ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள ஒரு பள்ளியில், ஆறு வயது சிறுமியை எட்டு வயது சிறுவன் ஒருவன் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம், குழந்தைகளின் நடத்தை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பஞ்ச்குலா காவல் துணை ஆணையர் அதிதி சிங் கூறுகையில், "சிறார் நீதிச் சட்டத்தின்படி, நிபுணர்களைக் கொண்டு அந்த எட்டு வயது சிறுவனின் நடத்தை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

குழந்தைகள் இயல்பாகவே குறும்புத்தனம் செய்வார்கள், கோபப்படுவதும் எரிச்சலடைவதும் அவர்களின் வளர்ச்சிப் பருவத்தின் ஒரு பகுதி என்று கூறப்படுவதை நாம் கேள்விப்படுகிறோம்.

ஆனால், குழந்தைகளின் நடத்தையில் எது இயல்பானது, எது கவலைக்குரியது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக, அவர்களின் நடத்தை எல்லைமீறிச் சென்று, ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குத் தடையாக அமையும்போது, அதைக் கவனிக்க வேண்டியது முக்கியம்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய நடத்தை மாற்றங்கள் எவை? குழந்தைகளின் நேர்மறையான வளர்ச்சிக்கு உகந்த சூழலை எவ்வாறு உருவாக்குவது? என்பது குறித்து உளவியலாளர்களிடம் ஆலோசனை கேட்டோம்.

பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் மந்தீப் கெளர், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை என்கிறார்.

டாக்டர் மந்தீப் கெளர், குழந்தைகளிடம் காணப்படும் சில உடல்ரீதியான செயல்பாடுகள் அவர்களின் நடத்தையில் ஏதேனும் சிக்கல் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார். அவற்றில் சில:

உளவியலாளர் பூர்ணிமா அகர்வாலும் இதே கருத்தை வலியுறுத்துகிறார். ஒரு குழந்தை எதிர்மறையான செயலில் ஈடுபட்ட பிறகு எவ்வாறு நடந்துகொள்கிறது என்பது, அதன் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவும் என அவர் அறிவுறுத்துகிறார்.

இது குறித்து விரிவாக பேசும் அவர், "சில குழந்தைகள் பறவைகள், பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்களைப் பிடித்துத் துன்புறுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இத்தகைய செயல்களில் ஈடுபட்ட பிறகும் அவர்களுக்குக் குற்ற உணர்வு ஏற்படவில்லை என்றால், பெற்றோர்கள் அவர்களிடம் இதுகுறித்துப் பேசி, அவர்களின் நடத்தையைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்" என்கிறார்.

குழந்தைகள் மற்றவர்களுடன் எப்படி தொடர்புகொள்கிறார்கள், அவர்களின் உடல் மொழி எவ்வாறு இருக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கவனிப்பதன் மூலம், அவர்களின் மனநிலையைப் பெற்றோர்கள் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆறு முதல் 12 வயது வரையிலான குழந்தைகள், பருவமடைதலை நோக்கிய மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்குவதுடன், மனதளவிலும் முதிர்ச்சியடையத் தொடங்குகிறார்கள் என்கிறார் உளவியலாளர் பூர்ணிமா அகர்வால்.

அவர் கூறுகையில், "குறிப்பாக, 9 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் வேகமான உடல் மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் குழந்தைகளுக்குப் பல கேள்விகள் எழுகின்றன. அதேவேளையில், தங்கள் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதிலும் அவர்கள் சிரமப்படலாம்.

"இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி எரிச்சல் வரலாம் அல்லது எளிதில் கோபப்படலாம். எனவே, அவர்கள் சந்திக்கும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு, கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்" என்று அவர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

மனநலக் கோளாறுகள் தொடர்பான சர்வதேச வகைப்பாட்டுக் கையேடான ஐ.சி.டி-11, வன்முறை நிறைந்த விளையாட்டுகளின் தாக்கத்தையும் ஒரு மருத்துவ நிலையாக வகைப்படுத்தியுள்ளதை உளவியலாளர் பூர்ணிமா அகர்வால் சுட்டிக்காட்டுகிறார்.

"குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ற விளையாட்டுகளை விளையாடுவதையும், திரைப்படங்கள் உள்ளிட்ட பிற உள்ளடக்கங்களைப் பார்ப்பதையும் பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும்" என்கிறார் அவர்.

ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் குறித்துப் பேசும் அவர், குழந்தைகள் பல நேரங்களில் பெற்றோருடன் அமர்ந்து இதுபோன்ற திரைப்படங்களைப் பார்ப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். திரையில் காண்பிக்கப்படுவதை நிஜம் என்று குழந்தைகள் நம்பிவிடலாம். அத்தகைய காட்சிகள் அவர்களின் சிந்தனையிலும் நடத்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

"குழந்தைகளுக்குக் குறைந்தது 14 அல்லது 15 வயதாகும் வரை, அவர்கள் விளையாடும் விளையாட்டுகள், பார்க்கும் திரைப்படங்கள், கார்ட்டூன்கள் ஆகியவற்றைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அதேபோல், திரை முன் செலவிடும் நேரத்தைக் குறைத்து, பூங்கா அல்லது விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்குச் சென்று விளையாடுவதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்" என்று பூர்ணிமா பரிந்துரைக்கிறார்.

மனநிலையைச் சமநிலையில் வைத்திருக்க உதவுவதில் உடல் செயல்பாடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என அவர் கூறுகிறார்.

குழந்தைகளின் நடத்தையில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்களைக் கவனித்தால், பெற்றோர்கள் அவர்களிடம் அதுகுறித்துப் பேசி, அத்தகைய நடத்தைக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று டாக்டர் மந்தீப் கௌர் பரிந்துரைக்கிறார்.

"வீட்டில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் எதைப் பற்றியும் தயக்கமின்றிப் பெற்றோரிடம் பேசுவார்கள். தவறு செய்திருந்தால்கூட, அதை மறைக்காமல் ஒப்புக்கொண்டு, சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுவதற்கான நம்பிக்கையை அந்தச் சூழல் அவர்களுக்கு அளிக்க வேண்டும்" என்கிறார் அவர்.