இலங்கையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னிச்சையான கைதுகள், நீண்டகாலத் தடுப்புக் காவல் மற்றும் சித்திரவதைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்ட 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய அரசாங்கத்தால் 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலம்' நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கி, சர்வதேச தரத்திற்கு அமைவாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது.

அதேவேளையில், இப்புதிய சட்டமூலமும் தொடர்பான 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்ட மூலமும்' பழைய சட்டத்தை விடவும் ஆபத்தான அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள், சட்ட வல்லுநர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

அதேபோல நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிவில் அமைப்பினர் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சீர்திருத்துவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்து வருகிறது.

புதிய சட்டமூலத்தில் பொலிஸ் அதிகாரிகளிடம் (உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தினர்) பெறப்படும் 'ஒப்புதல் வாக்குமூலங்களை' நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஏனெனில், பழைய சட்டத்தின் கீழ் இந்த ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் அதிகாரமே பொலிஸார் மத்தியில் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோக கலாசாரம் வளர முதன்மைக் காரணமாக அமைந்தது.

ஆனால், அரசாங்கத்தின் இந்த நகர்வை "சர்வதேச சமூகத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஏமாற்றும் தந்திரம்" என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "புதிய சட்டமூலத்தில் ஒப்புதல் வாக்குமூலங்கள் நீக்கப்படுவதாகக் காட்டிக்கொள்ளும் அரசாங்கம், அதேநேரம் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம்' என்ற புதிய சட்டமூலத்தையும் வெளியிட்டுள்ளது. இதில், அதே அதிகாரிகளிடம் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் சாட்சியமாக ஏற்கப்படும் என்ற பழைய சட்டத்தின் கொடூரமான அம்சம் அச்சு அசலாக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது," என சாலிய பீரிஸ் குற்றம் சாட்டினார்.

மேலும், ஒருவரின் தலைமுடி அமைப்பு, பச்சை குத்தல்கள் அல்லது ஆடைகளின் அடிப்படையில் மட்டுமே, அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர் என முடிவு செய்து கைது செய்யப் புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலம் அனுமதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"சந்தேக நபருக்கு எதிராக எவ்வித சான்றும் இல்லாதபோதும், பொலிஸார் ஆஜர்படுத்தினர் என்பதற்காக மட்டுமே அவரைத் தடுப்புக் காவலில் வைக்க நீதவான்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சந்தேக நபர்கள் உயர் நீதிமன்றத்திடம் இருந்து மட்டுமே பிணை பெற முடியும் என்ற நிலையை இது உருவாக்குகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் தன்னிச்சையான கைது கலாசாரத்தை பொலிஸார் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டத்தின்' மூலம் தொடர்வர் என்றும் சாலிய பீரிஸ் குற்றம் சாட்டுகிறார்.

இப்புதிய சட்டமூலத்திற்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்தச் சட்டத்தின் மூலமாக நிறைவேற்று அதிகாரத்திற்கு அளவு கடந்த அதிகாரம் கிடைக்கின்றது. கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் சோதனையிடுதல் தொடர்பில் நிறைவேற்று அதிகாரத்திற்கு அளவு கடந்த அதிகாரம் கிடைப்பதுடன், தனிநபர் சுதந்திரம் தீர்மானிக்கப்படும் சந்தர்ப்பங்களில் நீதிமன்றக் கண்காணிப்பையும் இது கட்டுப்படுத்துகிறது. இது நடைமுறையில் இருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிடவும் மோசமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது," என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "1979இல் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்டு 1982இல் நிரந்தரமாக்கப்பட்ட பழைய சட்டத்தால் தமிழ் மக்கள் மட்டுமன்றி, 1989-91 காலப்பகுதியில் ஜே.வி.பி.யினரும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். புதிய சட்டமூலத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இல்லை என அரசு கூறினாலும், அது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. பெயரளவில் மட்டுமே பழைய சட்டம் நீக்கப்படுகிறதே தவிர, புதிய சட்டங்களில் அதைவிட மோசமான செயல்பாடுகளே காணப்படுகின்றன," எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "2021 காலப்பகுதியில் பழைய சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி போராட்டங்களை நடத்தியதே தற்போதைய ஆளும்கட்சியினர்தான். தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அதைவிட கொடூரமான அதிகாரங்களைக் கொண்ட சட்டத்தை உருவாக்குவது மக்களுக்குச் செய்த துரோகமாகும். முப்படைகளுக்கும் நிரந்தர அதிகாரம் வழங்குவது ஆட்சியை முற்றுமுழுதாக ராணுவமயமாக்கலை நோக்கி நகர்த்தும்," என எச்சரித்தார்.

மேலும் அவர் சுட்டிக்காட்டுகையில், "பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தவறானவை எனச் சுட்டிக்காட்டப்பட்ட சில விஷயங்கள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்ட வரைபில் நீக்கப்பட்டுள்ளன என்பது உண்மையே. அதேவேளையில், தற்போது இயற்றப்பட்டுள்ள புதிய சட்ட வரைபு பழைய சட்டத்தை விடவும் மிகவும் மோசமான தன்மைகளைக் கொண்டுள்ளது என்ற விவாதமும் எழுகின்றது. பழைய சட்டத்தைவிட மேலான சில அம்சங்களை இந்தப் புதிய சட்டமூலம் கொண்டிருக்கின்றது என்பதற்காக இதை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டமே மிகவும் கொடூரமான ஒன்று என்ற நிலையில், அதிலிருந்து சில விஷயங்களை மட்டும் மாற்றிவிட்டு இந்தப் புதிய சட்டமூலம் மேம்பட்டது எனக் கூறுவது பொறுப்பற்ற செயல்," எனக் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2000ஆம் ஆண்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசத்தை அனுபவித்து, கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பெயர் குறிப்பிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தனது அனுபவங்களை பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார்.

"எந்தவித ஆதாரங்களும் இல்லாத நிலையிலும் என்னைத் தொடர்ச்சியாகத் தடுப்புக் காவலில் வைத்துச் சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்கள். என்னுடன் இருந்த பல தமிழ் அரசியல் கைதிகளுக்கும் இதே நிலை ஏற்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுவதற்கே 20 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில், தனது எதிர்காலமும் வாழ்க்கையும் முற்றாக நாசமாகி இன்று நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் வேதனையுடன் கூறினார்.