கடந்த 1800ஆம் ஆண்டில், பாரிஸில் பெண்கள் கால்சட்டை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டு முழுவதும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் பல பெண்கள் இந்தச் சட்டத்தை மீறியோ, அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்தோ, ஆண்களைப் போல் உடையணியவும், சில நேரங்களில் ஆண்களைப் போலவே வாழவும் முயன்றனர்.

அவர்களின் தனித்துவமான ஆடை அலங்காரத்தையும் துணிச்சலையும் படம்பிடித்துக் காட்டும் 10 புகைப்படங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

பிரெஞ்சு புரட்சியின்போது (1789-1799), பாரிஸை சேர்ந்த பல பெண்கள் ஆண் போராட்டக்காரர்களுடன் இணைந்து தடுப்பு அரண்களில் போராடுவதற்காக கால்சட்டை அணிந்தனர். ஆண்களுக்கு இணையான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பெற வேண்டும் என்ற அவர்களின் விருப்பம், பெண்களின் உரிமைகள் குறித்த பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்தப் பிரகடனத்தை எழுதிய ஒலிம்ப் டி கூஜ், 1793ஆம் ஆண்டு "இயற்கைக்கு மாறான" பெண் என்று குற்றம்சாட்டப்பட்டு கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், 1800ஆம் ஆண்டில், பாரிஸில் பெண்கள் கால்சட்டை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. "பெண்கள் உரிமைகளைக் கோரி, தங்கள் சமூகத்தின் அரசியல் வாழ்க்கையில் பங்கேற்க விரும்பிய காலகட்டத்திற்கு முடிவுகட்டுவதற்காகவே" இந்தத் தடை விதிக்கப்பட்டதாக, பாரிஸில் உள்ள பலே கல்லியேராவில் நடைபெறும் 'ஒருவருக்கான சொந்த ஆடை அலமாரி: 19ஆம் நூற்றாண்டில் மாறுபட்ட பெண்மைகள்' (A Wardrobe of One's Own: Dissident Femininities in the 19th Century) என்ற புதிய கண்காட்சியின் கண்காணிப்பாளர் மரின் கிசியல் கூறுகிறார்.

கடந்த 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் பெண்கள், மனைவி மற்றும் தாய் என்ற பாத்திரத்தில் திருப்தியடைந்து வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டனர். ஓவியர்கள் மற்றும் கவிஞர்களால் போற்றப்படுபவர்களாகவும், பெண்மைக்குரிய ஆடைகளால் அடையாளப்படுத்தப்படுபவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் எனக் கருதப்பட்டது. ஆனால், ஏராளமான பிரெஞ்சுப் பெண்கள் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். குறிப்பாக, 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், பெண்ணியத்தின் முதல் அலை பாரிஸில் வளர்ந்து வந்த லெஸ்பியன் துணைக் கலாசாரத்துடன் இணைந்தபோது இந்த எதிர்ப்பு தீவிரமடைந்தது.

ஆண்களுக்கான ஆடைகளை அணியும் உரிமைக்கான போராட்டம், பெண்கள் உரிமைகள் வரலாற்றில் போதிய கவனம் பெறாத ஓர் அத்தியாயமாக உள்ளது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் இது அதிகம் கவனிக்கப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆண்களுக்கான ஆடைகள் பெண்களுக்கு ஒரு வகையான சுய அதிகார உணர்வை அளித்தன. இதன் மூலம், முன்பு தங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்களில் நுழைவதற்கான தடைகளை அவர்கள் உடைத்தெறிந்தனர். அல்லது தங்களது பாலியல் விருப்பங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த முயன்றனர்.

பத்திரிகைகள் அவர்களைக் கேலி செய்தன. அதிகாரிகள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். மருத்துவத் துறையினரும் அவர்களை "பாலியல் பிறழ்வு கொண்டவர்கள்" என்று கண்டித்தனர். இருப்பினும், பெண்கள் தங்களுக்கான ஆடைத் தேர்வு சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடினர். இந்த வரலாற்றை 10 புகைப்படங்களின் மூலம் இங்கே ஆராய்கிறோம்.

