காகிதத்தில் சுற்றப்பட்ட இவ்வளவு சிறிய ஒரு பொருள் எப்படி இவ்வளவு பெரிய வெடிப்பையும் ஒளியையும் ஏற்படுத்த முடியும்? அதுவும் சில நொடிகளில். மாசுபாட்டை ஏற்படுத்தி, உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய இந்தச் சிறிய பட்டாசில் அப்படி என்ன இருக்கிறது?
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், பட்டாசு என்பது ஒரு சிறிய வெடிமருந்துத் தொழில்நுட்பக் கருவி.
சில குறிப்பிட்ட வேதிப்பொருட்களைக் கொண்ட இந்தப் பொருள், தீ பற்றவைக்கப்படும்போது ஒளி, ஒலி, புகை, வெப்பம், தீப்பொறிகள் அல்லது இயக்கம் போன்ற விளைவுகளை உருவாக்குகிறது.
பட்டாசின் காகித உறையைப் பிரித்துப் பார்த்தால், கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் ஒரு பொடி இருக்கும். அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன?
எரிபொருள் : நிலக்கரி மற்றும் கந்தகம் போன்றவை எரிபொருளாகச் செயல்படுகின்றன.
ஆக்ஸிஜனேற்றி: எரிபொருள் எரிவதற்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கும் பொருள் இது. பொதுவாக நெருப்பு எரிவதற்கு வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் உதவுகிறது. ஆனால் பட்டாசில் ஆக்ஸிஜன் ஏற்கெனவே இருக்கிறது. இது பொட்டாசியம் நைட்ரேட்டிலிருந்து கிடைக்கிறது. இதனால்தான் இறுக்கமாக மூடப்பட்ட உறைக்குள் இருந்தாலும் பட்டாசு விரைவாக எரிகிறது.
உறை: இறுக்கமாகச் சுருட்டப்பட்ட காகிதம் அல்லது சில நேரங்களில் அட்டைப் பெட்டி போன்ற பொருட்களால் இது தயாரிக்கப்படுகிறது. இந்த உறை உள்ளே அழுத்தம் உருவாக உதவுகிறது.
பட்டாசு திரியில் தீ பற்றவைக்கும்போது, அதிலிருந்து உருவாகும் தீப்பொறி முக்கிய வேதிப்பொருட்களைச் சென்றடைகிறது.
பொட்டாசியம் நைட்ரேட், கரி மற்றும் கந்தகத்துடன் வினைபுரியும் போது ஆக்ஸிஜன் வெளியிடப்படுகிறது. இதனால் வேதியியல் வினை நிகழ்ந்து அதிக அளவு வெப்பமும் சூடான வாயுக்களும் உருவாகின்றன. இதுவே எரிதல் எனப்படுகிறது.
ஆனால் இவை அனைத்தும் இறுக்கமாக மூடப்பட்ட உறைக்குள் நடைபெறுகின்றன. உள்ளே உருவாகும் சூடான வாயுக்கள் மிகக் குறுகிய நேரத்தில் அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
அழுத்தம் அதிகரிக்கும் போது பட்டாசின் வெளிப்புற உறை வெடித்துச் சிதறுகிறது. அப்போது வாயுக்கள் திடீரென வெளியேறி, தீவிரமான அழுத்த அலைகளை உருவாக்குகின்றன.
இதன் விளைவாகவே வெடிச்சத்தம் கேட்கிறது. எரியும் துகள்கள் மற்றும் வாயுக்களிலிருந்து பிரகாசமான ஒளியும் வெளிப்படுகிறது.
பட்டாசுகளில் வெவ்வேறு உலோகச் சேர்மங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெவ்வேறு நிறங்கள் உருவாக்கப்படுகின்றன.
பட்டாசுகளுக்கு அதிக சத்தத்தையும் பல்வேறு நிறங்களையும் ஒளியையும் கொடுக்கும் அதே வேதியியல் செயல்முறைகள்தான் ஒலி, காற்று, மண் மற்றும் நீர் மாசுபாட்டுக்கும் காரணமாகின்றன.
பட்டாசு வெடிக்கும்போது மிக நுண்ணிய மற்றும் பெரிய அளவிலான துகள்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. இவற்றில் PM2.5, PM10 போன்ற நுண்துகள்களும் அடங்கும்.
பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களிலிருந்து ஈயம், கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் உள்ளிட்ட வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. உலோகங்கள் கலந்த புகையும் தூசும் வெளியேறுகின்றன.
இதனால்தான் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட உடனேயே காற்றின் தரம் மோசமடைகிறது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளிலும் காற்றோட்டம் இல்லாத இடங்களிலும் இந்த மாசு தேங்கிவிடுகிறது.
இந்த நச்சுத் துகள்கள் சுவாசத்தின் மூலம் உடலுக்குள் சென்றால் நுரையீரலைச் சென்றடையலாம். பட்டாசுப் புகை கண்கள், மூக்கு, வாய் மற்றும் சுவாசப் பாதையில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
பட்டாசுகள் வெடித்த பிறகு அவற்றின் எஞ்சிய பொருட்கள் தரையில் கிடக்கின்றன. அவை மண்ணுடன் கலக்கின்றன. ஆறுகள், ஏரிகள் அல்லது கடற்கரைப் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடித்தால், இந்த வேதிப்பொருட்கள் நீரிலும் கலக்கின்றன.
அதுமட்டுமின்றி, பட்டாசுகளை வெடிக்கும்போது காதுகளைப் பாதிக்கும் அளவுக்கு அதிகமான சத்தமும் உருவாகிறது.




