1990 ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று, குவைத்துக்கு எதிராக திடீர் ராணுவ நடவடிக்கையை இராக் மேற்கொண்டது. அப்போதைய இராக் அதிபர் சதாம் உசேனின் உத்தரவின்பேரில் நடந்த இந்த ஊடுருவல், பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் மாபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம், பின்னர் இரண்டாம் வளைகுடா போர் வெடிப்பதற்கும் காரணமானது.
இராக் – குவைத் இடையிலான இந்த மோதலுக்குப் பின்னால் பல அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் இருந்தன.
கடந்த1988ஆம் ஆண்டு இரான் – இராக் போர் முடிவுக்கு வந்தபோது, இராக் பெரும் கடன் சுமையில் சிக்கியிருந்தது. குறிப்பாக போரின்போது நிதியுதவி அளித்த வளைகுடா நாடுகளான குவைத், செளதி அரேபியா ஆகியவற்றுக்குப் பெருமளவு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு குவைத் வலியுறுத்தியது.
மேலும், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஓபெக் நிர்ணயித்த உற்பத்தி வரம்பை மீறிக் குவைத் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதாக இராக் குற்றம் சாட்டியது. இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்து, இராக்கின் வருவாய் பாதிக்கப்பட்டதாக அந்நாடு கருதியது. இதுவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்தது.
இதுதவிர, இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ருமைலா எண்ணெய் வயலில் இருந்து குவைத் எண்ணெயைத் திருடுவதாகவும் இராக் குற்றம்சாட்டியது.
இத்தகைய பதற்றங்களுக்கு மத்தியில், 1990 ஆகஸ்ட் 2-ஆம் தேதி குவைத்தை ஊடுருவ சதாம் உசேன் உத்தரவிட்டார். இராக்கின் கட்டுப்பாட்டுக்குள் குவைத் வந்ததைத் தொடர்ந்து, சதாம் உசேனின் உறவினரான அலி ஹசன் அல்-மஜித், அந்நாட்டின் ராணுவ ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து குவைத்தில் தங்கள் இருப்புக்குச் சட்டபூர்வமான தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இராக் நாட்டு அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டனர். அதன் ஒரு பகுதியாக, 'குவைத் குடியரசு' உருவாக்கப்பட்டது. சுதந்திர குவைத் அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த அமைப்பு நிறுவப்பட்டது.
குவைத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது 1990 ஆகஸ்ட் 4ஆம் தேதி, 'குவைத் குடியரசு' நிறுவப்பட்டதாக சதாம் உசேன் அறிவித்தார்.
இந்தக் குடியரசு சுதந்திரமான அரசியல் அமைப்பாகச் செயல்படும் என்றும், 'மக்கள் புரட்சி' மூலம் நிர்வகிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ராஜா ஹசன் மினாவி எழுதிய, 'குவைத்: படையெடுப்பும் விடுதலையும்' என்ற நூலில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த அறிவிப்பு சதாம் உசேனின் காலதாமத மற்றும் அரசியல் குழப்பத்தை உருவாக்கும் உத்தியின் ஒரு பகுதி.
குவைத்தை இராக்குடன் நேரடியாக இணைத்துக் கொண்டதாக அறிவிப்பதற்குப் பதிலாக, அங்கு நடந்தது ஒரு உள்நாட்டுப் புரட்சி என்று இராக் ஆட்சியாளர்கள் சித்தரிக்க முயன்றனர். 'காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் முகவராக'ச் செயல்பட்ட ஆட்சிக்கு எதிராக குவைத் மக்களே புரட்சியில் ஈடுபட்டதாகக் கூறினர். அப்போது, அரபு நாடுகளிலும் சர்வதேச அளவிலும் நிலவிய பொதுக் கருத்துக்கு முன்னால் இந்தப் படையெடுப்பை நியாயப்படுத்த இராக் ஊடகங்கள் இத்தகைய கருத்துகளைப் பரப்பின.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 'சுதந்திர குவைத்' நாட்டுக்கான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதில் முன்னாள் குவைத் ராணுவ அதிகாரிகள் ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இராக் ஆட்சியுடன் சாதகமாக நடந்துக் கொண்டவர்கள் அல்லது இராக்குடன் ஒத்துழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
கர்னல் அலா உசேன் அலி அல்-கஃபாஜி அல்-ஜாபர், இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகவும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்களின் பொறுப்புகளையும் அவர் ஏற்றார்.
