இதையடுத்து அவர் சுயநினைவை இழந்தார். பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது தலை பலமாகத் தரையில் மோதியதால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

ஆனால், ஐசக்கிற்குச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

அவர் 'யெகோவாவின் சாட்சிகள்' (Jehovah's Witness) என்ற கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர். மத நம்பிக்கை காரணமாக ரத்தம் செலுத்தும் எந்தவிதமான சிகிச்சையையும் ஏற்கமாட்டேன் என்பதைக் குறிக்கும் 'ரத்தம் வேண்டாம்' என்ற அட்டையை அவர் வைத்திருந்தார்.

இதன் காரணமாக, ஐசக்கின் மூளையில் தேங்கியிருந்த திரவத்தை வெளியேற்றுவதற்கான மருத்துவச் செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வாக்சஹாச்சி பகுதியைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கு, ஐசக் மீண்டும் சுயநினைவுக்குத் திரும்பியதும் பேசத் தொடங்கியதும் நம்பிக்கையை ஏற்படுத்தின.

ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்கக் கூடாது என்ற தனது மத நம்பிக்கையில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக ஐசக்கும் தெரிவித்தார்.

ஆனால், அவரது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ஐசக் மீண்டும் கோமா நிலைக்குச் சென்றார். அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.

ஐசக் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசர அறுவை சிகிச்சை மட்டுமே வழி என்றும், அந்த அறுவை சிகிச்சைக்கு ரத்தம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

ஆனால், வாழ்நாள் முழுவதும் 'யெகோவாவின் சாட்சிகள்' மத நம்பிக்கையைப் பின்பற்றி வந்த ஐசக்கின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, ரத்தம் செலுத்த வேண்டிய அறுவை சிகிச்சையை ஏற்க வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.

ஐசக்கின் இரட்டைச் சகோதரரான ஜேக்கப் வால்டெஸ், அவரைப் புத்திசாலித்தனமான மனிதர் என்றும், தன்னார்வப் பணிகளிலும் முதியவர்களுக்கு உதவுவதிலும் ஆர்வம் கொண்டவர் என்றும் விவரிக்கிறார்.

2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி, மருத்துவர்கள் ஐசக்கிற்கு அளிக்கப்பட்டு வந்த உயிர் காக்கும் மருத்துவ உதவியை நிறுத்தியபோது அவர் உயிரிழந்தார்.

ஐசக் உயிரிழந்து 23 நாட்களே ஆகியிருந்த நிலையில், 'யெகோவாவின் சாட்சிகள்' மதப் பிரிவின் நிர்வாகக் குழு, ரத்தம் செலுத்தும் சிகிச்சை தொடர்பான தனது போதனைகளில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்தது.

இந்த மாற்றம், ஐசக் மறுத்த உயிர் காக்கும் சிகிச்சையை ஏற்றுக்கொள்வதற்கு மதரீதியாக அவருக்கு அனுமதி அளித்திருக்கக் கூடியதாக இருந்தது.

புதிய விதிமுறையின்படி, தானமாகப் பெறப்பட்ட ரத்தத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பெரும்பாலான மருத்துவச் சிகிச்சைகள் இனி அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குத் தடை செய்யப்பட்டவை அல்ல.

இத்தகைய சிகிச்சைகளை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதைத் தனிநபர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

தனது இரட்டைச் சகோதரரின் மரணத்திலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஜேக்கப்பிற்கு இந்த அறிவிப்பு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த முடிவை 'யெகோவாவின் சாட்சிகள்' தலைமை முன்பே எடுத்திருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

அவ்வாறு செய்திருந்தால் ஐசக் இன்றும் உயிருடன் இருந்திருக்கக் கூடும் என்று ஜேக்கப் பிபிசியிடம் தெரிவித்தார்.