சிறுகோள் மோதலால் டைனோசர்கள் அழிந்தப் பிறகு, பல கோடி ஆண்டுகளாக ராட்சதப் பறவைகளே பூமியின் முதன்மை வேட்டையாடிகளாகத் திகழ்ந்தன. மனிதர்களும் அவற்றின் இரைகளாக இருந்தனர்.

சுமார் 28 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, நமது மூதாதையர் இனத்தைச் சேர்ந்த மூன்று வயதுக் குழந்தை ஒன்று தென்னாப்பிரிக்காவின் சவானா புல்வெளிகளில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது. அந்தக் குழந்தை, 'ஆஸ்ட்ராலோபிதேகஸ் ஆஃப்ரிகானஸ்' என்ற ஆரம்பகால மனித இனத்தைச் சேர்ந்தது. தன்னை மேலிருந்து வேட்டையாடும் ஒரு உயிரினம் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அந்தக் குழந்தை அறிந்திருக்கவில்லை.

திடீரென, ஒரு பிரமாண்டமான ராட்சதப் பறவை ஒன்று மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. அது அந்தக் குழந்தையைப் பிடித்துக் கொன்றது.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெறும் சில விவரங்கள் வாசகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

'டாங் குழந்தை' என்று அழைக்கப்படும் அந்தத் தொன்மையான மனிதக் குழந்தையைக் கொன்றது எந்தப் பறவை என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அதன் கண் குழிகளுக்குக் கீழே காணப்படும் துளைகள், கழுகுகளின் நகங்களால் ஏற்படும் தடங்களுடன் ஒத்துப்போகின்றன. கழுகுகள் தங்கள் இரையை வேட்டையாடும்போது இத்தகைய தடங்கள் ஏற்படலாம். அவை, தாங்கள் பிடிக்கும் இரையின் சில பகுதிகளை மரங்களில் சேமித்துவைத்துவிட்டு, எஞ்சியவற்றைக் கூட்டுக்குக் கொண்டு செல்லும்.

கற்காலத்தில் வாழ்வது மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்க வேண்டும். அப்போது, பிரமாண்டமான விலங்குகள் பூமியில் ஆதிக்கம் செலுத்தின. மாமூத் யானைகள், மாஸ்டோடான்கள், ராட்சத ஸ்லாத்துகள், கோரைப் பற்களைக் கொண்ட வேட்டையாடிப் பூனைகள், குழந்தைகளை ட வேட்டையாடக்கூடிய மாபெரும் பறவைகள் எனப் பல ஆபத்தான உயிரினங்களுடன் தான் ஆதி மனிதர்கள் வாழ்ந்தனர்.

பறவை இனத்தைச் சாராத டைனோசர்களின் அழிவிற்கும் பெரும் பனியுகத்துக்கும் இடைப்பட்ட பல கோடி ஆண்டுகளில், இந்த ராட்சதப் பறவைகள் வானிலும் நிலத்திலும் வேட்டையாடி ஆதிக்கம் செலுத்தின. அவற்றின் இருப்பு, மனிதப் பரிணாம வளர்ச்சியின் போக்கையே நாம் உணராத வகையில் மாற்றியிருக்கக்கூடும்.

அந்தப் பறவைகள் அழிந்து பல காலத்திற்குப் பிறகும், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களில், குழந்தைகளைக் கடத்திச் செல்லும் பறவைகளைப் பற்றிய கதைகளாக இன்றும் நிலைத்திருக்கின்றன.

அந்தப் பறவைகள் அழிந்து பல காலம் கடந்துவிட்டபோதிலும், குழந்தைகளைக் கடத்திச் செல்லும் மாபெரும் பறவைகள் பற்றிய தொன்மக் கதைகள் உலகின் பல்வேறு கலாசாரங்களில் இன்றும் இடம்பெற்றுள்ளன.

டைனோசர்கள் அழிந்தபோது, வானம் முழுவதும் தூசியால் சூழப்பட்டது. பெரும்பாலான தாவரங்களும் அழிந்தன. இதனால், பல விலங்குகளுக்குப் போதிய உணவு கிடைக்காமல் போனது. அந்தச் சூழலில், விதைகளை உண்டு உயிர்வாழக்கூடிய சில பறவைகளுக்குத் தொடர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில், உயிர் பிழைத்த சில சிறிய, தரையில் வாழும் பறவைகள் காலப்போக்கில் மிகப் பெரிய உருவம் கொண்டவையாகப் பரிணமித்தன.

