தமிழ்நாட்டில் ஆகம விதிகளின்படி இயங்கும் இந்து கோயில்களுக்குள் பிற மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்திருப்பவர்களையும், அந்தக் கோயிலின் தெய்வத்தின் மீது தங்களுக்கு மரியாதை இருப்பதை உறுதிப்படுத்தாதவர்களையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

இந்து அல்லாத ஒருவர் கோயிலுக்குள் செல்ல விரும்பினால், அந்தக் கோயிலில் உள்ள குறிப்பிட்ட தெய்வத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், கோயிலின் மரபுகள் மற்றும் வழக்கங்களைப் பின்பற்றுவதாகவும் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைவது பற்றி தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் என்ன சொல்கிறது? கோயிலுக்குள் நுழைய விரும்பும் பிற மதத்தினர் என்ன செய்ய வேண்டும்?

இந்து மதத்தைச் சாராதவர்கள் கோயில் கருவறை மற்றும் மண்டபங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான சட்டப் பிரிவுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி மதுரையைச் சேர்ந்த தங்கம் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், கோயிலின் முக்கிய இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பிற மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ஆகம விதிகளின்படி இயங்கும் கோயில்களுக்குள் இந்து அல்லாதவர்கள் செல்வதற்கு ஏற்கெனவே நீதிமன்றம் தெளிவான தீர்ப்புகளை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்து அல்லாத ஒருவர் கோயிலுக்குள் செல்ல விரும்பினால், அந்தக் கோயிலில் உள்ள குறிப்பிட்ட தெய்வத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், கோயிலின் மரபுகள் மற்றும் வழக்கங்களைப் பின்பற்றுவதாகவும் உறுதிமொழிப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்து அல்லாத பிற மதத்தவர்களை கோயிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "தங்கள் மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்திருப்பவர்களும், அந்த கடவுள் மீது தங்களுக்கு மரியாதை உண்டு என்பதை உறுதிப்படுத்தாதவர்களும், கோயில் வளாகத்திற்குள் நுழைவதற்கே அனுமதிக்கப்படக் கூடாது. இந்த உறுதிமொழி, அந்தந்தக் கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள படிவத்தின்படி இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.

1972ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் 1947ஆம் ஆண்டு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டத்தில் உள்ள சட்டப்பூர்வ வரையறையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பழனி மலைக்கோயிலுக்குள் இந்து அல்லாத சில நபர்கள் சென்றதையடுத்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் கடந்த 2024-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. கோயில் என்பது சுற்றுலாத் தலமோ அல்லது பொழுதுபோக்கு இடமோ அல்ல என்றும், இந்து அல்லாத ஒருவருக்கு நம்பிக்கை இல்லையெனில், அவர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட முடியாது என்றும், அவ்வாறு அனுமதி மறுக்கப்படும்போது அவர்களின் உணர்வுகள் புண்படுவதாகக் கருத இடமில்லை என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்து அல்லாத பிற மதத்தினர் இந்துக் கோயிலுக்குள் நுழைய சில கட்டுப்பாடுகளையும் விதித்து அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதேபோல, 1972ஆம் ஆண்டு கல்யாண்தாஸ் vs தமிழ்நாடு அரசு வழக்கில் 'கோயில் நுழைவு அங்கீகார விதிகளில்' 4ஏ என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இந்து அல்லாதவர்களையும் கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்க வழிவகை செய்யப்பட்டது முதன்மைச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி, அந்த விதியை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மேற்கண்ட இரு நீதிமன்ற தீர்ப்புகளையும் ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்டதை நல்ல உதாரணம் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், அவரை இந்து மதத்துக்கு மாற வேண்டும் என்று யாரும் கோரவில்லை என்றும், அந்தக் கோயிலின் இறைவன் மீது தனக்கு மரியாதை இருப்பதை உறுதிப்படுத்த மட்டுமே கேட்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம், 1947 குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் செந்தமிழ் அரசு, இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதே அச்சட்டத்தின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.

இந்தச் சட்டத்தின்படி, கோயில்கள் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், அவை இந்துக்களுக்கோ அல்லது இந்து மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கோ உரிய பொது வழிபாட்டுத் தலங்களாகக் கருதப்படுகின்றன என்று கூறிய அவர், முன்னர் சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குக் கோயில் நுழைவு மறுக்கப்பட்ட நிலையில், அந்தப் பாகுபாட்டை நீக்கி, இந்து மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை வழங்குவதற்கான சட்டமாக அது அமைந்தது," என்றார்.

கோயிலின் குறிப்பிட்ட மரபுகள், ஆகம விதிகள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான கட்டுப்பாடுகளும் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு தற்போது தமிழ்நாட்டில் ஆகம விதிகளின்படி செயல்படும் கோயிலுக்குள் இந்து அல்லாத பிற மதத்தினர் நுழைய, அதற்கென உள்ள உறுதிமொழிப் பத்திரப் படிவத்தை கோயிலில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்கள் அல்லது கோயில் நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் இருப்பதாகவும்" வழக்கறிஞர் செந்தமிழ் அரசு தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை தகவல்களின்படி, தமிழ்நாட்டில் ஆகம விதிகளின்படி இயங்கும் 7,461 கோயில்கள் உள்ளன.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று வழிபட விரும்பும் இந்து அல்லாத ஒருவர், முதலில் அந்தக் கோயிலின் நிர்வாகத்தை அணுகி உறுதிமொழிப் படிவத்தைப் பெற வேண்டும்.