வானத்தை நோக்கி திரிசூலம் போல வேகமாகப் பறந்து சென்று வெடிக்கும் வண்ணமயமான பட்டாசு அது. அதன் பெட்டியில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலை (M.R.P.) ரூ.1200. கடையில் தரப்பட்ட விலைப்பட்டியலில் அதற்கு குறிக்கப்பட்டுள்ள விலை ரூ.280.

ரூ.200 என்று பெட்டியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மற்றொரு வகை பட்டாசுக்கு கடையில் கூறப்படும் விலை வெறும் 40 ரூபாய்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் பட்டாசுக் கடைகளில் 80 சதவீதம், 90 சதவீதம் தள்ளுபடி என்று விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த தொகைக்கு விற்பனை செய்தாலும் தங்களுக்கு வாங்கிய விலையை 50 முதல் 100 சதவீதம் லாபம் இருக்கும் என்கின்றனர் பட்டாசு விற்பனையாளர்கள்.

அதிகபட்ச சில்லறை விலை என்பதே ஏமாற்று வேலை என்கிறார் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன்.

இந்த எம்ஆர்பி விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கிறது.

இதனைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பிபிசியிடம் கூறினார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிபொருள் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சங்கர்.

தமிழகத்தில் பட்டாசுக் கடைகளுக்கு நிரந்தர உரிமம் மற்றும் தற்காலிக உரிமம் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்படுகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பட்டாசுக் கடைகள், தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் அமைக்கப்படுவது வழக்கமாகவுள்ளது. இந்த கடைகளில் பட்டாசு விலைக்கு தள்ளுபடி தருவதாக விளம்பரம் செய்வதும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

இந்த தள்ளுபடி சதவீதம் முன்பு 30 சதவீதம், 40 சதவீதம் என்றிருந்தது, இந்த ஆண்டில் 80 முதல் 90 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இந்த விலை எப்படி இருக்கிறது என்பது குறித்து பல்வேறு பட்டாசுக்கடைகளில் பிபிசி தமிழ் விசாரித்ததில், பட்டாசுப் பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த விலையை விட, கடையில் தரப்பட்ட விலைப்பட்டியலின் விலை மிகமிகக் குறைவாக இருந்தது தெரியவந்தது.

கோவை நகரில் பல பகுதிகளில் பட்டாசுக் கடைகள் சார்பில் தள்ளுபடி விலை குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவை சாய்பாபா காலனியில் பட்டாசுக் கடை ஒன்றில் 80 சதவீத தள்ளுபடி என்று விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அந்தக் கடையில் விலைப்பட்டியலைக் கேட்டு வாங்கி, குறிப்பிட்ட சில பட்டாசுகளின் பெட்டிகளில் இருந்த விலையைப் பார்த்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட 70 முதல் 80 சதவீதம் வரை குறைவாக விற்பனை விலை வைக்கப்பட்டிருந்ததை அறியமுடிந்தது.

பிபிசியிடம் பேசிய அந்த பட்டாசுக் கடையின் உரிமையாளர் சதீஷ், ''நாங்கள் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் வைத்துள்ளோம். கோவையில் எங்களுக்கு 3 கடைகள் இருக்கின்றன. எங்களிடம் குறைந்தபட்சம் 30 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரையிலான பட்டாசுகள் விற்பனைக்கு இருக்கிறது. நாங்கள் வாங்கும் விலையிலிருந்து மிகவும் குறைவான லாபம் வைத்துக் கொடுத்து, அதிகளவு பட்டாசுகளை விற்பனை செய்து லாபம் பார்க்கும் நோக்கத்தில்தான் இதுபோன்று தள்ளுபடி கொடுக்கிறோம். இதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.'' என்றார்.

உதாரணத்திற்கு ஒரு பட்டாசு பெட்டியைக் காண்பித்த அவர், ''இந்த பெட்டியில் ரூ.1200 என்று அதிகபட்ச சில்லறை விலை (MRP) குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இது சிவகாசியில் 200 ரூபாய்க்கு கிடைக்கும் அதை நாங்கள் ரூ.280 என்று விற்பனை செய்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கான வகை பட்டாசுகளை விற்கும் போது லாபம் அதிகம் கிடைக்கிறது என்பதுதான் இப்படி விலை குறைப்பதற்குக் காரணம்.'' என்றார்.

சிவகாசிக்கு மிக அருகிலுள்ள சாத்தூரில் பட்டாசு ஆலை நடத்தும் ஒரு நிறுவனத்தின் விளம்பரத் துண்டறிக்கையில், 90 சதவீதம் தள்ளுபடி என்று கூறப்பட்டிருப்பதுடன் 162 வகையான பட்டாசுகளின் விலையும், 90 சதவீதம் கழித்த பின் விற்கப்படும் விலையும் அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது. அதில் 60 ரூபாய் குருவி வெடி 6 ரூபாய்க்கு தருவதில் துவங்கி ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுப்பெட்டி, ரூ.10 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை வித்தியாசம், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்திழுப்பதாகவுள்ளது.

