சிலருக்கு மிகக் குறைந்த நேரம் தூங்கினாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், நீங்கள் அத்தகைய நபர்களில் ஒருவரா என்பதைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல.

தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அதிக நேரம் தூங்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை என்கிறார் ஏமி பியூ பெர்னார்ட். தற்போது அவர் இரவு 10 மணியளவில் உறங்கச் சென்று அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துவிடுகிறார்.

"நான் உறக்கத்தில் இருந்து முழுமையாக விழித்துவிடுகிறேன். என்னால் தொடர்ந்து படுக்கையில் இருக்க முடியாது" என்கிறார் அவர்.

கொலராடோ பல்கலைக் கழகத்தின் நோயெதிர்ப்புவியல் பேராசிரியராக பெர்னார்ட் இருக்கிறார். அவருக்கு சில நேரங்களில் உடனடியாகத் தூக்கம் வராது. அப்படிப்பட்ட நாட்களில் அவர் வெறும் ஐந்து மணிநேரம் மட்டுமே தூங்கியிருப்பார்.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அடுத்த நாளும் அவர் வழக்கம் போல உற்சாகமாக இருக்கிறார். தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்கிறார், ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார். காலை 8 மணிக்கு முன்பே ஒன்றரை மணி நேரம் வேலை செய்துவிடுகிறார்.

குறைந்த நேரம் தூங்கிவிட்டு இவ்வளவு வேலைகளைச் செய்யும் அவரது திறனைப் பார்த்து நண்பர்கள் வியப்படைகிறார்கள். ஆனால், அவரது குடும்பத்தில் இது இயல்பான ஒன்றுதான். அவரது தந்தையும் சகோதரரும்கூட அப்படித்தான்.

ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு இதைவிட அதிக நேரத் தூக்கம் தேவைப்படுகிறது. அமெரிக்க தேசிய தூக்க அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வுப்படி, 26 முதல் 64 வயதுக்குட்பட்ட சராசரி வயது வந்தோருக்கு ஒவ்வொரு 24 மணிநேரத்திலும் ஏழு முதல் ஒன்பது மணிநேரத் தூக்கம் தேவைப்படுகிறது.

மக்களுக்குத் தேவைப்படும் தூக்கத்தின் அளவில் ஏன் இவ்வளவு பெரிய வேறுபாடு உள்ளது என்பது நீண்ட காலமாக ஒரு புதிராக இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் மரபணுக்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பெர்னார்ட் போன்றவர்களிடம் காணப்படும் அரிதான மரபணு மாற்றங்கள் முதல், பொதுவாகப் பலரிடம் காணப்படும் நூற்றுக்கணக்கான மரபணு வேறுபாடுகள் வரை, சிலர் ஏன் மிகக் குறைந்த நேரம் தூங்கினாலும் இயல்பாகச் செயல்பட முடிகிறது என்பதை இவை விளக்குகின்றன.

எதிர்காலத்தில், போதுமான தூக்கம் கிடைக்காதவர்களை அதன் வழக்கமான பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் இந்தக் கண்டுபிடிப்புகள் உதவக்கூடும்.

கடந்த 2019ஆம் ஆண்டில், பெர்னார்ட் தனது அபாரமான தூக்கத் திறனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணத்தை அறிந்துகொண்டார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சான் பிரான்சிஸ்கோ ஆராய்ச்சிக் குழு, மனிதர்களின் தூக்க நேரத்துடன் தொடர்புடைய ஒரு மரபணு மாற்றத்தைக் கண்டறிந்திருந்தது.

இந்த மாற்றத்தைக் கொண்டிருந்தவர்கள் வழக்கமான நேரங்களில் உறங்கச் சென்றாலும், அவர்கள் மிக அதிகாலையில் எழுந்தனர், இரவில் நான்கு முதல் ஆறரை மணிநேரம் வரை மட்டுமே அவர்கள் தூங்கினர்.

தனது ரத்த மாதிரியை அந்த ஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய பெர்னார்ட், தானும் இந்த மரபணு மாற்றத்தைக் கொண்டிருப்பதை அறிந்துகொண்டார். இந்த அரிதான, மரபுவழியாகப் பெற்றுக் கொள்ளப்படும் உடல்நிலைக்கு குடும்ப வழி இயற்கையான குறைந்த தூக்கத் தேவை (Familial Natural Short Sleep – FNSS) என்று பெயர். அதற்குப் பிறகு, எஃப்என்எஸ்எஸ் பாதிப்புடன் தொடர்புடைய மேலும் பல மரபணு மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையைக் கொண்டவர்கள் குறைந்த நேரம் தூங்கினாலும் எவ்வாறு இயல்பாகச் செயல்படுகிறார்கள் என்பது மிகப் பெரிய புதிர்களில் ஒன்று என்கிறார் அந்த ஆய்வுக் குழுவின் தலைவரும் மூலக்கூறு உயிரியல் நிபுணருமான யிங்-ஹுய் ஃபூ.

எஃப்என்எஸ்எஸ் உடன் தொடர்புடைய மரபணு வேறுபாடுகள் தூக்க நேரத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, குறைவான தூக்கத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் இருந்தும் சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்கக்கூடும் என்பதற்கான சுவாரஸ்யமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நினைவாற்றல் பாதிப்பு இதற்கு ஓர் உதாரணம்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஃபூ தலைமையிலான ஓர் ஆய்வில், எஃப்என்எஸ்எஸ் உடன் தொடர்புடைய மரபணு மாற்றம் எலிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மரபணு மாற்றத்தைக் கொண்ட எலிகள் குறைவான நேரம் தூங்கினாலும், நினைவாற்றல் குறைபாடுகளில் இருந்து அவை பாதுகாக்கப்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. மற்றோர் ஆய்வில், இந்த மரபணு மாற்றங்களில் சிலவற்றைக் கொண்ட எலிகளுக்கு அல்சைமர் நோயின் அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

சர்வதேச ஆய்வுக் குழு ஒன்று 2014ஆம் ஆண்டில், ஒரே கருமுட்டையில் இருந்து உருவாகாத இரட்டையர்களை ஆய்வு செய்தது. அவர்களில் ஒருவருக்குக் குறைந்த நேரத் தூக்கத்துடன் தொடர்புடைய மரபணு மாற்றம் இருந்தது, மற்றொருவருக்கு அந்த மாற்றம் இல்லை. மரபணு மாற்றம் கொண்ட இரட்டையர், தனது சகோதரரைவிட தினமும் சுமார் ஒரு மணிநேரம் குறைவாகத் தூங்குவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

மேலும், இருவரும் தொடர்ந்து 38 மணிநேரம் தூங்காமல் இருக்கச் செய்யப்பட்டபோது, மற்றவருடன் ஒப்பிடுகையில் மரபணு மாற்றம் கொண்ட இரட்டையரிடம் செயல்திறன் குறைபாடுகள் (Performance lapses) சுமார் 40% குறைவாக இருந்ததையும் கண்டறிந்தனர்.

இருவரின் தூக்க முறைகளிலும் சில சுவாரஸ்யமான வேறுபாடுகள் இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். குறைந்த நேரமே தூங்கினாலும், மரபணு மாற்றம் கொண்ட இரட்டையர் தனது சகோதரரைப் போலவே கிட்டத்தட்ட அதே அளவு விரைவான கண் அசைவில்லாத தூக்கத்தைப் பெற்றிருந்தார். இதில் ஆழ்ந்த தூக்கமும் அடங்கும். இதன் மூலம், அவர் தூங்கிய குறைந்த நேரத்திலேயே, சில வகைகளில், அதிகமான தூக்கப் பலன்களைப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.