லக்னௌ பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில், ஆகா ஹசன் அபிதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் இபாதத்யார் கான். இலக்கிய உலகில் 'இபாத் பரேல்வி' என்ற பெயரில் அறியப்பட்ட அவர், தான் எழுதிய 'கஸலான்-ஏ-ரானா' என்ற நூலில், ஆகா ஹசன் அபிதியின் ஆளுமையைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
லக்னோ பல்கலைக் கழகத்தில் ஆகா ஹசன் அபிதி ஒரே நேரத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், சட்டமும் படித்துக்கொண்டிருந்தார்.
ஒருநாள் தனது நண்பர் இபாத் பரேல்வியிடம் பேசிக் கொண்டிருந்த ஆகா ஹசன் அபிதி, "என்னால் விரிவுரையாளராகவோ வழக்கறிஞராகவோ பணியாற்ற முடியாது. இந்த இரண்டு தொழில்களுமே என் இயல்புக்குப் பொருந்தாது. என் தந்தை பணிபுரியும் மஹ்மூதாபாத் எஸ்டேட்டிலேயே ஏதாவது ஒரு வேலையில் சேரலாம் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த இபாத் பரேல்வி, "உன் கல்வித் தகுதிக்கு மஹ்மூதாபாத் சமஸ்தானத்தில் கிடைக்கும் வேலை பொருத்தமானதாக இருக்காது. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'ஹபீப் வங்கி' இஸ்லாமியர்களுக்கான வங்கி. மஹ்மூதாபாத் ராஜா, ஹபீப் சேத்துக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதிக் கொடுத்தால், அங்கு உனக்கு அதிகாரி வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்காக லக்னௌவை விட்டு மும்பைக்கு செல்ல வேண்டியிருக்கும், எனவே இதைப் பற்றி நன்றாக யோசித்துக் கொள்" என்றார்.
இதைக் கேட்ட ஆகா ஹசன் அபிதி, "என்ன சொல்கிறாய் நண்பா? நான் வங்கியில் வேலை செய்வதா? என் இயல்பு உனக்கு நன்றாகத் தெரியுமே! அத்தகைய வேலை எனக்குச் சிறிதும் பொருந்தாது" என்று மறுத்துவிட்டார். ஆனால், இபாத் பரேல்வி அவரிடம் விரிவாக விளக்கிக் கூறி ஆகா ஹசன் அபிதியை வங்கி வேலை பார்க்க சம்மதிக்க வைக்க முயன்றார்.
"அன்பு நண்பரே, இப்போது சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கான வேலைவாய்ப்புகள் கிட்டத்தட்ட முடங்கிவிட்டன. இப்போது நமக்கு எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான் எனத் தோன்றுகிறது. நம் மதிப்பிற்குரிய ராஜாவிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கிக்கொண்டு, மும்பைக்கு புறப்படு. இந்த வேலை உன் எதிர்காலத்திற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும், உன் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கலாம்" என்று வலியுறுத்தினார்.
இபாத் பரேல்வியின் யோசனை ஆகா ஹசன் அபிதிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றாலும், அதைப் பற்றி அவர் தொடர்ந்து யோசித்தார். இதுகுறித்து இபாத் பரேல்வி தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"இறுதியில், ஆகா ஹசன் அபிதி என் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். அரசரைச் சந்தித்து, ஹபீப் சேத்துக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். மிகவும் மேன்மையான மனிதரான அவர், ஆகா ஹசன் அபிதிக்காக கடிதம் எழுதிக் கொடுத்தார். 'இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு மும்பைக்குச் செல்லுங்கள். இறைவனின் விருப்பம் இருந்தால், உங்கள் முயற்சி வெற்றி பெறும்' என்று கூறினார்."
மறுநாள், அந்தக் கடிதத்துடன் இபாத் பரேல்வியின் வீட்டுக்கு வந்த ஆகா ஹசன் அபிதி, "நண்பரே, பரிந்துரைக் கடிதம் கொடுத்துவிட்டார். ஆனால், நான் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன், எனக்கு யோசனை கூறுங்கள்" என்று கேட்டார்.
அதற்கு இபாத் பரேல்வி, "இந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக மும்பைக்குப் புறப்படுங்கள். அங்கு ஹபீப் சேத்தை சந்தித்து, அவரிடம் கடிதத்தைக் கொடுத்து, ஹபீப் வங்கியில் அதிகாரியாகப் பணியில் சேருங்கள்" என்று ஆலோசனை கூறினார்.
ஆகா ஹசன் அபிதிக்கு இபாத் பரேல்வியின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. எனவே, அவரது யோசனையை ஏற்று மும்பைக்குச் செல்ல சம்மதித்தார். வானிலை மோசமானதாக இருந்தபோதிலும், ஒரு வாரத்துக்குப் பிறகு மும்பைக்குப் புறப்பட்டார். மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு, மும்பையிலிருந்து ஆகா ஹசன் அபிதி எழுதிய கடிதம் இபாத் பரேல்விக்குக் கிடைத்தது.
