ராமாயணம். இந்தக் கதை எத்தனை முறை, எத்தனை வடிவங்களில் இதுவரை சொல்லப்பட்டுள்ளது என்பதற்குக் கணக்கே கிடையாது.
பல்லாண்டுகளாகச் சொல்லப்படும் இந்தக் கதையை மதங்களைக் கடந்து இந்தியாவின் பெரும்பாலான மக்கள் நன்றாகவே அறிவார்கள். இதுவரை பல 'ராமாயண' திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், வெள்ளித்திரையில் வெளியாகும் ஒவ்வொரு ராமாயண படைப்புக்கும் எதிர்பார்ப்பு உருவாகிறது.
இப்போது, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோரது நடிப்பில், பெரும் பொருட்செலவில் 'ராமாயணா: பாகம் 1' இன்று (நவம்பர் 5) வெளியாகிறது. இதுவரை வெளியான 'ராமாயண' திரைப்படங்களுக்கும் இந்தத் திரைப்படத்திற்கும் ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது.
பெரும்பாலும் திரையில், சீதை கடத்தப்பட்டதற்குப் பிறகான நிகழ்வுகள் மூலம் ராவணனின் கதை காட்டப்படும். ஆனால், இதில் ராவணனின் தோற்றம் குறித்து சற்று விரிவாகவே சொல்லப்படும் என படத்தின் முன்னோட்டம் காட்டுகிறது.
பிரபலமான 'வால்மீகி ராமாயணத்தை' அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது தாய்லாந்து, மலேசியா, லாவோஸ் எனப் பல நாடுகளில் ராமாயணம் வழக்கில் உள்ளது. ஆனால், அங்கு சொல்லப்படும் கதைகள் வால்மீகி ராமாயணத்தில் இருந்து சற்றே வித்தியாசமானவை. அவற்றில் பல, வழக்கமான 'வில்லன் அல்லது அசுரன்' பிம்பத்தில் இருந்து ராவணனை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
'நூற்றுக்கணக்கான ராமாயணங்கள் உள்ளன. அவை பல்வேறு மொழிகளிலும், காவியம், புராணங்கள், நாடகங்கள், பொம்மலாட்டங்கள், சிற்பங்கள் மற்றும் பிற வடிவங்களிலும் பரவியுள்ளன' என்று கவிஞர், மொழியியலாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் ஏ. கே. ராமானுஜன் தனது 'முந்நூறு ராமாயணங்கள்' கட்டுரையில் (1987) குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Prime Focus Studios Monster Mind Creations DNEG
வால்மீகி ராமாயணத்தை தழுவி இயற்றப்பட்ட 'ராமகீன்', தாய்லாந்தில் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.
"தாய்லாந்து முழுவதும் ராமகீனின் தாக்கத்தைக் காண முடியும். மன்னர்கள், மாகாணங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய அடையாளங்களின் பெயர்களில் இது பிரதிபலிக்கிறது. ராமாயணம் தாய்லாந்தை எப்போது வந்தடைந்தது என்பதற்குரிய சரியான குறிப்புகள் இல்லை. இது இந்திய வியாபாரிகளால் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம்" என தாய்லாந்து அறக்கட்டளை தெரிவிக்கிறது.
'ராமகீன்' இதிகாசத்தின்படி ராவணன் கதாபாத்திரம், தோட்சகன் என அழைக்கப்படுகிறது.
அதன்படி, "தோட்சகன் (ராவணன்), ஒரு சக்திவாய்ந்த அரக்க அரசன். பச்சை நிற உடலும், பத்து தலைகளும், இருபது கைகளும் கொண்டவன். அவன் தனது இதயத்தை ஒரு மாயப் பெட்டியில் மறைத்து, அதைத் தனது குருவான கோபுத்ர முனிவரிடம் கொடுத்து வைத்திருந்தான்."
இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், 'சீதை, தோட்சகனின் மகள்' என 'ராமகீன்' குறிப்பிடுகிறது.
"நங் சிதா (சீதை), தோட்சகனின் மகளாகப் பிறந்தாள். ஆனால், அவள் தனது தந்தைக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவாள் என்று ஜோதிடர்கள் கணித்தனர். எனவே தோட்சகன் அவளை நாடு கடத்தினான்."
பிற்காலத்தில், "தனது சொந்த மகள் என்பதையும் அறியாமல் அவளைக் கடத்திச் செல்கிறான் தோட்சகன். இது பிரா ராமுடனான (ராமர்) ஒரு போருக்கு வழிவகுத்தது. இந்தப் போரால் இரு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டதுடன், இறுதியில் தோட்சகனின் உயிரும் பறிபோனது" - இவ்வாறு 'ராமகீன்' ராவணனை விவரிக்கிறது.
"ராமகீன், ராவணனின் திறமையையும் கல்வியறிவையும் போற்றுகிறது. அவர் சீதையைக் கடத்திய செயல் அன்பின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுவதோடு, அனுதாபத்துடனும் அணுகப்படுகிறது. ஒரு பெண்ணுக்காகத் தனது குடும்பம், ராஜ்ஜியம் மற்றும் உயிரையே ராவணன் தியாகம் செய்தது தாய்லாந்து மக்களை நெகிழச் செய்கிறது" என ஏ. கே. ராமானுஜன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடான மலேசியாவில் சொல்லப்படும் ராமாயணத் தழுவலான 'ஹிகாயத் ஸ்ரீ ராமாவில்', இஸ்லாமிய மதத்தின் தாக்கம் காணப்படுகிறது.
அதன்படி, பத்து தலைகளும் இருபது கைகளும் கொண்ட அரக்கனான ராவணனுக்கு (மலாய் மொழியில் மகாராஜா ராவணா அல்லது ருவானா) பூமியில், சொர்க்கத்தில், கடலில் மற்றும் பாதாளத்தில் என நான்கு ராஜ்ஜியங்கள் இருந்தன.
ஒரு கப்பல் மூலமாக ராவணன் சிலோன் தீவுக்கு (லங்கா-புரி) கொண்டு செல்லப்படுவதோடு அவனது கதை ஆரம்பிக்கிறது. அங்கு அவன் தலைகீழாகத் தொங்கியபடி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்கிறான்.
அவன் இவ்வாறு தவத்தில் ஈடுபட்டிருக்கும்போது, இறைத்தூதர் ஆதம் சொர்க்கத்தில் இருந்து கீழே அனுப்பப்படுகிறார். அவர் ராவணனைச் சந்திக்கிறார். அவனது கோரிக்கையை ஏற்று, நான்கு ராஜ்ஜியங்களை அவனுக்கு வழங்குமாறு இறைவனிடம் கேட்க சம்மதிக்கிறார். இந்தக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.
பின்னர், ராவணன் திருமணம் செய்துகொண்டு இந்திரஜித், பாதாள மகாராயன், கங்கா மகா-சூரி ஆகிய மூன்று மகன்களைப் பெற்றெடுக்கிறான். தனது மகன்களை சொர்க்கம், பாதாளம், கடல் ஆகிய மூன்று ராஜ்ஜியங்களின் சிம்மாசனங்களில் அமரச் செய்யும் ராவணன், லங்கா-புரி ராஜ்ஜியத்தை மட்டும் தன்னிடமே வைத்துக் கொள்கிறான்.




