இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ராமாயணம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்து இதிகாசமான ராமாயணத்தைப் பிரமாண்டமாக மறுஉருவாக்கம் செய்துள்ள இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த தயாரிப்புச் செலவு 500 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ராமாயணா திரைப்படம், திட்டமிடப்பட்டுள்ள இரண்டு பாகங்களில் முதல் பாகமாகும். இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள், ஹாலிவுட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள், ஆஸ்கர் விருது வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் எனப் பலரும் இணைந்து இந்தப் பிரமாண்டத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவின் மிகவும் போற்றப்படும் கதைகளில் ஒன்றை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.

இந்து மதத்தின் அடிப்படை இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு நாடுகளிலும் பரவி வந்துள்ளது. கவிதைகள், கோவில் சிற்பங்கள், நாட்டுப்புற நாடகங்கள், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட கதைகள் எனப் பல்வேறு வடிவங்களில் அது வெளிப்பட்டுள்ளது.

பல அரச வம்சங்களையும் பேரரசுகளையும் கடந்து நிலைத்து நிற்கும் ராமாயணம், மத நம்பிக்கைகளுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் வழியாகவும் மீண்டும் மீண்டும் புதிய வடிவங்களைப் பெற்றுள்ளது.

நிதேஷ் திவாரியின் இந்தப் படமும் காதல், கடமை, வனவாசம், போர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பழக்கமான ராமாயணக் கதையை மீண்டும் திரைக்குக் கொண்டுவருகிறது. கடவுள்களும் அரக்கர்களும், வானுலக ஆயுதங்களும் வலிமைமிக்க ராஜ்ஜியங்களும் நிறைந்த உலகில் இந்தக் கதை நிகழ்கிறது.

அயோத்தியின் இளவரசரான ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். 14 ஆண்டுகள் தனது ராஜ்ஜியத்தைவிட்டு வெளியேற்றப்படும் ராமர், தனது மனைவி சீதையுடன் (சாய் பல்லவி) வனத்துக்குச் செல்கிறார். அங்கு, இலங்கையின் பத்து தலைகளைக் கொண்ட மன்னனான ராவணனால் சீதை கடத்தப்படுகிறார்.

தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான யஷ், ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வலிமைமிக்க போர் வீரனான ராவணன், ராமருடன் ஒரு மாபெரும் போரில் ஈடுபடுகிறார். இந்தப் போர் அடுத்த ஆண்டு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தில் இடம்பெறும்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான நமித் மல்ஹோத்ரா, ஹாலிவுட்டின் டியூன், இன்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள விஷ்வல் எபெக்ட் நிறுவனமான டிஎன்இஜியின் தலைவராகவும் உள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும், கிளாடியேட்டர், தி டார்க் நைட், டியூன் உள்ளிட்ட படங்களில் இசை மூலம் நவீன ஹாலிவுட் திரைப்படங்களின் இசை அடையாளத்தை உருவாக்கிய ஹான்ஸ் ஸிம்மரும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. தீபாவளி இந்து மதத்தின் ஒளித் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

என்டிடிவி தொலைக்காட்சியின் சைபால் சட்டர்ஜி, இந்தப் படத்துக்கு ஐந்துக்கு மூன்று நட்சத்திரங்கள் வழங்கியுள்ளார். படத்தின் காட்சிப் பிரமாண்டம் பல இடங்களில் கதையைப் பின்னுக்குத் தள்ளிவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் பிரமாண்டமான உருவாக்கம், "பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் ஒரே அம்சமாகவே உள்ளது" என்றும், நடிகர்களின் நடிப்பு "மிகவும் சீரற்றதாக உள்ளது" என்றும் அவர் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் ரிஷப் சூரி இந்தப் படத்தைப் பாராட்டி, ஐந்துக்கு நான்கு நட்சத்திரங்கள் வழங்கியுள்ளார்.

"படத்துக்குச் செலவிடப்பட்ட பணம் முழுவதும் திரையில் தெரிகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர்களின் நடிப்பு மற்றும் காட்சிகளை பாராட்டிய அவர், படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்வதாகவும், இசை எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சுப்ரா குப்தா இந்தப் படத்துக்கு ஐந்துக்கு மூன்று நட்சத்திரங்கள் வழங்கியுள்ளார். படத்தின் பிரமாண்டமான உருவாக்கம் குறித்து ஆரம்பத்தில் தனக்கு சந்தேகங்கள் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், படம் பார்க்கப் பார்க்க அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், இதை ஒரு "கச்சிதமான இதிகாசப் படம்" என்றும் வர்ணித்துள்ளார்.

"பிரமாண்டமான காட்சிகளைத் தக்கவைத்துக்கொள்ளப் போதுமான மாயாஜாலமும், விறுவிறுப்பும், சாகசங்களும் படத்தில் உள்ளன" என்று அவர் எழுதியுள்ளார். மேலும், பிரமாண்டமான கதையில் மூழ்கிவிடாமல், அதைச் சிறப்பாகச் சொல்லத் திரைப்படக் குழுவினரால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.