அதில், "அரசர் கொடுத்த பரிந்துரைக் கடிதம் மிகவும் உதவியாக இருந்தது. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. இங்கு சூழல் இனிமையாக இருக்கிறது. மும்பை நகரமும் மிகவும் அழகாக உள்ளது. நான் இங்குள்ள சூழலுக்கு நன்றாகப் பொருந்திக்கொண்டேன். தற்போது பயிற்சி நடைபெற்று வருகிறது. அது மூன்று முதல் நான்கு மாதங்களில் முடிவடையும். அதன் பிறகு, ஹபீப் வங்கியின் பல்வேறு கிளைகளைத் தொடங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தைப் படித்தபோது தாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக இபாத் பரேல்வி நினைவுகூர்கிறார். வங்கிப் பணிகள் தொடர்பாக ஆகா ஹசன் அபிதி அடிக்கடி டெல்லிக்கு சென்று வந்தார். இதற்கிடையில், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது, புதிய நாடாக பாகிஸ்தான் உருவானது. இபாத் பரேல்வி லாகூரில் உள்ள ஓரியன்டல் கல்லூரியில் சேர்ந்தார். ஆகா ஹசன் அபிதியும் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு ஹபீப் வங்கியில் படிப்படியாகப் பல்வேறு பொறுப்புகளை ஏற்று முன்னேறினார்.
ஹபீப் வங்கியில் பணியாற்றிய காலத்தில், ஆகா ஹசன் அபிதி பாகிஸ்தானின் முக்கியத் தொழிலதிபர்களுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சைகல் குடும்பத்தினர். 1959ஆம் ஆண்டு, ஒரு குறிப்பிட்ட வணிக ஒப்பந்தத்திற்காக சைகல் குடும்பத்தினருக்கு வங்கி உத்தரவாதம் வழங்க ஹபீப் குடும்பத்தினர் தயக்கம் காட்டினர். ஆனால், அந்த ஒப்பந்தத்தில் அபிதிக்கு அதிக ஆர்வம் இருந்தது. எனவே, தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஹபீப் குடும்பத்தினரிடம் அவர் வலியுறுத்தினார். இது எதிர்பாராத விளைவுக்கு வழிவகுத்தது. அவர் ஹபீப் வங்கியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அபிதியின் வங்கித் துறை அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்தி ஒரு புதிய வங்கியைத் தொடங்க சைகல் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதன் விளைவாக, 1959ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி 'யுனைடெட் பேங்க்' நிறுவப்பட்டது. இந்த வங்கிக்கான முதலீட்டை சைகல் குடும்பத்தினர் வழங்கிய போதிலும், வங்கியின் உருவாக்கத்திற்கான அடிப்படைத் திட்டத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் கொண்டிருந்தவர் ஆகா ஹசன் அபிதி.
அடுத்த 10 முதல் 12 ஆண்டுகள், பாகிஸ்தானின் வங்கித் துறையில் யுனைடெட் வங்கியின் பொற்காலமாக அமைந்தன. கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், குவெட்டா போன்ற முக்கிய நகரங்களிலும் சிறிய நகரங்களிலும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் ஆகிய இரு பகுதிகளிலும் யுனைடெட் வங்கி தனது நற்பெயரைப் பெற்றது.
சைகல் குழுமத்தின் ஆதரவும் வணிகத் தொடர்புகளும் பாகிஸ்தானின் பிற தொழில் நிறுவனங்கள் மத்தியிலும் இந்த வங்கியின் மீதான நம்பிக்கையை அதிகரித்தன. 1970ஆம் ஆண்டுக்குள், யுனைடெட் வங்கி பாகிஸ்தான் முழுவதும் 912 கிளைகளைத் திறந்திருந்தது. அவற்றில் 224 கிளைகள் கிழக்கு பாகிஸ்தானில் அமைந்திருந்தன. இது தவிர, வெளிநாடுகளிலும் 24 கிளைகள் தொடங்கப்பட்டிருந்தன.
கிழக்கு பாகிஸ்தானில், ஆகா ஹசன் அபிதியுடன் சலே நக்வியும் இணைந்து பணியாற்றினார். மேற்கு பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், தனது திறமையாலும் உழைப்பாலும் அங்குள்ள வணிகச் சூழலில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.
கடந்த 1971ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, யுனைடெட் வங்கி தனது கிழக்கு பாகிஸ்தான் கிளைகளின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு முன்பே, சலே நக்வி மேற்கு பாகிஸ்தானுக்கு திரும்பியிருந்தார்.
அந்தக் காலகட்டத்தில், ஆகா ஹசன் அபிதி ஒரு சர்வதேச வங்கியை உருவாக்கும் கனவுடன் செயல்பட்டு வந்தார். 1974 ஜனவரி 1ஆம் தேதி, பாகிஸ்தான் அரசு நாட்டின் அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்கியது. அதற்குள், புதிய வங்கியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அபிதி முடித்திருந்தார்.




