பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலா மாவட்டத்தின் கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கிக் கொள்ளை தொடர்பான சம்பவம் இது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஆயுதமேந்திய நபர்கள் வங்கியிலிருந்து 20 கோடியே 20 லட்சம் பாகிஸ்தான் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது சாதாரண கொள்ளைச் சம்பவம் அல்ல. காவல்துறையிடம் சிக்காமல் இருப்பதற்காகக் கொள்ளையர்கள் விரிவாகத் திட்டமிட்டிருந்தனர்.
பாதுகாப்புப் படையினரின் சீருடைகளை அணிந்துகொண்டு, சில பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க வந்திருப்பதாகக் கூறி அவர்கள் வங்கிக்குள் நுழைந்துள்ளனர்.
லாஸ்பேலா மாவட்டத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் நஜீபுல்லா பந்த்ரானி கூறுகையில், விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட நபரின் வங்கிக் கணக்கிலிருந்து முக்கியமான தடயம் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
"கொள்ளைச் சம்பவத்திற்கு முன்பு அவரது வங்கிக் கணக்கில் ஆயிரக்கணக்கான ரூபாய் அளவிலேயே பரிவர்த்தனைகள் நடைபெற்றிருந்தன. ஆனால், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தத் தொகை கோடிக்கணக்கான ரூபாயாக அதிகரித்தது" என்று அவர் கூறினார்.
இந்த விசாரணையில் தொடர்புடைய அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிபிசி உருதுவிடம் பேசினார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முன்பு வங்கியில் பணியாற்றியிருந்ததாக அவர் தெரிவித்தார். இதனால், வங்கியில் பணம் எங்கு வைக்கப்பட்டிருக்கும், அதிகபட்ச தொகையை எவ்வாறு எடுக்க முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருந்ததாக அந்த அதிகாரி கூறினார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் நிலையப் பொறுப்பாளர் முகமது குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
ஆனால், அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் பலத்த காயமடைந்தார். இதில் அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோனது.
காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, "குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்தக் கொள்ளையை முழுமையாகத் திட்டமிட்டதுடன், சம்பவத்திற்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பின்னர் தீவைத்துக் கொளுத்தினர். தடயங்கள் அனைத்தையும் அழிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது."
லாஸ்பேலா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தலைமறைவாக உள்ள மற்றவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த வங்கிக் கொள்ளை 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்றது.
வங்கி மேலாளர் ஃபலக் ஷேர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, பாதுகாப்புப் படையினரின் சீருடை அணிந்த ஆறு ஆயுதமேந்திய நபர்கள், வாகனம் ஒன்றில் வந்து வங்கியின் பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர்.
"வங்கிக்குள் நுழைந்தவுடன், ஒரு பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த வந்திருப்பதாகக் கூறிய அவர்கள், வங்கி மேலாளர் எங்கே இருக்கிறார் என்று கேட்டதாகச் செயல்பாட்டு மேலாளர் ஜஹாங்கிர் தொலைபேசியில் தெரிவித்தார்" என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கி மேலாளர் ஃபலக் ஷேர் கூறுகையில், "நான் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, காவலர்கள் நவாஸ் அலி மற்றும் முகமது தாவூத் ஆகியோரைத் துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்கி அவர்கள் காயப்படுத்தியிருந்தனர். காவலர்களிடமிருந்து ஜி3 ரகத் துப்பாக்கி ஒன்றையும் அவர்கள் பறித்துச் சென்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
முதல் தகவல் அறிக்கையின்படி, வங்கியில் இருந்த 2 கோடியே 2 லட்சம் ரூபாய் பணத்தை ஆறு சாக்குகளில் நிரப்பிய சந்தேக நபர்கள், அவற்றை காரின் பின்பகுதியில் வைத்துள்ளனர். பின்னர், வங்கி ஊழியர்களைப் பணப் பாதுகாப்பு அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வங்கிக் கொள்ளை நடைபெற்றபோது, ஓத்தல் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாக முகமது பணியாற்றி வந்தார்.




