அமெரிக்காவில் பல மாதங்களாகத் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று, பில்லியன்கணக்கான டாலர்கள் செலவிடப்பட்ட நிலையில், இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் வந்துவிட்டது.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. ஆனால், கருத்துக்கணிப்புகள் எப்போதும் துல்லியமாக இருந்ததில்லை. இந்த ஆண்டும் ஆச்சர்யமூட்டும் முடிவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, அமெரிக்கர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த பிறகு மூன்று விதமான முடிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அவை என்னென்ன, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்பக்கட்ட முடிவுகளில் என்னென்ன அறிகுறிகள் தென்படலாம், அவை அமெரிக்காவுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்.

கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, இடைக்காலத் தேர்தல்கள் பொதுவாக ஆட்சியில் இல்லாத கட்சிக்கே சாதகமாக அமையும்.

கருத்துக் கணிப்புகளின்படி, வரலாறு காணாத அளவுக்கு பதவியில் உள்ள அதிபருக்கு மக்கள் ஆதரவு சரிவு, இரான் போரால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, தீவிரமான குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தரவு மையங்கள் கட்டுமானத்துக்கு ஆதரவளிப்பது போன்ற சர்ச்சைக்குரிய கொள்கைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டால், தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய மாற்றத்தைத்தான் 'தேர்தல் அலை' என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த சூழலில், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக மிகப்பெரிய அலை வீசும். பெரும்பான்மைக்குத் தேவையான தேவையான 218 இடங்களையும் விட அதிக இடங்களை பிடித்து பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றக் கூடும்.

தேர்தல் ஆய்வாளர்களால் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்க முடியாத அளவுக்கு நெருக்கமான போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ள சுமார் 12 தொகுதிகளில் மட்டுமின்றி, குடியரசுக் கட்சியினருக்கு வலுவான ஆதரவு உள்ள சில இடங்களையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்ற வாய்ப்புள்ளது.

செனட் சபையிலும் இந்தச் சூழல் ஏற்பட வேண்டுமானால், பாரம்பரியமாகக் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான மாகாணங்கள் உள்பட, தற்போது இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக உள்ள பெரும்பாலான அல்லது அனைத்து இடங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற வேண்டும்.

பல ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெறாத டெக்சாஸ் அல்லது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெறாத கன்சாஸ் போன்ற மாகாணங்களில் குறைந்தபட்சம் ஒரு பிரமாண்டமான வெற்றியையாவது அக்கட்சி பெற வேண்டும்.

இத்தகைய முடிவு ஏற்பட்டால், செனட் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றுவது மட்டுமின்றி, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட ஒன்று அல்லது இரண்டு இடங்களைக் கூடுதலாகப் பெறுவார்கள்.

இதன் மூலம், அலாஸ்காவில் குடியரசுக் கட்சியினர் தொடரக்கூடிய சட்டரீதியான சவால்கள் தொடர்பான சர்ச்சைகளையும் தவிர்க்க முடியும். ஒரே பெயரைக் கொண்ட இரண்டு டான் சல்லிவன்கள் (வேட்பாளர் பெயர்) வாக்குச்சீட்டில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை அங்குள்ள நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார்.

ஜனநாயகக் கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களை அதிக அளவில் வாக்களிக்கச் செய்வதன் மூலமும், நடுநிலை வாக்காளர்களின் கணிசமான ஆதரவைப் பெறுவதன் மூலமும் இத்தகைய வெற்றியைப் பெறக்கூடும். இதன்மூலம், ஹிஸ்பானிக் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களிடையே 2024-ல் டிரம்ப் பெற்றிருந்த ஆதரவை ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் தங்கள் பக்கம் திருப்பக்கூடும். குடியரசுக் கட்சியின் சில வாக்காளர்கள்கூட ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்காமல் வீட்டிலேயே தங்கிவிடலாம்.

இத்தகைய தேர்தல் முடிவு டிரம்புக்கும் அவரது குடியரசுக் கட்சிக்கும் மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

சட்டமியற்றும் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றி புத்தெழுச்சி பெறக்கூடிய ஜனநாயகக் கட்சிக்கும், எந்தவொரு மோதலிலிருந்தும் பின்வாங்காத அதிபருக்கும் இடையே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான அரசியல் மோதல் ஏற்படலாம்.

வாக்கு எண்ணிக்கையின் போது கவனிக்க வேண்டிய ஆரம்பக்கட்ட அறிகுறிகள்:

ஜனநாயகக் கட்சி, புளோரிடாவில் இலக்காக வைத்துள்ள பிரதிநிதிகள் சபை இடங்களை தக்க வைத்துக்கொண்டு, வட கரோலினா, மிச்சிகன், நியூயார்க், விர்ஜீனியா, கென்டக்கி போன்ற மாகாணங்களில் குடியரசுக் கட்சியின் இடங்களையும் கைப்பற்றினால், அது அக்கட்சிக்குச் சாதகமான இரவாக அமையும்.

தெற்கு கரோலினாவில் செனட் இடத்தையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றினால், அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

கருத்துக் கணிப்புகள் முழுமையாகத் தவற வாய்ப்பில்லை. அதேபோல, எப்போதும் கணித்தபடி அப்படியே நடந்துவிடுவதும் இல்லை.

இந்தச் சூழலில், பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் எளிதில் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்று, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றலாம். ஆனால், அந்தப் பெரும்பான்மை பெரிய அளவில் இருக்காது.