உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான பினன்ஸ் (Binance), இதுவரை இல்லாத மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் தாக்குதலாகக் கருதப்படும் ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் 6.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கிரிப்டோ என்பது பணம் அல்லது நாணயங்களைப் போல நேரடியாகக் கையில் வைத்திருக்க முடியாத ஒரு வகையான டிஜிட்டல் சொத்து. இதனைப் பயன்படுத்தவும் நிர்வகிக்கவும் மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினிகளில் உள்ள டிஜிட்டல் வாலெட்களைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து என்ன நடந்தது என்பதைக் கண்டறிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், ஏற்பட்ட அனைத்து இழப்புகளையும் ஈடுசெய்வதாகவும் பினன்ஸ் நிறுவனத்தின் இணை தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் டெங் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?
வர்த்தக அளவின் அடிப்படையில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமாக பினன்ஸ் விளங்குகிறது. இதில் பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களை வாங்கவும், விற்கவும், பரிமாற்றம் செய்யவும் முடியும். மேலும், இதில் பணத்தைச் செலுத்தவும் திரும்பப் பெறவும் முடியும்.
2017ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், உலகம் முழுவதும் பலநூறு மில்லியன் பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பரிவர்த்தனைத் தளம் பல்வேறு விசாரணைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. குறிப்பாக, 2023ஆம் ஆண்டு, அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி சாங்பெங் ஜாவோ, பணமோசடி தொடர்பான சட்ட விதிமீறல்களை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மில்லியன்கணக்கான டாலர்களை அனுப்ப உதவியதாக அந்நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் கடந்தாண்டு ஒரு வழக்குத் தொடரப்பட்டது
2024 இல், தங்களிடம் 160 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக அந்நிறுவனம் கூறியது.
பினன்ஸின் உலகளாவிய மையப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைத் தளமான Binance.com மீது இந்த ஹேக்கிங் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிப்பவர்களுக்காக பிரத்யேகமாக வர்த்தகச் சேவைகளை வழங்கும் Binance.us தளம், இந்தத் தாக்குதலில் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
"எங்களது முதற்கட்ட விசாரணையின்படி, இந்தப் பாதுகாப்பு அத்துமீறல், டெவ்ஆப்ஸ் பொறியாளர் ஒருவரின் மடிக்கணினியை ஹேக்கர்கள் ஊடுருவதால் நடந்திருக்கலாம்." என்று இந்தச் சம்பவம் குறித்து பினன்ஸ் நிறுவனத்தின் இணை தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் டெங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"இதன் மூலம், தாக்குதல் நடத்திய நபருக்கு ஒரு சர்வீஸ் கன்டெய்னரை அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் வழியாக, அனுமதியின்றி பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான பரிவர்த்தனைகளை அவர் மேற்கொண்டுள்ளார்."
இந்த ஹேக்கிங் தாக்குதல் "ஒரே கிளிக்கில் நடத்தப்பட்ட எளிய தாக்குதல் அல்ல" என்றும், "மிகவும் சிக்கலான தாக்குதல் நடைமுறையைக் கொண்டது" என்றும் அவர் தெரிவித்தார்.
"பொறியாளர் ஒருவரை 'ஏதோவொரு சோதனையில் பங்கேற்குமாறு நம்பவைத்து ஏமாற்றியிருக்கலாம்'. அந்தச் சோதனையின்போது அவரது மடிக்கணினியில் தீங்கு விளைவிக்கும் மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்" என்கிறார் சைபர் பாதுகாப்புத் தளமான இல்லுமியோவின் தொழில்துறை உத்திப் பிரிவின் துணைத் தலைவர் ரகு நந்தகுமாரா.
அந்த மடிக்கணினிக்கு ஏற்கெனவே போதுமான பாதுகாப்பு அனுமதிகள் இருந்ததால், அதன் மூலம் தாக்குதல் நடத்தியவர் நிறுவனத்தின் நேரடிச் செயல்பாட்டுக் கட்டமைப்பை அணுகியிருக்கலாம். அங்கிருந்து டிஜிட்டல் வாலெட்களையும் அணுகுவதற்கான வழி கிடைத்திருக்கலாம் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
"கணித அடிப்படையிலான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு ஒரு பெட்டகத்தை உருவாக்கலாம். ஆனால், அதன் சாவியை வைத்திருப்பவரையே ஏமாற்றிவிட்டால், அந்தப் பெட்டகத்தைத் திறந்துவிட முடியும்" என்கிறார் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு மற்றும் பயோமெட்ரிக்ஸ் நிறுவனமான FARx-இன் தலைவர் டாக்டர் கிளைவ் சம்மர்ஃபீல்டு.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும், சில ஆய்வு நிறுவனங்கள் வட கொரியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறியுள்ளன. ஆனால், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ளும் டிஆர்எம் லேப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பினன்ஸ் மீதான தாக்குதலில் காணப்படும் பல அம்சங்கள், இதற்கு முன்பு வட கொரியாவுடன் தொடர்புபடுத்தப்பட்ட சைபர் தாக்குதல்களை ஒத்திருப்பதாகக் கூறியுள்ளது.
இதில், 2025ஆம் ஆண்டு பைபிட் (ByBit) பரிவர்த்தனைத் தளத்தில் நடத்தப்பட்ட 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஹேக்கிங் தாக்குதலும் அடங்கும்.