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த ட்ரோமோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்த சில பறவைகள் தாவரங்களை மட்டுமே உணவாகக் கொண்டிருந்தன. இவை 'அழிவின் அரக்க வாத்துகள்' என அழைக்கப்படுகின்றன. தோற்றத்தில் இன்றைய வாத்துகளைப் போல இருந்தாலும், உருவத்திலும் எடையிலும் மிகப் பிரமாண்டமானவையாக இருந்தன.

அதேபோல், தென் கரோலினாவில் வாழ்ந்த பெலகோர்னிஸ் சாண்டர்சி போன்ற சில பறவைகள் வானில் பறந்து, கடலில் வேட்டையாடின. இதுவரை வாழ்ந்த பறக்கும் பறவைகளிலேயே மிகப் பெரிதாகக் கருதப்படும் இந்தப் பறவையின் இறக்கைகள் சுமார் 7 மீட்டர் நீளம் கொண்டிருந்தன.

டைனோசர்கள் போன்ற மிகப்பெரிய நிலவாழ் வேட்டையாடிகள் அழிந்ததால் ஏற்பட்ட இடத்தைப் பிற உயிரினங்கள் நிரப்பின. பெரிய இரைகள் கிடைக்கும்போது, அவற்றை வேட்டையாடும் திறன் கொண்ட மிகப்பெரிய வேட்டையாடிகளும் காலப்போக்கில் பரிணமிக்கின்றன.

இத்தகைய ராட்சதப் பறவைகளை நமது தொன்மையான மூதாதையர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தன.

"பிரைமேட்டுகள் எனப்படும் குரங்கு இனங்கள் தோன்றிய காலத்திலிருந்தே வேட்டைப் பறவைகளும் இருந்து வருகின்றன. அவை எப்போதும் பிரைமேட்டுகளை வேட்டையாடி வந்துள்ளன. இதில் மனிதர்களும், நமது முன்னோர்களும் அடங்குவர்" என்கிறார் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரைமேட் ஆய்வாளர் ஸ்காட் மெக்ரா.

நமது முன்னோர்களை வேட்டைப் பறவைகள் எவ்வாறு வேட்டையாடின என்பதற்கான தடயங்களை இன்றும் காண முடிகிறது. ஐவரி கோஸ்ட்டில் உள்ள டாய் காட்டில், வேட்டைப் பறவைகளால் கொல்லப்பட்ட 600-க்கும் மேற்பட்ட குரங்கு இன விலங்குகளின் எச்சங்களை மெக்ரா ஆய்வு செய்தார். அவற்றில் ஆப்பிரிக்க கிரீடக் கழுகுகளால் கொல்லப்பட்டவையும் அடங்கும். இந்த எச்சங்களில் காணப்பட்ட நகக் கீறல்கள், 'டாவ்ங் குழந்தை'யின் தொல்லுயிர் எச்சத்தில் காணப்பட்ட கீறல்களைப் போலவே இருந்தன என்பதை மெக்ரா கண்டறிந்தார்.

பல குரங்குகளின் மண்டை ஓடுகளில், கண் குழியின் அடிப்பகுதியில் சேதங்கள் காணப்பட்டன. இதுபற்றி மெக்ரா கூறுகையில், "கழுகுகள் தங்கள் அலகால் கண்களைக் கொத்தியிருக்கலாம் அல்லது நகங்களால் அவற்றைப் பிடுங்கியிருக்கலாம்" என்கிறார்.

"எங்கள் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஒருவர், தொல்லுயிர் எச்சங்கள் பாதுகாக்கப்படும் இடத்துக்குச் சென்று 'டாவ்ங் குழந்தை'யின் மண்டை ஓட்டை ஆய்வு செய்தார். அதில் காணப்பட்ட சேதங்களும், நாங்கள் ஆய்வு செய்த நவீன காலக் குரங்குகளின் எச்சங்களில் காணப்பட்ட சேதங்களும் ஒரே மாதிரியாக இருந்தன" என்கிறார் அவர்.

வேட்டைப் பறவைகள் நமது மனித முன்னோர்களையும் தொடர்ந்து வேட்டையாடி வந்திருக்கலாம் என்று மெக்ரா கருதுகிறார். மனிதர்களையும் உள்ளடக்கிய பிரைமேட் இனங்களின் பரிணாம வளர்ச்சியிலும் இந்த வேட்டையாடுதல் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம்.