ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ உதவும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றாலும், வயதாகும்போது மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்காணிப்பதன் மூலம், மூளையின் முதுமையடையும் செயல்முறையைப் புதிய தொழில்நுட்பங்களால் மெதுவாக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
ஓர் அழகான காலை வேளையில், லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு கிழக்கே சுமார் ஒரு மணிநேரப் பயணத் தொலைவில் உள்ள லோமா லிண்டா நகரில் வசிக்கும் மரிஜ்கே, அவரது கணவர் டாம் ஆகியோர் என்னைக் காலை உணவுக்கு தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தனர். நெதர்லாந்தை சேர்ந்த மரிஜ்கேவுக்கு வயது 76.
அவர்களின் காலை உணவு மேசையில் ஓட்ஸ், சியா விதைகள், பெர்ரி பழங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால், சர்க்கரை சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட தானிய உணவுகளோ காபியோ இல்லை. அவர்களின் எளிமையான, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், லோமா லிண்டா நகரின் வாழ்க்கை முறையையும் பிரதிபலிப்பதாக இருந்தது.
அமெரிக்காவின் லோமா லிண்டா நகரம், உலகில் மக்கள் நீண்ட காலம் வாழும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தகைய பகுதிகள் 'நீல மண்டலங்கள்' (Blue Zones) என்று அழைக்கப்படுகின்றன. குறிப்பாக, லோமா லிண்டாவில் வசிக்கும் செவன்த்-டே அட்வென்டிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர்கள், மற்றவர்களைவிட நீண்ட காலம் வாழ்வதுடன், நல்ல ஆரோக்கியத்தையும் பேணுகின்றனர்..
இந்தச் சமூகத்தினர் பொதுவாக மது அருந்துவதில்லை; காஃபின் உள்ள பானங்களையும் தவிர்க்கின்றனர். பெரும்பாலும் சைவ அல்லது முழுமையான தாவர அடிப்படையிலான உணவுகளையே உட்கொள்கின்றனர். உடலை ஆரோக்கியமாகப் பராமரிப்பது மதக் கடமைகளில் ஒன்று என அவர்கள் கருதுகின்றனர்.
இந்த வாழ்க்கை முறையை அவர்கள் 'ஆரோக்கியச் செய்தி' என்று அழைக்கின்றனர். இதுவே லோமா லிண்டா நகரம் உலகளவில் கவனம் பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வது எவ்வாறு என்பதை அறிய, பல தசாப்தங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லோமா லிண்டா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேரி ஃபிரேசர் என்னிடம் பேசுகையில், இங்குள்ள செவன்த்-டே அட்வென்டிஸ்ட் சமூகத்தினர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதுடன், நோயின்றி ஆரோக்கியமாக வாழும் காலமும் அதிகமாக இருப்பதாகக் கூறினார். இதை 'ஆரோக்கியமான வாழ்நாள்' என்கிறோம். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, இந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளும், ஆண்கள் சுமார் ஏழு ஆண்டுகளும் கூடுதலாக நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர்.
மரிஜ்கேவும் டாமும் தங்கள் வாழ்க்கையின் பிற்காலத்தில்தான் லோமா லிண்டாவுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும், இப்போது அவர்கள் அந்தச் சமூகத்தின் வாழ்க்கை முறையை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்கின்றனர்.
லோமா லிண்டாவில் மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குப் பின்னால் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள்; மனதுக்கு சவால் அளிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். மேலும், மதம் சார்ந்த சமூக அமைப்பு வழங்கும் நெருக்கமான உறவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
இங்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
நான் ஜூடி என்பவரைச் சந்தித்துப் பேசினேன். அவர், முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் 112 பேருடன் வசித்து வருகிறார். அங்கு மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசுவதற்கும், ஆழமான உரையாடல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எப்போதுமே இருப்பதாக அவர் கூறினார்.
"மற்றவர்களுடன் பழகுவது நமது மூளைக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நான் முன்பு உணரவில்லை. சமூகத் தொடர்புகள் இல்லாவிட்டால், மூளை படிப்படியாகச் சுருங்கிவிடும் என எனக்க்குத் தோன்றுகிறது" என்றார் ஜூடி.
சமூகத் தொடர்புகள் உடல்நலத்துக்கு அளிக்கும் நன்மைகளையும், தனிமையைத் தவிர்ப்பதன் அவசியத்தையும் அறிவியல் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது. ஆனால், தற்போது ஒருவரின் மூளை இயல்பான வேகத்தைவிட விரைவாக முதுமையடைகிறதா என்பதைக் கண்டறியவும் முடிகிறது. இதன் மூலம் அவர்களின் மூளை ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணித்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளையும் சிகிச்சைகளையும் வழங்க முடியும்.
எதிர்காலத்தில் நோய்களைக் குணப்படுத்துவதைவிட, அவை ஏற்படுவதற்கு முன்பே கண்டறிந்து தடுப்பதற்கே மருத்துவத் துறை அதிக முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. ஒவ்வொருவரின் உடல்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப சிகிச்சை அளிக்கவும், நோய்களை முன்கூட்டியே கண்டறியவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவு தொழில்நுட்பங்கள் உதவவுள்ளன.
நமது மூளை எவ்வாறு முதுமையடைகிறது என்பதைக் கணித்து, அதன் செயல்பாட்டில் ஏற்படும் சரிவை முன்கூட்டியே மதிப்பிடும் கணினி மாதிரிகளைத் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் முதுமையியல் மற்றும் கணக்கீட்டு உயிரியல் துறைகளின் இணைப் பேராசிரியரான ஆண்ட்ரே இரிமியா எனக்குக் காட்டினார்.
ஆரோக்கியமாக முதுமையடையும் மூளைகளிலும், டிமென்ஷியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மூளைகளிலும் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்காக, எம்.ஆர்.ஐ ஸ்கேன் படங்கள், 15,000 மூளைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த மாதிரிகளை அவர் உருவாக்கியிருந்தார்.
"மனிதர்களால் எளிதில் அடையாளம் காண முடியாத சில வடிவங்களையும் போக்குகளையும் கண்டறிவதற்கு இது மிகவும் நுட்பமான வழியாகும். ஆனால், செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளால் அவற்றைக் கண்டறிய முடியும்" என்று அவர் கூறினார்.
பேராசிரியர் இரிமியா, உண்மையிலேயே என் சிந்தனைகளுக்குள் ஊடுருவிப் பார்த்தது போன்றதொரு அனுபவத்தை எனக்குக் கொடுத்தார்.
அவரைச் சந்திப்பதற்கு முன்பே, நான் எஃப்.எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்திருந்தேன். அதன் முடிவுகளை ஆய்வு செய்த பேராசிரியர் இரிமியா, எனது உண்மையான வயதைவிட மூளையின் வயது எட்டு மாதங்கள் அதிகமாக இருப்பதாகக் கூறினார். எனினும், இந்த மதிப்பீட்டில் இரண்டு ஆண்டுகள் வரை பிழை இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களும் வணிக ரீதியில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. பிரெயின்கீ என்ற நிறுவனம், உலகெங்கிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்தச் சேவையை வழங்கி வருகிறது. அதன் நிறுவனர் ஓவன் பிலிப்ஸ், எதிர்காலத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துகொள்வது மேலும் எளிதாகிவிடும் என்று என்னிடம் கூறினார்.




