பல புத்தகங்கள் போலி பதிப்பகத்தால் பொய்யான எழுத்தாளர்கள் பெயர்களில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்த அவர், இதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன் அந்தப் புத்தகங்களையும் உடனடியாக அகற்ற வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த ஊழல் திமுக ஆட்சியில் நடந்தி இருப்பதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார். இது பற்றி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

பெரியார் அறிவுலகத்தால் திமுக தலைவருக்குக் கிடைத்த பெருமையை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு பரப்பப்படும் தகவல் இது என்று திமுக தரப்பில் பிபிசியிடம் பதில் தரப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதலில் என்ன நடந்துள்ளது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தது. சென்னையில் உள்ள பதிப்பகத்தின் முகவரிக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றபோது தெரிய வந்தது என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

கோவையின் இதயப் பகுதியான காந்திபுரத்தில் தமிழக அரசால் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பெரியார் நூலகத்தை, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இது திமுகவின் திட்டம் என்று திமுகவினர் அதே நாளில், அதே வளாகத்தில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். பெரியார் அறிவுலகத்தை திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த நவம்பர் 4ஆம் தேதியன்று நேரில் வந்து பார்வையிட்டார். அன்று மாலை திராவிடர் கழகம் சார்பில் அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்தச் சூழலில்தான் எழுத்தாளர் பெருமாள் முருகனின் இந்தப் பதிவு, பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. அவர் வெளியிட்ட பதிவில், ''நூல் கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருக்கிறது. இந்த நூலகத்திற்கு விநியோகிப்பதற்காகவே புதுப்பதிப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மேம்படாத செய்யறிவு மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் பெயர்கள் எல்லாம் பொய்ப் பெயர்கள். நூல்களில் காணப்படும் 'பன்னாட்டுத் தரப் புத்தக எண்' (ISBN) அனைத்தும் பொய்யானவை. அவற்றை இணையத்தில் தேடினால் அப்படிப்பட்ட எண் இல்லை என்றே தகவல் வருகிறது'' என்றும் கூறியிருந்தார்.

பெருமாள் முருகன் இந்தப் பதிவை வெளியிடுவதற்கு முன்பே, அறிவுலகத் திறப்பு விழாவுக்கு மறுநாள் கடந்த அக்டோபர் 17ஆம் தேதியன்றே இதுகுறித்து கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் பாலசுப்ரமணியம் பொன்ராஜ், தனது முகநூல் பதிவில் எழுதியுள்ளார்.

அதில், ''இரண்டு பெரிய அலமாரிகள் முழுக்க 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் ஏதேதோ தலைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் எழுதிய நூல்கள். ஆய்வுக் கட்டுரைகளா, இல்லை பொது நூல்களா இல்லை ஏஐ உருவாக்கியதா என்று தெரியவில்லை. பாரதியார் கதைகள் 'இன்றைக்கும் இனிமை' என்ற புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு: 'தமிழ் சின்மய பாரம்பரியத்தின் பெருமகுடத்தைச் சுருக்கி... பாரதியார் அத்தனையும் ஒரு கற்பனையாளராக மாறியவர்... அவர் கதைகள் இன்னும், இன்றைக்கு... ஒவ்வொரு நூலும் ரூ1000 மேல் விலை. இதற்கு மேல் இதை விளக்க வேண்டியதில்லை'' என்று பதிவிட்டிருந்தார். ஆனால் பெருமாள் முருகனின் பதிவுக்குப் பின்பே இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

பிபிசியிடம் பேசிய பாலசுப்ரமணியம், ''பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டபோது அதைப் பெருமையாகக் குறிப்பிட்டுப் பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டிருந்தேன். ஆனால் இங்குள்ள புத்தகங்களைப் பார்த்தபோது எனக்குப் பெரும் ஏமாற்றமாகிவிட்டது. அதிலும் அந்த 'அகல் விளக்கு' பதிப்பகப் புத்தகங்களைப் பார்த்த பின்பு, இது எத்தகைய விளைவை ஏற்படுத்துமோ என்ற அச்சம் உருவாகிவிட்டது. பெரியார் பெயரிலான நூலகத்தில் பெரியாரைக் குறித்த புத்தகங்களே மிகக் குறைவாயிருந்தன. கருணாநிதி புத்தகம் இல்லவே இல்லை'' என்றார்.

பெரியார் அறிவுலகத்தின் 4வது தளத்தில்தான் தமிழ் நூல்கள் பிரிவு இருக்கிறது. அதிலுள்ள ஒரு பகுதி அதாவது 2 பக்க அலமாரிகளிலும் 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் புத்தகங்கள் மட்டுமே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தான் எண்ணிப் பார்த்ததில் அவற்றில் சுமார் 1800 புத்தகங்கள் இருந்ததாக பெருமாள் முருகன் தெரிவித்திருந்தார்.