பிரான்ஸில் பெண்களுக்கான ஆண்மைத் தோற்றம் கொண்ட ஆடை அலங்காரம் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில், பிரிட்டனில் இருந்து அறிமுகமான குதிரையேற்ற உடை (Riding Habit) வடிவில் முதன்முதலில் தோன்றியது.

கிரேக்கப் புராணங்களில் இடம்பெறும் பெண் போர்வீரர்களின் பெயரால், அந்த உடையும் அதை அணிந்த பெண்களும் 'அமேசான்கள்' என்று அழைக்கப்பட்டனர்.

சுறுசுறுப்பும் விளையாட்டுத் திறனும் கொண்ட இந்தப் பெண்கள், மக்களிடையே வியப்பையும் அச்சத்தையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது.

நூற்றாண்டு செல்லச் செல்ல, அளவெடுத்து தைக்கப்பட்ட ஜாக்கெட்டுகளும் கோட்டுகளும் பெண்களின் ஆடை அலங்காரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தன.

பட மூலாதாரம், Musée du Louvre/ Dist Grand Palais Rmn / Philippe Fuzeau

ஆண்களின் ஆடை அலங்காரத்தைப் பெண்களுக்கேற்ற வகையில் மாற்றி அணிவது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், ஆண்களுக்கான ஆடைகளை அப்படியே அணிவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

பாலினம் சார்ந்த மரபுகளைக் கடைப்பிடிக்காமல், தனக்குப் பிடித்தபடி வாழ்ந்து, காதலித்து வந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜார்ஜ் சாண்டை இந்தக் கட்டுப்பாடுகள் தடுக்கவில்லை. அவர் முன்னோடிப் படைப்பாளியாகவும் விளங்கினார்.

ஜார்ஜ் சாண்டைப் பொறுத்தவரை, ஆண்களுக்கான ஆடைகளை அணிவது பிறரைத் தூண்டும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயலல்ல; அது அவருக்கு மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது.

"ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த திரையரங்கின் முன்வரிசை இருக்கைகள் போன்ற இடங்களுக்குச் செல்வதற்காகவும், பெண்களுக்கான ஆடைகளைவிட ஆண்களுக்கான ஆடைகள் குறைந்த செலவில் கிடைத்ததாலும், சுதந்திரமாக நடமாடவும் செயல்படவும் விரும்பியதாலும் அவர் அவற்றை அணிந்தார்" என்று கண்காட்சியின் கண்காணிப்பாளர் மரின் கிசியல் பிபிசியிடம் கூறுகிறார்.

19-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுச் சமூகத்தின் ஆணாதிக்கத் தன்மையைக் கருத்தில் கொண்டால், அக்காலத்தில் பல பெண்கள் ஆயுதம் ஏந்திப் போரிட்டனர் என்பதை அறிந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கலாம்.

"இதுகுறித்து ஏராளமான பதிவுகளும் புகைப்படத் தொகுப்புகளும் உள்ளன. இது குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என்பதும் நமக்குத் தெரியும்" என்கிறார் கிசியல்.

பெண்கள் முறையான ராணுவத்தில் சேர அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், ஒழுங்கற்ற தன்னார்வப் படைகளில் அவர்கள் இணைய முடிந்தது.

பிரான்ஸ் - பிரஷ்யா போரின்போது, மேரி-ஆன்டோனெட் லிக்ஸ் அவ்வாறு தன்னார்வப் படையில் இணைந்து, வோஸ்ஜெஸ் பகுதியில் நடைபெற்ற பாதுகாப்புப் போரில் பங்கேற்றார். நாம்படெலிஸ் போரின்போது தனது வீரத்தையும் வெளிப்படுத்தினார்.