ரேச்சல் ஸ்டோனுக்கு ஐந்து வயதாகவும், அவரது சகோதரர் இயானுக்கு 10 வயதாகவும் இருந்தபோது, அவர்களது பெற்றோர் குடும்பத்தினரையும் பக்கத்து வீட்டில் வசித்தவர்களையும் அழைத்துக்கொண்டு வேல்ஸ் பகுதிக்குச் சுற்றுலா சென்றனர். கேரவனில் தங்கி, இரண்டு வாரங்களை அவர்கள் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.
ஆனால், சுற்றுலா முடிந்து வீடு திரும்பியதும் இரு குடும்பங்களும் தங்களுக்குள் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தன. இரு குடும்பத்தினரும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை மாற்றிக்கொண்டு, ஒருவரது வீட்டில் மற்றொருவர் வசிக்கத் தொடங்கினர்.
ரேச்சலும் அவரது தாயார் கேயும், பக்கத்து வீட்டில் வசித்த எடி மற்றும் அவரது மகள் அலிசனுடன் குடியேறினர்.
அதேவேளையில், எடியின் மனைவி ஐரீன் மற்றும் அவர்களது மகள் டான் ஆகியோர், ரேச்சலின் தந்தை ரெக்ஸ் மற்றும் சகோதரர் இயானுடன் வசிக்கச் சென்றனர்.
ரேடியோ 4-இன் 'லைஃப் சேஞ்சிங்' பாட்காஸ்ட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் டாக்டர் சியான் வில்லியம்ஸிடம் பேசிய ரேச்சல், தனது குடும்பம் பிரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல், அதன்பிறகு வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள், இறுதியில் தனது பெற்றோரை தன்னால் எவ்வாறு மன்னிக்க முடிந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
புதிய குடும்பத்தினர் பக்கத்து வீட்டில் குடியேறியபோது, ரேச்சலும் இயானும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அதன்பிறகு குடும்ப அமைப்பே மாறியது.
குழந்தைகளான நாங்கள் நால்வரும் விரைவிலேயே நெருக்கமாகப் பழகிவிட்டோம். அனைவரும் ஒன்றாகச் சுற்றுலா செல்வதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருந்தோம்.
அந்த இரண்டு கேரவன்களும் அருகருகே நிறுத்தப்பட்டிருந்த காட்சி ரேச்சலுக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அதேபோல், மெளண்ட் ஸ்னோடன் மலைக்குச் சென்ற பயணத்தையும் அவரால் மறக்க முடியவில்லை.
ஆனால், சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் எல்லாமே திடீரென மாறின. ஒவ்வொருவரும் வழக்கம்போல் தங்கள் வாகனங்களில் ஏறாமல், வேறு வாகனங்களில் ஏறத் தொடங்கினர்.
ரேச்சல் கூறுவதன்படி, அவரது தாயார் முன் இருக்கையிலிருந்து திரும்பி, "இனிமேல் நாம் ஒரு புதிய குடும்பமாக வாழப்போகிறோம். 8-ஆம் எண் வீட்டில் எட்டி, அலிசன் ஆகியோருடன் நாம் வசிக்கப் போகிறோம். அலிசன் உனக்குச் சகோதரியாக இருப்பாள்."
"உன் அப்பாவும் சகோதரன் இயானும் 10-ஆம் எண் வீட்டிலேயே இருப்பார்கள். அங்கு அத்தை ஐரீனும் டானும் அவர்களுடன் வசிக்கப் போகிறார்கள். டான், இயானுக்குச் சகோதரியாக இருப்பாள்" என்று கூறினார்.
இதைக் கேட்ட ரேச்சலுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பயம், குழப்பம், சோகம் எனப் பல உணர்வுகள் அவரை ஆட்கொண்டன. அவர் அழத் தொடங்கினார்.
கார் சென்று கொண்டிருந்த போது, நடப்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தாலும், ஒருபுறம் அவருக்குள் சிறிய ஆர்வமும் இருந்தது. அலிசனை அவருக்குப் பிடித்திருந்தது. அதுமட்டுமின்றி, தனக்கு ஒரு சகோதரி இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியிருந்தார்.
அன்று இரவு, அலிசன் அவரது படுக்கையின் மேல் அடுக்கில் தூங்கும் வாய்ப்பைக் கொடுத்தார். மறுநாள், ஐல் ஆஃப் ஷெப்பியில் இருந்த 8 மற்றும் 10-ஆம் எண் வீடுகளில் இருந்த தங்களுடைய பொருட்களை பெரியவர்கள் இடம் மாற்றிக்கொண்டனர்.
அந்தக் காலகட்டத்தில் ரேச்சல் மிகுந்த குழப்பத்தில் இருந்ததாகக் கூறுகிறார்.
"ஒரேயொரு எண்ணம் மட்டும் என் மனதில் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருக்கும். ஒருவேளை இதற்கெல்லாம் நாங்கள்தான் காரணமோ என்று நினைப்பேன்."
அவர் குடியேறிய எண்-8 வீட்டின் சூழல், இதற்கு முன்பு வாழ்ந்த எண் 10 வீட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. பழைய வீடு மிகவும் சுத்தமாக இருக்கும். ஆனால், புதிய வீட்டில் நாய்களின் முடிகள், பிசுபிசுப்பான பொருட்கள், கார் உதிரிபாகங்கள் என எல்லாம் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
தனது தாயைப் பற்றிக் குறிப்பிடும் ரேச்சல், அவர் "கண்டிப்பானவர், அதே நேரத்தில் நியாயமாக நடந்துகொள்பவர். எதையும் நடைமுறைச் சிந்தனையுடன் அணுகுபவர்" என்கிறார்.
மாற்றாந்தந்தை எடியைப் பற்றி அவர் கூறுகையில், "அவர் என்னிடம் ஒருபோதும் மோசமாக நடந்துகொண்டதில்லை. ஆனாலும், நான் அவரை 'அப்பா' என்று அழைத்ததில்லை. ஏனென்றால், நான் அவருடைய மகள் இல்லையே" என்கிறார்.
தனது சகோதரன் இயானைப் பிரிந்து மிகவும் தவித்ததாகக் கூறும் ரேச்சல், "அவன் என் அண்ணன், அவனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுவேன். நான் சிறுமியாக இருந்தபோது, பள்ளியிலிருந்து அவன் வீடு திரும்புவதற்காக வீட்டின் முன்புறத் தோட்டத்தில் காத்திருப்பேன்" என்று அந்தக் கால நினைவுகளை நினைவுகூர்கிறார்.




