அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்த இடைக்காலத் தேர்தல்களை எதிர்கொள்ளும் ஜனநாயகக் கட்சி, பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்குகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு செல்வாக்கு குறைந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க மக்கள், பல மாதங்களாக ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமாக வெளியாகும் கருத்துக்கணிப்புகள் என செவ்வாய்க்கிழமை அக்கட்சிக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன.
நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்குத் தேவையான 218 இடங்களைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முக்கியமான செனட் தேர்தல்களிலும் இரு கட்சிகளும் சமநிலையில் அல்லது ஜனநாயகக் கட்சி குறைந்த வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளன.
சமீபத்தில் வெளியான நியூயார்க் டைம்ஸ் கருத்துக்கணிப்பில், 2024ஆம் ஆண்டு தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 18 சதவீதப் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தெற்கு கரோலினா மாகாணத்தின் செனட் தேர்தலில் இரு கட்சிகளும் சமநிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிஎன்என் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்புகளில் டெக்சாஸ், கான்சாஸ் மற்றும் மெய்ன் மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய அமெரிக்க அரசியல் வரலாற்றில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் கூட தவறாக அமைந்ததற்குப் பல உதாரணங்கள் உள்ளன.
2016 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் வெள்ளை மாளிகையைக் கைப்பற்றிய போது, கருத்துக்கணிப்புகளின் கூறப்பட்டதை விட டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றார்.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்று சுட்டிக்காட்டிய பின்னர், 2020-ல் அவர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மிச்சிகன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் செனட் வேட்பாளர் தேர்வுத் தேர்தலில் அப்துல் எல்-சயீத் இரட்டை இலக்க வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
ஆனால், இறுதியில் வெற்றி வித்தியாசம் வெறும் ஒரு சதவீதமாகவே இருந்தது.
விஸ்கான்சின் மாகாணத்தில் ஆளுநர் பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வுத் தேர்தலில், கருத்துக்கணிப்புகளில் கிட்டத்தட்ட 20 புள்ளிகள் முன்னிலையில் இருந்த வேட்பாளர், ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அரசியல் மற்றும் சந்தை ஆய்வுகளுக்கான கருத்துக்கணிப்புகளை நடத்தும் இப்சோஸ் பப்ளிக் அஃபையர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிளிஃபோர்ட் யங் கூறுகையில், சமீபத்திய ஆண்டுகளில் கருத்துக்கணிப்புகளை நடத்துவது கடினமாகிவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
அமெரிக்கர்கள் லேண்ட்லைன் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வதோடு, வரும் அழைப்புகளையும் தவிர்ப்பதால் அவர்களைத் தொடர்புகொள்வது கடினமாகியுள்ளது.
கருத்துக்கணிப்பு நடத்துபவர்கள் தொடர்புகொள்ளும் பலரும் அதில் பங்கேற்க விரும்புவதில்லை.
"குறிப்பாக, தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் இயல்பிலேயே அமைப்புக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள். அவர்கள் எதிலும் பங்கேற்பதில்லை. இந்த அமைப்பையே அவர்கள் வெறுக்கிறார்கள். அதுதான் சவால்" என்று யங் கூறுகிறார்.
குடியரசுக் கட்சி வாக்காளர்களின் எண்ணிக்கை கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து குறைவாகப் பதிவு செய்யப்பட்டு வரும் பட்சத்தில், வாக்குப்பதிவு மாதிரிகளை உருவாக்கும்போது கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டால், அவர்களின் தரவுகள் ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமாகச் சாயக்கூடும்.
வாக்காளர்களின் மனநிலை மற்றும் தேர்தல் முடிவுகளை முன்கணிப்பது கருத்துக்கணிப்பு நிறுவனங்களுக்கு ஏன் கடினமாகி வருகிறது என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
முந்தைய அதிபர் தேர்தல்களில் டிரம்ப் கருத்துக்கணிப்புகளின் கணிப்புகளைவிட அதிக வாக்குகளைப் பெற்றதற்கான ஒரு விளக்கம், அவரது ஆதரவாளர்கள் பலர் வழக்கமாக வாக்களிக்காதவர்களாக இருந்தபோதிலும், எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகளுக்கு வந்தது தான்.
நம்பகமான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் வாக்கு வித்தியாசம் சில சதவீதப் புள்ளிகள் மட்டுமே தவறாக இருந்தபோதிலும், கணிக்க முடியாத இந்த நிலையே சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க கருத்துக்கணிப்புத் தவறுகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக உள்ளது.




