"டிஜிஎஸ்ஆர்டிசி (தெலங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழகம்) பேருந்தில் பயணித்ததற்கு நன்றி. உங்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய டிஜிஎஸ்ஆர்டிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எங்கள் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம். பாதுகாப்பான பயணத்துக்கு எப்போதும் ஆர்டிசி பேருந்துகளையே தேர்வு செய்யுங்கள். நன்றி."

மணுகூர் பணிமனையைச் சேர்ந்த இளம் நடத்துநரான பிரவாலிகா இந்த அறிவிப்பை வெளியிட்ட காணொளி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. அவரை ஏற்கெனவே அறிந்தவர்கள் மட்டுமின்றி, அந்தக் காணொளியைப் பார்த்த பலரும் இப்போது பிரவாலிகாவை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அக்டோபர் 25ஆம் தேதி பெண் பயணி ஒருவர் தாக்கியதைத் தொடர்ந்து பேருந்தில் இருந்து கீழே விழுந்த பிரவாலிகா, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 3ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது தாயார் விஜயலட்சுமி பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரவாலிகாவின் தந்தையும் ஆர்டிசி ஊழியராகப் பணியாற்றியவர். அவர் பணியில் இருக்கும்போதே சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கருணை அடிப்படையிலான பணி நியமனத் திட்டத்தின் கீழ் பிரவாலிகாவுக்கு மணுகூர் பணிமனையில் நடத்துநர் வேலை கிடைத்தது. தற்போது பிரவாலிகாவும் உயிரிழந்துவிட்டதால் அவரது தாயார் தனித்து விடப்பட்டுள்ளார்.

"அன்று அவள் பணியில் இருந்தாள். பத்ராசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். வீட்டிலிருந்து கிளம்பும்போது காலை உணவுகூட சாப்பிடவில்லை. நான் தொலைபேசியில் அழைத்து, 'கிளம்பும்போது சாப்பிடவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு, 'அம்மா, பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பத்ராசலம் சென்றதும் பேருந்து நிலையத்தில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று கூறினாள்" என பிரவாலிகாவின் தாயார் விஜயலட்சுமி நினைவுகூர்ந்தார்.

"பின்னர் நான் தேவாலயத்துக்குச் சென்றேன். அங்கிருந்தபோது, 'உங்கள் மகளுக்குச் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. பதற்றப்படாமல் பத்ராசலம் மருத்துவமனைக்கு வாருங்கள்' என்று தொலைபேசியில் அழைத்தார்கள். நான் அங்கு சென்றேன். ஆனால், மகளின் உடல்நிலை சரியில்லை என்று கூறி ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்தார்கள். 10 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள்," என்று விஜயலட்சுமி கூறினார்.

பிரவாலிகா பிஎட் படிப்பை முடித்திருந்தார். அவரது தந்தையும் ஆர்டிசியில் பணியாற்றியதால், அவர் செய்த அதே வேலையை பிரவாலிகா மிகவும் விரும்பிச் செய்ததாக அவரது தாயார் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பிஎட் படிப்புடன் சேர்த்து மென்பொருள் பயிற்சியும் எடுத்திருந்தாள். அவள் வேலையில் சேர வேண்டிய நேரத்தில் என் கணவரின் உடல்நிலை மோசமடைந்தது. ஹைதராபாத்தில் உள்ள தார்னாகா ஆர்டிசி மருத்துவமனையில் ஆறு மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். என் மகளும் அவருடனேயே தங்கியிருந்தாள். அவருடைய சிறுநீரகங்கள் செயலிழந்து அவர் உயிரிழந்தார். அதன் பிறகு, கருணை அடிப்படையில் அந்த வேலை என் மகளுக்கு வழங்கப்பட்டது. 'இது அப்பாவின் வேலை தானே அம்மா, நான் செய்கிறேன்' என்று அவள் கூறினாள்" என விஜயலட்சுமி விளக்கினார். 26 வயதான பிரவாலிகாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது தாயார் திட்டமிட்டிருந்தார்.

"'இன்னும் எனது வேலை நிரந்தரமாகவில்லையே அம்மா, நிரந்தரமான பிறகு திருமணம் செய்துகொள்கிறேன்' என்று அவள் கூறினாள். நானும் சரி என்று சொன்னேன். இப்போது வேலை நிரந்தரமாகிவிட்டது. ஆனால், அதற்குப் பிறகு உடனடியாக இப்படி ஒரு துயரம் நிகழ்ந்துவிட்டது," என்று அவரது தாயார் கூறினார்.

