இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு புதிய அரசை அமைப்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான காடி ஐசென்கோட்டுக்கு (Gadi Eizenkot) அரபுக் கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்துள்ளதால், அந்நாட்டின் அரசியல் அதிகாரச் சமன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, வியாழக்கிழமையன்று அதிபர் ஐசக் ஹெர்சாக் நடத்திய கலந்தாலோசனைகளின்போது, ஐசென்கோட்டுக்கு ஆதரவளிப்பதாக அரபுக் கட்சிகள் அறிவித்தன.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தது 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அரபுக் கட்சிகள் மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது அவை ஆதரவளிப்பதால், ஐசென்கோட்டுக்கு 67 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைவிட 6 இடங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது நீண்டகாலக் கூட்டணிக் கட்சியும் தீவிர மதவாதக் கட்சியுமான 'யுனைடெட் டோரா ஜூடாயிசம்' கட்சியின் ஒரு பிரிவினரும் அவருக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர்.
'ராம்' (Ra'am) கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ், ஐசென்கோட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வியாழக்கிழமையன்று அறிவித்தார்.
எட்டு இடங்களைக் கொண்ட அவரது கட்சி, பாலத்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் தனித்தனி நாடுகள் என்ற அடிப்படையிலான இரு நாட்டுத் தீர்வுக்கும், டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காஸா திட்டத்துக்கும் தனது ஆதரவை மீண்டும் தெரிவித்தது. மேலும், ஹமாஸ் உள்ளிட்ட அனைத்து ஆயுதக் குழுக்களிடம் இருந்தும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, அவை நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இதற்கு முன்பு, நஃப்தாலி பென்னட் தலைமையிலான அரசாங்கத்துக்கு 'ராம்' கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்திருந்தது. 11 இடங்களைக் கொண்ட மற்றொரு முக்கிய அரபு அரசியல் கூட்டணியான 'ஜாயின்ட் லிஸ்ட்' அமைப்பும் ஐசென்கோட்டுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது. நெதன்யாகு அரசாங்கத்தைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இந்த முடிவு அவசியமானது என்று அந்தக் கூட்டணி தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய அரசியல் சூழலில் தங்களுக்கு வேறு சிறந்த வாய்ப்பு இல்லாததால், "மோசமான ஒரு தேர்வுக்கும், அதைவிட மோசமான ஒரு தேர்வுக்கும் இடையே ஒன்றைத் தேர்வு செய்துள்ளோம்" என்றும் அக்கூட்டணி கூறியுள்ளது.
'ஜாயின்ட் லிஸ்ட்' கூட்டணியின் தலைவர் யூசெஃப் ஜபரீன், தங்கள் ஆதரவு முடிவு, அரசியல் மாற்றத்தை விரும்பும் அரபு வாக்காளர்களின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில், அரபு குடிமக்கள் இனவாதம், பாகுபாடு, குற்றச் செயல்கள், அரசியல்-சமூக ரீதியிலான புறக்கணிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டதாக யூசெஃப் ஜபரீன் குற்றம் சாட்டினார்.
"அரபு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர். ஆனால், ஐசென்கோட்டுடன் எங்களுக்குப் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன" என்று ஜபரீன் தெரிவித்தார்.
ஐசென்கோட்டின் அரசியல் கொள்கைகள் மட்டுமின்றி, தேர்தல் பிரசாரத்தின்போது அரபு குடிமக்கள் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அவர் உறுதியான எதிர்ப்பு தெரிவிக்காததும் இந்தக் கருத்து வேறுபாடுகளில் அடங்கும்.
"நாங்கள் நல்லதற்கும் மிகச் சிறந்ததற்கும் இடையே ஒன்றைத் தேர்வு செய்யவில்லை. மாறாக, மோசமான ஒன்றுக்கும் அதைவிட மோசமான ஒன்றுக்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்று அவர் கூறினார். இதற்கிடையில், மூத்த அரபு நாடாளுமன்ற உறுப்பினர் அகமது திபி, 'ஜாயின்ட் லிஸ்ட்' கூட்டணி புதிய அரசாங்கத்தில் நேரடியாகப் பங்கேற்காது என்று தெரிவித்தார்.
"நாடாளுமன்றத்தில் சிறுபான்மை அரசாங்கம் அமைந்தால், அது கவிழாமல் தடுப்பதற்குத் தேவையான ஆதரவை வெளியில் இருந்து வழங்கும் அணியாக எங்கள் கூட்டணி செயல்படக்கூடும். ஆனால், நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லாத ஓர் அரசாங்கத்தை அமைப்பதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்" என்றும் அவர் கூறினார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், அந்த 53 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் அவருக்குக் கிடைக்குமா என்பதுமே கேள்விக்குறியாக உள்ளது.
'யுனைடெட் தோரா ஜூடாயிசம்' கூட்டணியின் ஒரு பிரிவான 'டெகல் ஹதோரா', எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. அந்தக் கட்சிக்கு மொத்தமுள்ள ஏழு இடங்களில் நான்கு இடங்கள் இந்தப் பிரிவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தியின்படி, ஹரேதி எனப்படும் தீவிர மதப்பற்றுள்ள யூத சமூகத் தலைவர்கள் நெதன்யாகுவிடம் இருந்து விலகிச் சென்றுள்ளனர். அந்த சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வருவதில் நெதன்யாகு அரசாங்கம் தோல்வியடைந்ததே இதற்குக் காரணம்.
இதற்கிடையில், அரபுக் கட்சிகள் வெளிநாட்டு உதவியுடன் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக எந்த உறுதியான ஆதாரத்தையும் அக்கட்சியால் முன்வைக்க முடியவில்லை.
தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, நெதன்யாகுவும் அவரது லிக்குட் கட்சியினரும் சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அவற்றில், வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மூன்று அரசியல் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும் அடங்கும்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு 'ராம்' கட்சியுடன் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.