லெப்டினன்ட் கர்னல் வலீத் சவுத் முகமது அப்துல்லா வெளியுறவு அமைச்சராகவும், , லெப்டினன்ட் கர்னல் புவாத் உசேன் அகமது நிதி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். மேஜர் ஃபதில் ஹைதர் அல்-வஃப்கி தகவல் மற்றும் போக்குவரத்துத் துறைகளையும், லெப்டினன்ட் கர்னல் உசேன் தஹிமான் அல்-ஷம்ரி சமூக விவகாரத் துறையையும் கவனித்துக்கொண்டனர்.
ராஜா ஹசன் மினாவியின் நூலின்படி, அலா உசேன் 1948-ம் ஆண்டு குவைத்தில் பிறந்தவர். பாக்தாத் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, இராக்கின் பாத் கட்சியில் இணைந்தார். அவர் குவைத் ராணுவத்தின் முன்னாள் அதிகாரியுமாவார்.
இராக் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குவைத் அரசுத் தொலைக்காட்சியில் அலா உசேனின் அறிக்கை ஒளிபரப்பப்பட்டது. அதில், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அவர், அந்த நிர்வாகத்துக்கு ஒத்துழைக்குமாறு குவைத் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
புதிய அரசாங்கம் பல்வேறு 'புரட்சிகர முடிவுகளை' அறிவித்தது. மேற்கத்திய நிறுவனங்களை நாட்டுடைமையாக்குவது, ஆளும் குடும்பத்தினரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது, குவைத் தேசிய சட்டமன்றத்தைக் கலைப்பது, குவைத்தின் அமீராட்சி முறையைக் குடியரசு முறையாக மாற்றுவது, அப்போது குவைத்தில் வசித்துவந்த அனைத்து அரபு நாட்டினருக்கும் குடியுரிமை வழங்குவது ஆகியவை அவற்றில் அடங்கும்.
இந்த அரசாங்கத்திற்கு உண்மையில் அதிகாரம் எதுவும் இருக்கவில்லை. அது பெயரளவிலான ஓர் அமைப்பாக மட்டுமே நீடித்தது. இராக்குடன் குவைத்தை இணைக்கும் முடிவை நியாயப்படுத்துவதற்காக, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பொதுமக்களின் கருத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற இராக் ஆட்சியாளர்கள் இந்த அரசாங்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், குவைத் மக்கள் இந்த அரசாங்கத்தை நிராகரித்தனர். குவைத்தின் எதிர்க்கட்சியினரும் இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.
இந்த இடைக்கால அரசாங்கம் நான்கு நாட்கள் மட்டுமே நீடித்தது. 1990 ஆகஸ்ட் 8-ஆம் தேதி, குவைத்தை அதிகாரப்பூர்வமாக இராக்குடன் இணைப்பதாக சதாம் உசேன் அறிவித்தார். இந்த இணைப்பை இடைக்கால அரசாங்கமே தன்னிடம் கோரியதாகவும் அவர் கூறினார். இதனால், அந்த அரசாங்கத்தின் இருப்பு சட்டரீதியாகவும் நடைமுறையிலும் அர்த்தமற்றதாகிப் போனது.
1990 ஆகஸ்ட் 28-ஆம் தேதி, குவைத்தை இராக்கின் 19-வது மாகாணமாக அறிவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. கஸ்மா (குவைத் நகரம்), ஜஹ்ரா, அஹ்மதி ஆகிய பகுதிகள் அந்த மாகாணத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இராக்கைச் சேர்ந்த அஜீஸ் சாலிஹ் அல்-நுமானை குவைத்தின் ஆளுநராக சதாம் உசேன் நியமித்தார்.




