வங்கக்கடலில் உருவாகி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள 'முரசு' புயல் தற்போது ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்தப் பெயரை இந்தியா ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது. தற்போது அந்தப் பெயர் பயன்படுத்தப்படும் வரிசை வந்ததால், வங்கக்கடலில் உருவான புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் பெயரைப் பரிந்துரைத்தவர் யார்? முரசு என்ற பெயர் ஏன் தேர்வு செய்யப்பட்டது? புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எப்போது தொடங்கியது? இதற்கான விதிமுறைகளை வகுப்பது யார்?

கர்நாடக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் புவியரசன், தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றியபோது 'முரசு' என்ற பெயரைப் பரிந்துரைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொளியில், புயல்களுக்குப் பெயர் வைப்பதற்கு உலக வானிலை அமைப்பு சில வழிமுறைகளை வகுத்துள்ளதாகக் கூறுகிறார்.

அதன்படி, பரிந்துரைக்கப்படும் பெயர்கள் அரசியல், அரசியல் தலைவர்கள், மத நம்பிக்கைகள், கலாசாரம், பாலினம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாதவையாக இருக்க வேண்டும். உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையிலோ, முரட்டுத்தனமான அல்லது கொடூரமான பொருளைத் தரும் வகையிலோ பெயர்கள் இருக்கக் கூடாது. பெயர்கள் சுருக்கமாகவும் எளிதில் உச்சரிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதிகபட்சம் எட்டு எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெயரின் உச்சரிப்பும் ஒலிப்பதிவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளின் அடிப்படையில்தான் 'முரசு' என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்கிறார் புவியரசன்.

பழங்காலத்தில் மன்னர் ஆட்சிக் காலத்தில் ஒரு செய்தியைப் பொதுவெளியில் மக்களுக்கு செய்திகளை தெரிவிப்பதற்கு முரசு பயன்படுத்தப்பட்டது. முக்கியமான அறிவிப்புகளையும், பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளையும் அறிவிப்பதற்கான கருவியாக அது இருந்தது. இதனால், மக்களுக்குப் பரிச்சயமானதும் எளிதில் அடையாளம் காணக்கூடியதுமான 'முரசு' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டதாக அவர் விளக்குகிறார்.

'முரசு' மட்டுமின்றி, வேறு சில பெயர்களையும் தாங்கள் பரிந்துரைத்ததாகப் புவியரசன் தெரிவித்துள்ளார். விவசாயத்துக்குப் பயன்படும் 'ஏர்', 'கலப்பை' ஆகிய பெயர்களையும், கடல் மற்றும் மீன்பிடித் தொழிலுடன் தொடர்புடைய 'நாவாய்', 'படகு' ஆகிய பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'திருக்கை' என்ற மீன் பெயரையும் பரிந்துரைத்ததாகக் கூறியுள்ளார்.

தாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் இருந்து 'முரசு' என்ற பெயர் பட்டியலில் இடம்பெற்றதாகப் புவியரசன் தெரிவித்துள்ளார். இந்தியா பரிந்துரைத்த இந்தப் பெயர், சர்வதேசப் பட்டியலில் இடம்பெற்ற பின்னர், வரிசைப்படி தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடல், அரபிக்கடல் உள்ளிட்ட வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்படுகிறது.

உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் வெப்பமண்டலப் புயல்கள் குழு இந்தப் பெயரிடும் நடைமுறையை ஒருங்கிணைக்கிறது.

இந்தக் குழுவில் வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகள் ஒவ்வொன்றும் தலா 13 பெயர்களைப் பரிந்துரைத்துள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து மொத்தம் 169 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

13 நாடுகள் பரிந்துரைத்த பெயர்களை ஆய்வு செய்து இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது வெப்பமண்டலப் புயல்கள் குழுவின் பணி. அந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைப்படி, வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒதுக்கும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் உள்ளது. இதற்கான பணியை டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் மேற்கொள்கிறது.

13 நாடுகளும் பரிந்துரைத்த பெயர்கள், அந்த நாடுகளின் ஆங்கிலப் பெயர்களின் அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டின் 13 பெயர்களும் தனித்தனி வரிசையில் இடம்பெற்றுள்ளன. இவை 13 நெடுவரிசைகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நெடுவரிசையிலும் வங்கதேசம் பரிந்துரைத்த பெயரில் தொடங்கி, ஏமன் பரிந்துரைத்த பெயர் வரை வரிசையாகப் பயன்படுத்தப்படும். ஒரு நெடுவரிசையில் உள்ள பெயர்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்ட பிறகு அடுத்த நெடுவரிசைக்குச் செல்லப்படும்.

உதாரணமாக, முதல் நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'நிசர்கா' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'கதி' என்ற பெயர் வருகிறது. அதற்குப் பிறகு இரான் பரிந்துரைத்த 'நிவார்', மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'புரேவி' எனத் தொடர்கிறது.

அடுத்தடுத்த புயல்களுக்குப் பெயரிடும் வரிசையிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போதைய பட்டியலின் மூன்றாவது நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'முரசு' இடம்பெற்றிருந்தது. எனவே, இந்தப் புயலுக்கு 'முரசு' என்ற பெயர் வந்ததற்குக் காரணம், பட்டியலில் அந்தப் பெயரின் முறை வந்திருப்பதுதான்.

புயல் எந்த நாட்டை நோக்கிச் செல்கிறது அல்லது எந்த நாட்டில் கரையைக் கடக்கிறது என்பதைப் பொறுத்து அதன் பெயர் தீர்மானிக்கப்படுவதில்லை. உதாரணமாக, இந்தியக் கடலோரப் பகுதிகளை நோக்கி வரும் புயலுக்கு இந்தியா பெயரிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பட்டியலில் அடுத்ததாக எந்த நாட்டின் பெயர் இடம்பெற்றுள்ளதோ, அந்த நாட்டின் பரிந்துரைக்கப்பட்ட பெயரே பயன்படுத்தப்படும்.

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் புயல் பெயர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தப்படும். ஆனால், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒவ்வொரு பெயரும் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர் மீண்டும் அந்தப் பட்டியலில் இடம் பெறாது.