பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் மரங்களுக்கு அடியில் மறைந்திருந்த நூற்றுக்கணக்கான நில அமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படும் ஒரு பண்டைய நாகரிகத்தால் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
தரையில் தோண்டி உருவாக்கப்பட்ட இந்தப் பிரமாண்டமான கட்டமைப்புகள் 'ஜியோகிளிஃப்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய ஆறுகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதியில் கட்டப்பட்டவை.
"கிரேக்கத்தில் பித்தகோரஸ் தனது தேற்றத்தை உருவாக்கிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், அமேசானில் இந்த மக்கள் பிரமாண்டமான வடிவியல் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தனர்," என்று அமேசான் ஜியோகிளிஃப்ஸ் நிறுவனத்தின் தலைவரும், ஆய்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவருமான தொல்லுயிரியலாளர் அல்சியூ ரான்ஸி கூறுகிறார்.
சமீபத்தில் நேச்சர் இதழில் வெளியான இந்த ஆய்வு, ஸ்பெயின், பின்லாந்து, பிரேசில் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
அடர்ந்த வனப்பகுதியின் மரக்கூரைகளை, லிடார் எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர்.
லேசர் கதிர்களைப் பயன்படுத்தி தொலைவுகளை அளவிட்டு, சிக்கலான முப்பரிமாண வரைபடங்களை உருவாக்குவதே இந்தத் தொழில்நுட்பமாகும்.
இதன் மூலம், தாவரங்களை அகற்றாமலும் ஒவ்வொரு இடத்துக்கும் நேரடியாகச் செல்லாமலும் பெரிய நிலப்பரப்புகளை ஆய்வு செய்ய முடியும்.
"அமேசானில் மேற்கொள்ளப்பட்ட முதல் மிகப்பெரிய லிடார் ஆய்வு இதுதான்," என்று ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர், மானுடவியலாளர் மற்றும் இந்த ஆய்வின் இணை ஆசிரியரான மார்ட்டி பார்சினென் கூறுகிறார்.
4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியை ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதில் 432 ஜியோகிளிஃப்ஸை அவர்கள் அடையாளம் கண்டனர். அவற்றில் பெரும்பாலானவை இதுவரை பதிவுசெய்யப்படாதவை. இவை கி.மு. 600 முதல் கி.பி. 850 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை.
இந்தக் கட்டமைப்புகளை உருவாக்கிய 'அக்விரி நாகரிகம்', சுமார் 1,83,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இது கம்போடியா அல்லது சிரியாவின் பரப்பளவுக்குச் சமமானதாகும். கி.பி. 100 முதல் 300 வரையிலான காலகட்டத்தில், இந்த நாகரிகம் அதன் உச்சத்தில் இருந்தபோது 30 லட்சம் மக்கள் வரை வாழ்ந்திருக்கலாம்.
15 மீட்டர் அகலமும் 5 மீட்டர் ஆழமும் கொண்ட அகழிகளை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்ததாக ரான்ஸி கூறுகிறார்.
இத்தகைய பிரமாண்டமான கட்டமைப்புகள், பெரிய சமூகங்கள் ஒன்றிணைந்து பணியாற்றியிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
"இந்தப் பகுதியில் கற்கள் கிடையாது. அவர்கள் மரத்தாலான கருவிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். மண்ணைக் கூடைகளில் எடுத்துச் சென்றிருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால், அமேசானின் ஈரப்பதமான காலநிலை காரணமாக இயற்கைப் பொருள்கள் விரைவாகச் சிதைந்துவிடுகின்றன. இதனால், அவர்கள் பயன்படுத்திய கருவிகள் குறித்து உறுதியாகத் தெரிந்துகொள்வது கடினமாக உள்ளது.
பெரிய அளவிலான தொழிலாளர்கள் தேவைப்பட்டதுடன், பணிகளைப் பிரித்துச் செய்வதும் அவசியமாக இருந்திருக்கும். இதற்கு கணிதம் மற்றும் வடிவியல் குறித்த கணிசமான அறிவும் தேவைப்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த ஜியோகிளிஃப்கள் ஒரு காலத்தில் கோட்டைகளாகவோ அல்லது படையெடுப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் தற்காப்புக் கட்டமைப்புகளாகவோ இருந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.




