் உதவிக்கு யாருமில்லை என்று பிரசவத்துக்கு ஊருக்கு அழைத்து வந்தேன்.'' என்றார் லட்சுமணன்.

இருவரும் ஊருக்குள் வந்தால் பிரச்னை ஏற்படுமென்று கருதி, ஊத்தங்கரையில் வாடகை வீடு எடுத்துக் குடியிருந்துள்ளனர். இருவரின் குடும்பத்தினரும் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். அப்போது இவர்களைப் பார்க்க வந்த உறவினர்கள் சிலரையும் ஊரிலிருந்து தள்ளி வைத்ததாக திவ்யாவும், லட்சுமணனும் குற்றம்சாட்டினர். அதற்குப் பின்பு சொந்த ஊருக்குள்ளேயே வாழ முடிவு செய்து ஊருக்குள் குடியேறியதாக அவர்கள் கூறினர்.

ஊரில் சொந்த வீடு கட்டி, தன்னுடைய குடும்பத்தினருடன் பெற்றோர், அண்ணன், தம்பி குடும்பத்தினர் என அனைவருடனும் அங்கே குடியேறியுள்ளார் லட்சுமணன். அதற்குப் பின்பு தங்களை மற்றவர்கள் நிலத்தின் வழியாக நடக்கவே கூடாது என்கிற அளவுக்கு ஊருக்குள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக இருவரும் தகவல் பகிர்ந்தனர்.

''கடந்த பொங்கலின் போது ஊர்ப் பண்டிகையிலிருந்து எங்களை ஒதுக்கிவிட்டனர். ஊர் வரி எங்களிடம் வாங்கவில்லை. அதன்பின்பே இதுபற்றி நானும் என் மனைவியும் குழந்தையுடன் சென்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். ஊடகங்களில் பேசினோம். அந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் வந்து ஊர்க்காரர்களிடம் சமாதானம் பேசினர். ஊரை விட்டு யாரையும் தள்ளி வைக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறிச் சென்றனர்.'' என்றார் லட்சுமணன்.

வண்ணாம்பள்ளி கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுதோறும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு லட்சுமணன் வீட்டிற்கு வழங்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்புக்கு தண்ணீர் வருவதைத் தடுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபற்றி முதல்வரின் தனிப்பிரிவுக்கு இவர்கள் புகார் அனுப்பி, அதுபற்றி விசாரிக்க உத்தரவு வந்ததால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வந்து விசாரித்துள்ளனர்.

''அதிகாரிகள் வந்து விசாரித்தபோது, சோதனை ஓட்டத்துக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விட்டதாகவும், இப்போது தண்ணீர் தரமுடியவில்லை என்றும் ஊர் தரப்பில் கூறிவிட்டனர். வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் 10 ஆயிரம் லிட்டர் தொட்டியில் பிடித்துக் கொள்ளலாம் என்றால் மற்றவர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. அதனால் கால் கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. அதற்கும் மற்றவர்கள் நிலம் வழியே போக அனுமதிப்பதில்லை. எனது தாயார் சென்றபோது அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். '' என்று குற்றம்சாட்டினார் லட்சுமணன்.

குழந்தைகளை வைத்துக் கொண்டு தூரமாகச் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டியிருப்பதாக தெரிவித்தார் திவ்யா. தற்போது லட்சுமணனின் குடும்பத்தில் அவருடைய மனைவி, ஒரு வயது ஆண் குழந்தை, தாய், தந்தை, அண்ணன், தம்பி, தம்பி மனைவி ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். அண்ணி இறந்துவிட்ட நிலையில், அவர்களின் 2 வயது பெண் குழந்தையையும் தாங்களே பார்த்து வருவதாக திவ்யா கூறினார். லட்சுமணனின் தம்பி மனைவியும் கர்ப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய திவ்யா, ''முதலில் எங்களிடம் பேச மறுத்த பலரும் இப்போது எங்களுடன் பேசுகின்றனர். ஆனால் திருமணம், கோவில் திருவிழா எதற்கும் நாங்கள் போகமுடிவதில்லை. வீட்டிலேயே இருக்கிறோம்.'' என்றார்.

''சமீபகாலமாக ஊர்க்காரர்கள் குறிப்பாக எங்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் யாருமே பிரச்னை செய்வதில்லை. ஆனால் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் எங்கள் வீட்டிற்கு குடிநீர் வருவதையும், நாங்கள் பொதுக்குழாயில் குடிநீர் பிடிப்பதையும் தடுத்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். இவ்வளவு பெரிய குடும்பத்திற்கு எவ்வளவு குடிநீர் தேவை என்பது தெரிந்தும், 2 குழந்தைகளுடன் கஷ்டப்படுவது தெரிந்தும் கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் குடிக்கும் தண்ணீரைத் தடுக்கின்றனர்.'' என்றார் திவ்யா.

''கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வெளியில் தண்ணீர் விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம். எங்கள் வீட்டிற்கு பிறர் ஏற்படுத்தும் கஷ்டங்களைப் பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் என புகார் கொடுத்தும் பயனில்லை. இதற்கு தீர்வே கிடைக்காமல் பிரச்னை தொடர்கிறது. குடிநீருக்காக நாங்கள் தவித்து வருகிறோம்.'' என்றார் அவர்.

இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்தரப்பினரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் இதுபற்றி பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டனர். இதுபற்றிப் பேசினால் தங்களுக்கு தேவையற்ற பிரச்னை ஏற்படுமென்று கூறிய அவர்கள், ஆனால் லட்சுமணன் குடும்பத்தினர் சொல்வதில் உண்மையில்லை என்றும், அவர்கள் ஊரைப் பற்றி தவறான தகவல்களைத் தருவதாகவும் தெரிவித்தனர்.