மேற்கு வங்க மாநிலத்தில் கிறிதவ சமூகத்தினர் மீது பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்ட சிலர் தங்கள் வீட்டிற்குள் நுழைந்து, தங்களைத் தாக்கி, அரசு வசதிகளை நிறுத்திவிடுவதாக மிரட்டியதாக கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பன்ஸ்குரா பகுதியில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்கள் குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்ந்து பிரார்த்தனை செய்யத் தயாராகிக் கொண்டிருந்தபோது, 30-க்கும் மேற்பட்டோர் மது அருந்திய நிலையில் வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் நுழைந்து தாக்கியதாக இந்தத் தாக்குதலில் காயமடைந்த பார்வதி ஹெம்ப்ரம் சோரன் பிபிசி நியூஸ் பங்களாவிடம் தெரிவித்தார்.

"அவர்கள் என் தலைமுடியைப் பிடித்து அடித்தார்கள். இந்த வீட்டில் எங்களை வாழ விடமாட்டோம் என்று கூறினார்கள். என் கணவரை மிகவும் மோசமாகத் திட்டினார்கள். எங்கள் உறவினர்களும் அப்போது எங்களுடன் இருந்தனர், அவர்கள் என் சகோதரிகளையும் அடித்தார்கள். எங்கள் கைப்பேசிகளையும் பறிக்க முயன்றார்கள்." என்று பார்வதி ஹெம்ப்ரம் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு, துர்கா பூஜையின்போது மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் சந்திரகோனா பகுதியில் பல கிறிஸ்தவக் குடும்பங்களை பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஒரு குழு தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ஆண்டு மே மாதம் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த பல செய்திகள் வெளியாகியுள்ளன.

மே 13 முதல் செப்டம்பர் 20 வரை மேற்கு வங்கத்தின் 13 மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக மொத்தம் 60 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தத் தரவுகளை 'இந்தியா ஹேட் லேப்' என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பன்ஸ்குராவில் வசிக்கும் பார்வதி சோரன், இதற்கு முன்பும் இந்த குற்றவாளிகள் தனது குடும்பத்தை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அக்டோபர் 11 அன்றும், அதே நபர்கள் வீட்டிற்கு வந்து, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியதற்காக மிரட்டியதாக அவர் கூறுகிறார்.

"கிறிஸ்தவ மதத்தை விட்டுவிட்டு இந்து மதத்திற்குத் திரும்புமாறு அவர்கள் எங்களை வற்புறுத்துகிறார்கள். நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அதைப் பின்பற்றி வருகிறோம் என்று அவர்களிடம் கூறினோம். அதனால்தான் நாங்கள் தாக்கப்படுகிறோம்." என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காகத் தங்கள் அமைப்பின் வழக்கறிஞர் ஒருவர் புகார்தாரரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, தாக்குதல் நடத்தியவர்கள் அவரது செல்போனைப் பறித்ததாக பெங்கால் கிறிஸ்தவ சேவை அமைப்பின் நிறுவனர் ஹெரோட் மல்லிக் தெரிவித்துள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டவர்கள், அந்த வழக்கறிஞருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. தாங்கள் பேசுவது வழக்கறிஞரிடம் என்பது தெரியவந்ததும் அவர்கள் அழைப்பைத் துண்டித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் கிறிஸ்தவத்தை 'அமெரிக்க மதம்' என்று அழைத்ததாகவும், அந்த குடும்பத்தை இந்து மதத்திற்கு மாறுமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பார்வதி சோரன் பிபிசி நியூஸ் பங்களாவிடம் பேசுகையில், "எங்கள் முற்றத்தில் ஒரு துளசி மேடையையும், ஒரு மன்சா கோயிலையும் கட்டுமாறு அவர்கள் எங்களை வற்புறுத்தினர். நாங்கள் கிறிஸ்தவர்கள், அதைச் செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் கூறினோம்," என்றார்.

"இப்போது எங்களுக்கு யாரும் வேலை கொடுக்கவிடாமல் தடுக்கிறார்கள். எங்கள் மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டித்துவிடுவோம் என்றும், ரேஷன் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் உதவிகளை நிறுத்திவிடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். எங்களுக்கு யாரும் உதவக்கூடாது என்பதற்காக அனைவரையும் அச்சுறுத்துகிறார்கள்" என்றார்.

சம்பவம் நடந்தபோது புகார்தாரர், அவரது கணவர், இரண்டு சிறு குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களது உறவினர்கள் மூவரும் உடனிருந்துள்ளனர்.

"எங்கள் பிரார்த்தனை செய்யும் இடம் எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. எங்களை வெளியே இழுத்துச் சென்று தாக்கினார்கள். அவர்கள் என்னைத் தாக்கினார்கள், என் நாத்தனாரை அறைந்தார்கள், என் கணவரைத் திட்டினார்கள்." என்று பார்வதி கூறுகிறார்.

"மீண்டும் வந்து தாக்குவோம் என்றும், இந்த முறை 50 முதல் 100 பேரை அழைத்து வருவோம் என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மிரட்டினர். நாங்கள் புகார் அளித்துள்ளோம். ஆனால், காவல்துறை இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

என் கணவர் டோட்டோ (மின்சார ரிக்‌ஷா) ஓட்டுகிறார். அதை வாங்குவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளோம். இத்தகைய சூழலில் எங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது, வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று எனக்குப் புரியவில்லை" என்றார் அவர்.