அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார்.

"லாஸ் ஏஞ்சலிஸ் கவுன்டியில் வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் புலம்பெயர்ந்தவர்கள். அவர்களில் ஒருவராக என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் இந்தியாவில் பிறந்தேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது எனது குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது".

ஜனநாயக சோசலிசவாதியான நித்யா ராமன் தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசார இணையதளப் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் முன்னெடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்ப்பது தனது பிரதான நோக்கங்களில் ஒன்று' என பிரசாரத்தில் குறிப்பிட்டிருந்தார் நித்யா ராமன்.

கேரளத்தின் திருச்சூரில் 28 ஜூலை, 1981-இல் ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் நித்யா ராமன். அவரது தந்தை வெங்கட்ராமன் கேரள மாநிலத்தின் பொதுத்துறை நிறுவனமான கெல்ட்ரான்-இல் பணிபுரிந்தவர். திருச்சூர் பகுதியைச் சேர்ந்த தாயார் சுதா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்தார்.

அவரது உறவினர்கள் தற்போதும் திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்கள்.

லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவரது உறவினர் வனஜா சங்கர், "நித்யா ராமன் என்னுடைய சகோதரனின் மகள். நாங்கள் சில தலைமுறைகளுக்கு முன்பாக தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு குடிபெயர்ந்தோம். ஆறு வயது வரை நித்யா படித்தது, வளர்ந்தது எல்லாம் இங்கே திருவனந்தபுரத்தில் தான்" என்று கூறினார்.

"அவரது அப்பா ஐஐடி பாம்பே-இல் கல்வி பயிலச் சென்றார். பிறகு அமெரிக்காவிற்குச் சென்றார். அவர் சென்று ஒரு வருடம் கழித்து நித்யாவும் அவரது அம்மாவும் அமெரிக்கா சென்றார்கள்" என அவர் கூறினார்.

"எங்கள் குடும்பத்தில் யாருமே அரசியல் குறித்து பேசமாட்டோம். குடும்பத்தில் முதல் அரசியல்வாதியும் நித்யா தான். 2021இல் தன் பிள்ளைகளுடன் அவள் திருவனந்தபுரம் வந்து, சில நாட்கள் தங்கியிருந்தார்" என்கிறார் வனஜா சங்கர்.

"கேரளத்தில் பிறந்த நித்யா, அமெரிக்காவில் நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் பொதுச் சேவையில் தனது முத்திரையைப் பதித்து, தற்போது வரலாற்றில் தன் பெயரைப் பொறித்துள்ளார். அவரது பயணம் சர்வதேச மலையாளி சமூகத்திற்கு ஒரு பெரும் உத்வேகமாக விளங்குகிறது" என கேரளத்தின் முதலமைச்சர் வி.டி.சதீசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள உறவினர்களுடனான தனது தொடர்பு குறித்து ஒரு நேர்காணலில் பேசிய நித்யா ராமன், "இந்தியாவில் கழித்த என் குழந்தைப் பருவம் நினைவில் உள்ளது. என் இளமைப் பருவத்தின் குறிப்பிட்ட ஆண்டுகள் அங்கு தான் கழிந்தன."

"என் தந்தைவழிப் பாட்டி இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார், ஆனாலும் தினமும் செய்தித்தாளை முழுமையாக வாசிப்பார்; எனக்குத் தெரிந்த எவரை விடவும் அரசியலை நன்கு அறிந்தவராகவும் அதில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். எனது தற்போதைய பணியை அவருடைய அந்த ஆர்வத்தின் நேரடித் தொடர்ச்சியாகவே நான் பார்க்கிறேன், அதுவே இந்த வேலையைச் செய்ய எனக்கு உத்வேகம் அளிக்கிறது" எனக் கூறியிருந்தார்.

அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த பிறகு முதலில் லூசியானாவிலும் பின்னர் பாஸ்டன் பகுதியிலும் (பர்லிங்டன், மாசசூசெட்ஸ்) நித்யா ராமனின் குடும்பம் குடியேறியது. தனது 22வது வயதில் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.

"பாஸ்டன் பகுதியில் ஒரு மிகப்பெரிய இந்திய சமூகத்தோடு நான் வளர்ந்தேன். அங்கு தமிழ் சங்கம், கேரள சங்கம், குஜராத்தி சங்கம் என இந்திய கலாசாரம் நிறைந்திருந்தது" என ஒரு சமீபத்திய நேர்காணலில் பேசியிருந்தார் நித்யா ராமன்.

நித்யா ராமன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டமும், பின்னர், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) நகர்ப்புறத் திட்டமிடல் துறையில் முதுகலைப் பட்டமும் (2008) பெற்றார். 2010இல் வாலி சந்திரசேகரன் என்பவரை நித்யா ராமன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் நாளிதழின் தகவலின்படி, நித்யா ராமனும் வாலி சந்திரசேகரனும் 1999ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்று கொண்டிருந்த போது முதன்முதலில் சந்தித்தனர்.

வாலி சந்திரசேகரன் அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களில் எழுத்தாளராகப் பணியாற்றிவருகிறார். பிரபல அமெரிக்க 'சிட்-காம்' தொடரான 'தி ஆஃபீஸ்'-இல் ஒரு சிறு வேடத்திலும் இவர் நடித்துள்ளார்.

நித்யா ராமன் தற்போது குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் சில்வர் லேக் பகுதியில் வசித்து வருகிறார்.

தனது கல்லூரி காலத்திலும், அமெரிக்க அரசியலில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு முன்பும், இந்தியாவில் பல சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக நித்யா ராமன் நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.

"காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (2010) நடைபெறுவதற்கு முன்பு நான் டெல்லியில் இருந்தேன். அப்போது, யமுனை நதிக்கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைகள் குறித்து படித்திருந்தேன். அந்த நடவடிக்கைகளால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்திருந்தனர்." என அவர் 2020இல் அளித்த ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.