மதுரையில் தற்காலிக பட்டாசுக் கடை நடத்தும் கெவின் ராஜா, ''தீபாவளி முடிந்து சிவகாசியில் பட்டாசு உற்பத்தி துவங்கும் காலத்தில் அதாவது ஜனவரி, பிப்ரவரியில் பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்தால் அதற்கு அக்டோபர் மாதத்தில் ரூ.30 லட்சத்துக்கான பட்டாசு கிடைக்கும். அதே அளவு பட்டாசுகளை செப்டம்பர், அக்டோபரில் சென்று வாங்கினால் 20 முதல் 25 லட்ச ரூபாய் தர வேண்டியிருக்கும். நிரந்தர பட்டாசு உரிமம் வைத்திருப்பவர்கள், முதலிலேயே பட்டாசுகளை வாங்கி குடோனில் வைத்துக்கொள்வர்.'' என்றார்.

''அவர்கள் 10 ரூபாய்க்கு வாங்கும் ஒரு வெடியை, 50 ரூபாய்க்கு சில்லறைக் கடைக்கு விற்பார்கள். அந்த பட்டாசு விலை ரூ.200 என்று எம்.ஆர்.பி. குறிக்கப்பட்டிருக்கும். அதை சில்லறைக்கடைக்காரர் 50 சதவீதம் தள்ளுபடி என்று விளம்பரம் செய்து 100 ரூபாய்க்கு விற்றாலே அவருக்கு 100 சதவீத லாபம் கிடைக்கும். இதில் அதிகபட்சவிலை என்பதே ஒரு கேம்தான். வாடிக்கையாளரை ஈர்க்கவே இப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது.'' என்றார்.

பெயர் கூற விரும்பாத மற்றொரு பட்டாசுக்கடைக்காரர், ''ஒரு புஸ்வாணம் பெட்டி எங்களுக்கு சிவகாசியில் 25 ரூபாய்க்குக் கிடைக்கும். அதில் விலை 500 ரூபாய் என்று எம்ஆர்பி இருக்கும். அதை சில்லறைக் கடைகளில் 100 ரூபாய்க்கு விற்பார்கள். நாங்கள் 90 சதவீதம் தள்ளுபடி என்று கூறி 50 ரூபாய்க்கு விற்போம். அதிலும் எங்களுக்கு 100 சதவீதம் லாபம் இருக்கிறது. '' என்றார்.

அதேபோல 900 ரூபாய் விலை குறிப்பிட்டுள்ள பட்டாசு பெட்டியை 120 ரூபாய்க்கு சிவகாசியில் வாங்கி 240 ரூபாய்க்கு விற்பதாகவும், ரூ.46க்கு வாங்கப்படும் ரூ.500 விலையுள்ள ஃபிளவர் பாட் பிக் என்ற பட்டாசை 80 ரூபாய்க்கும், டச் மீ ஃபால்ஸ் என்ற ரூ.1100 விலையுள்ள பட்டாசை 110 ரூபாய்க்கு வாங்கி 230 ரூபாய்க்கும் விற்பதாக பல்வேறு பட்டாசுக் கடைக்காரர்களும் தகவல் பகிர்ந்தனர்.

இதுபற்றி பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு உறுப்பினரும், கோவை மாவட்ட பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவருமான சின்னச்சாமி, ''பட்டாசு விற்பனையில் 80–90 சதவீதம் தள்ளுபடி என்பது பெரிய பொய். இங்குள்ள சில்லறைக் கடைகளில் மட்டுமின்றி, சிவகாசியிலும் மொத்த விற்பனைக் கடைகளிலும் அப்படித்தான் தள்ளுபடி என்று விளம்பரம் செய்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் செயல். மக்களை ஈர்ப்பதற்கான ஒரு உத்தி. இதில் எங்களுக்கு உடன்பாடில்லை.'' என்றார்.

''உதாரணமாக ஒரு ராக்கெட் பெட்டி 1200 ரூபாய் என்று விலை குறிக்கப்பட்டிருந்தால் சிவகாசியில் 200 ரூபாய்க்கு கிடைக்கும். அதை 300 ரூபாய்க்கு விற்பார்கள். இந்த விலைக்கு விற்றாலும், பட்டாசு விற்பனையில் செலவு போக விற்பனையாளர்களுக்கு அதிகபட்சமாக 30 முதல் 40 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். இந்த எம்.ஆர்.பி. விலையை ஆலைக்காரர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள். எம்ஆர்பி நிர்ணயிப்பதை சரி செய்ய வேண்டுமென்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.'' என்றார் அவர்.

பட்டாசுக்கடைகளில் இருந்த பல்வேறு வாடிக்கையாளர்களிடமும் பிபிசி தமிழ் பேசியபோது, பெரும்பாலானவர்கள் தள்ளுபடி என்பதைப் பார்த்தே கடைகளை தேர்வு செய்து வாங்க வந்ததும் தெரியவந்தது.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த ராகவேந்திரன், ''சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 100 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுப் பெட்டியை 80 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்குவோம். இப்போது 80 சதவீதம், 90 சதவீதம் என்று தள்ளுபடி போட்டு விளம்பரம் செய்து பட்டாசு விற்கிறார்கள். அதேபோன்று பட்டாசுகளிலும் புதுப்புது ரகங்கள் குவிந்து இருப்பதால் அவற்றின் ஒரிஜினல் விலையைக் கணிக்க முடியவில்லை. '' என்றார்.