பிரவாலிகா தனது தாயார் விஜயலட்சுமியுடன் மணுகூரில் வசித்து வந்தார். இப்போது அந்த வீட்டில் விஜயலட்சுமி தனியாக வசிக்கிறார். ஆர்டிசி ஊழியர்கள்தான் அவருக்குத் துணையாக இருக்கின்றனர். அருகில் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை. இறுதிச் சடங்கு உள்ளிட்ட பிற ஏற்பாடுகளையும் ஆர்டிசி ஊழியர்களே கவனித்துக் கொண்டனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு டிஜிஎஸ்ஆர்டிசி தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததாக விஜயலட்சுமி பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாங்கள் இரண்டு பெண்கள் மட்டும்தான். மருத்துவமனையில் எங்களுக்கு உதவ யாரும் இல்லை என்று கூறியபோது, உதவிக்கு நான்கு பேரை அனுப்புவதாகச் சொன்னார்கள். எங்களுக்கு உதவுவதற்காக நான்கு ஊழியர்களைப் பணியில் அமர்த்தி அனுப்பினார்கள். 'நீங்கள் உங்கள் மகளுடனேயே இருங்கள். வெளியில் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்' என்று கூறினார்கள். ஆர்டிசி அதிகாரிகள் அனைவரும் எங்களை மிகவும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்," என்று விஜயலட்சுமி பிபிசியிடம் கூறினார்.

பேருந்தில் என்ன நடந்தது என்பது குறித்துத் தனது மகள் தன்னிடம் கூறியவற்றை விஜயலட்சுமி பிபிசியிடம் விவரித்தார்.

"சில்லறை விவகாரத்திற்காக ஒருவரை இப்படித் தள்ளிவிட வேண்டிய அவசியம் என்ன? மணுகூர் பேருந்து நிலையத்தில் ஏறியதில் இருந்தே அந்தப் பெண் சில்லறை கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். சில்லறை இல்லை என்பதையும் என் மகள் பணப் பையைக் காட்டி விளக்கியிருக்கிறாள். 10 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். இப்போது என்னிடம் சில்லறை இல்லை. மற்ற பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இறங்கும்போது சில்லறையைத் தருகிறேன்' என்று என் மகள் கூறியிருக்கிறாள்."

"ஆனால், அந்தப் பெண் பேருந்தில் ஏறியதில் இருந்தே தொடர்ந்து வாக்குவாதம் செய்திருக்கிறார். என் மகளைத் திட்டியும் சாபமிட்டும் பேசியிருக்கிறார். அதற்கு என் மகள், 'பரவாயில்லை, கடவுளே பார்த்துக் கொள்வார் என்று நினைத்துக் கொண்டேன் அம்மா' என்று என்னிடம் கூறினாள்" என விஜயலட்சுமி நினைவுகூர்ந்தார்.

"'பிறகு சில்லறை தருகிறேன் என்று சொன்னபோதும், இப்போதே கொடுக்காவிட்டால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிவிடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டியிருக்கிறார். அவர் இறங்குவதாகச் சொன்னதும் நான் கையால் தடுத்தேன். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என் வேலை போய்விடும் என்பதால், இறங்க வேண்டாம் என்று கூறினேன். அதற்கு, 'என்னைத் தடுக்க நீ யார்?' என்று கேட்டுவிட்டு இரண்டு கைகளாலும் என்னைத் தள்ளிவிட்டார். ஒரு கையில் டிஐஎம் (டிக்கெட் வழங்கும் இயந்திரம்), மற்றொரு கையில் கம்பி இருந்தது. நான் கீழே விழுந்துவிட்டேன், அம்மா' என்று அழுதுகொண்டே கூறினாள்" என்று தனது மகள் கூறியதை விஜயலட்சுமி விவரித்தார்.

"அந்தப் பெண் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் சில்லறை தருகிறேன் என்று என் மகள் கூறியபோதும் அவர் கேட்கவில்லை. அவளைத் தள்ளிவிட்டார். அந்தப் பெண்ணுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதற்கு மேல் நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை," என்று விஜயலட்சுமி கூறினார்.

பிரவாலிகா தனது சக ஊழியர்களிடம் தெரிவித்த விவரங்களின்படி, அக்டோபர் 25ஆம் தேதி காலை அந்தப் பெண் பேருந்தில் ஏறியுள்ளார். மிட்டகூடெம் அருகே இறங்க வேண்டும் என்று கூறி, தனது மகனுக்கு டிக்கெட் வாங்கியுள்ளார். அரசின் இலவசப் பயணத் திட்டத்தின் கீழ் தனக்குப் பயணம் இலவசம் என்பதால் அவர் தனக்கான டிக்கெட்டை எடுக்கவில்லை.

ஆனால் அவர்களின் கூற்றுப்படி, "10 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் நோட்டை கொடுத்தபோது, தன்னிடம் சில்லறை இல்லை என்று நடத்துநர் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிற பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி, பணம் வசூலித்த பிறகு சில்லறை தருவதாக பிரவாலிகா கூறியுள்ளார். ஆனால், அந்தப் பெண் காத்திருக்க மறுத்து உடனடியாக சில்லறை தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்."

உடன் பயணம் செய்தவர்கள் தலையிட்டு அவரைச் சமாதானப்படுத்த முயன்றபோதும், அந்தப் பெண் தொடர்ந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணிடம் அவரே சில்லறை கொடுக்குமாறு பிரவாலிகா கேட்டபோதும் அவர் மறுத்துள்ளார். இந்த வாக்குவாதத்தின்போது மற்ற பயணிகளையும் அந்தப் பெண் திட்டியதாகக் கூறப்படுகிறது.