அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு இஸ்ரேலுக்கு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து அந்நாட்டில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில், இஸ்ரேலின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
மிச்சிகன் மகாணத்தில் செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், மைக் ரோஜர்ஸை அப்துல் அல்-சயீத் தோற்கடித்தார்.
இஸ்ரேலின் முன்னணி ஆங்கில நாளிதழான ஹாரெட்ஸ், அப்துல் அல்-சயீதின் வெற்றி குறித்து எழுதியுள்ளது.
"இஸ்ரேலுக்கு எதிரான வலுவான நிலைப்பாடு, போட்டி நிறைந்த இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தடையாக இல்லை என்பதையும் இந்த முடிவு காட்டுகிறது" என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
"செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகள், ஒருங்கிணைக்கப்பட்ட யூத சமூகத்தின் அரசியல் செல்வாக்குக்கு வரம்புகள் இருப்பதை வெளிப்படுத்தின" என்று ஹாரெட்ஸ் எழுதியது.
"அல்-சயீத் யூத சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் தலைவர்களையும் சந்தித்தார். ஆனால், இஸ்ரேலுக்கு ஆதரவான வாக்காளர்களைக் கவர்வதற்காக தனது கருத்துகளையோ கொள்கை நிலைப்பாட்டையோ பெரும்பாலும் மாற்றிக்கொள்ளவில்லை" என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவான அமைப்பான தி ஜூயிஷ் மெஜாரிட்டி வெளியிட்ட யூத வாக்காளர்களின் கருத்துக்கணிப்பில், 60 சதவீத வாக்காளர்கள் அல்-சயீதுக்கு வாக்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் என்12 செய்தி தொலைக்காட்சியின் தலைமை அரசியல் ஆய்வாளரான அமித் செகல், இஸ்ரேலுக்கான மோசமான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"மோசமான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் நடந்தது ஒரு பேரழிவு" என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
"அப்துல் அல்-சயீத் எதிர்பார்த்ததைவிடக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் செனட் பதவியை வென்றது மட்டுமே ஒரே ஆறுதல். இஸ்ரேலுக்கு எதிரான அரசியலும் யூத எதிர்ப்பும் தங்களுக்குக் கிடைக்கும் வாக்குகளைக் குறைக்கின்றன என்பதை ஜனநாயகக் கட்சியினர் உணர்வார்களா? அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதே நேரத்தில், ஏராளமான யூதர்களும் அவருக்கு வாக்களித்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. முதலில், அமெரிக்காவின் பிரச்னைகளுக்கு ஜனநாயகக் கட்சியினர் இஸ்ரேலைக் குற்றம்சாட்டினர். மளிகைப் பொருட்களின் விலை உயர்வு, சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைவது, இரானுடனான போர் ஆகியவை இதில் அடங்கும்" என்று அவர் எழுதியுள்ளார்.
"ஜே.டி வான்ஸின் எக்ஸ் தளப் பதிவு, குடியரசுக் கட்சியினரும் தங்கள் கட்சியின் பிரச்னைகளுக்கு இஸ்ரேலைக் குற்றம்சாட்டத் தொடங்கியிருப்பதைக் காட்டுகின்றன. அமெரிக்கா இஸ்ரேலுடன் மிக நெருக்கமாகிவிட்டதாக வான்ஸ் தனது பதிவில் கூறியிருந்தார்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இது மிகவும் ஆபத்தானது. 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்காவில் இஸ்ரேல் இப்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. அப்போது, அமெரிக்க அதிபர் ஜெரால்ட் ஃபோர்டும் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஆயுத ஒப்பந்தங்களை நிறுத்திவைத்தனர். இது அமெரிக்காவின் இஸ்ரேல் கொள்கையை மறுபரிசீலனை செய்தல் என்று அழைக்கப்பட்டது" என்று அவர் எழுதியுள்ளார்.
இந்தச் சூழலுக்குத் தீர்வு காண ஒரே வழி இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதுதான் என்று செகல் கருதுகிறார்.
"புதிய தேர்தலுக்கான வாய்ப்புகளைப் பரிசீலிப்பது, அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பது அல்லது தீவிரப் பழமைவாத யூதக் கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்வது ஆகியவை மிகப்பெரிய தவறாக இருக்கும்" என்று அவர் முடித்துள்ளார்.
"குடியரசுக் கட்சிக்கு எதிராக ஜனநாயகக் கட்சி பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியும், தேர்தலுக்கு முன்பாக அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் சில உறுப்பினர்களிடம் இஸ்ரேல் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருப்பதும், இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் தனது தேர்தல் முடிவுகளில் இன்னும் தெளிவான முடிவை எட்ட முடியாமல் தவிப்பதுடன், இரானுடன் மீண்டும் மோதல் ஏற்படக்கூடிய சூழலையும் எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியமான தருணத்தில் வெளியாகியுள்ளன" என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
"இப்போது, அமெரிக்காவுடனான இஸ்ரேலின் எதிர்கால உறவும் கேள்விக்குறியாகியுள்ளது. இஸ்ரேலின் மிக முக்கியமான கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது. ஆண்டுதோறும் அமெரிக்கா வழங்கும் பல பில்லியன் டாலர் ராணுவ உதவியும் இதில் அடங்கும். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டிலும் இஸ்ரேலுக்கு பாரம்பரியமாக இருந்து வந்த ஆதரவு குறைந்து வருவதை இது காட்டுகிறது'' என்றும் நியூயார்க் டைம்ஸ் எழுதியுள்ளது
''அமெரிக்காவுடனான உறவில் இரு கட்சிகளிடமும் ஆதரவைப் பெறும் கொள்கையை இஸ்ரேல் எப்போதும் ஏன் கடைப்பிடிக்க முயன்றது என்பதற்கு, இந்த தேர்தல் முடிவுகள்தான் காரணம்" என்று ஜெர்மனிக்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் ஜெரமி இசாகரோஃப் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார்.
நீண்டகால தூதரகப் பணியில் இருந்த இசாகரோஃப், வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தில் இரண்டு முறை பணியாற்றியது உட்பட, அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உத்தி ரீதியான உறவின் பல்வேறு அம்சங்களில் பணியாற்றியுள்ளார்.