இந்தப் புத்தகங்களில் உள்ள 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் முகவரியில் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த முகவரி இடம் பெற்றுள்ளது. ஃபீனிக்ஸ் பதிப்பகமும் அதே முகவரியில் இருப்பதாக மற்றொரு புத்தகத்தில் உள்ளது.

அந்த முகவரியை பிபிசி தமிழ் நேரில் ஆய்வு செய்தபோது, அங்கு பதிப்பகத்தின் பலகையோ அல்லது குறிப்போ இல்லை.

ஆனால் அங்கு புத்தகங்களைக் கையாளும் நடவடிக்கைகள் சில நேரங்களில் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அந்தக் கட்டடத்தில் விசாரித்தபோது அங்கிருந்த வயதான பெண்மணி ஒருவர் "இந்த முகவரியில்தான் அகல்விளக்கு பதிப்பகம் உள்ளது. அதன் பதிப்பாளர் மோகன் தன்னுடைய மகன்தான்" என்று கூறினார்.

பதிப்பாளர் மோகனை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், அகல் விளக்கு பதிப்பகம் குறித்த ஆவணங்களை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை.

சக்தி சூர்யா என்ற எழுத்தாளர் பெயரில், 'அகல் விளக்கு' பதிப்பகம் வெளியிட்டுள்ள ''நகர நீர் சட்டங்கள்: பொதுநலப் போராட்டம்'', ''நல்ல செயல்கள்'', ''இந்தியாவில் ஆங்கில மொழியின் வரலாறு'' ஆகிய புத்தகங்கள் அங்குள்ளன. சக்தி சூர்யா என்ற பெயரில் உண்மையிலேயே ஒரு எழுத்தாளர் இருப்பதால், அவரிடம் பிபிசி தமிழ் பேசியது. பத்திரிகையாளராகவும் இருக்கும் அவர், ''சந்தாலி'', ''நரவேட்டை'', ''செந்தட்டி'' என 3 புத்தகங்களை எழுதியுள்ளார். ஆனால் மேலே குறிப்பிட்ட புத்தகங்களைத் தான் எழுதவில்லை என்று பிபிசியிடம் கூறினார் சக்தி சூர்யா.

பொய்யான எழுத்தாளர்கள் பெயரில் இருந்தாலும் 'அகல் விளக்கு' பதிப்பக புத்தகங்கள் அனைத்துமே கனமான அட்டைகளாக இருந்ததையும், ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் 500 ரூபாய் முதல் துவங்கி 2,000 ரூபாய் வரை இருந்ததையும் பிபிசி தமிழ கள ஆய்வில் காண முடிந்தது.

பிபிசியிடம் பேசிய தமிழ் இலக்கிய ஆய்வு (பி.எச்.டி.) மாணவி சுபல்லா, ''என்னைப் போன்ற ஆய்வு மாணவிகள் இங்கு தினமும் வந்து பல்வேறு நூல்களையும் ஆதாரமாக எடுத்துப் படிக்கிறோம். இங்கே பல நல்ல புத்தகங்கள் உள்ளன. இதற்கிடையில் இந்த 'அகல் விளக்கு' பதிப்பகப் புத்தகங்களைப் பார்த்தேன். அதிலுள்ள 'நாலடியார்' என்ற புத்தகத்தில் முதல் வார்த்தையே 'நாலடியார் நான்கு வகைப்படும்' என்பதைப் பார்த்தபோது பேரதிர்ச்சியாகிவிட்டது. அதிலுள்ள எல்லா புத்தகங்களுமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே மேம்படாத காலத்தில் அவற்றால் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது'' என்றார்.

''இதே நூலகத்திலுள்ள வேறு பல புத்தகங்களையும் இதிலுள்ள தரவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அகல் விளக்கு புத்தகங்களிலுள்ள தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நம்பகத்தன்மை இல்லாத, பொய்யான தகவல்கள் என்பது தெரிய வந்தது. அறிவைத் தேடி என்னைப் போன்ற மாணவர்கள், ஆய்வாளர்கள் வரும் இந்த நூலகத்தில் இத்தகைய புத்தகங்களை வைத்திருப்பது வருத்தம் என்றால் போலி நூல்கள் என்று தெரிந்த பின்னும் அகற்றாமல் இருப்பது இன்னும் வேதனை'' என்றார் சுபல்லா.

அந்த அலமாரிகளில் ஏற்கெனவே இருந்த 'நாலடியார்' புத்தகத்தைத் தற்போது பார்க்க முடியவில்லை. அதேபோன்று 'திரிஷா விஜய்' என்ற எழுத்தாளர் பெயரிலும் புத்தகம் இருந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குறிப்பிட்டிருந்தார். அப்படியொரு எழுத்தாளர் பெயரிலான புத்தகத்தையும் காணவில்லை.