நூலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்களின் ஆசிரியர்கள், பதிப்பகங்கள், அவற்றின் விலை மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகத் தமிழக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு ஏக்கர் பரப்பளவில், ஏழு தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டன.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் நூலகத்தைத் திறந்துவைத்தார்.

இந்த நூலகம் அமைக்கப்பட்டதற்கான பெருமை யாருக்குச் சொந்தம் என்பது குறித்து திமுகவுக்கும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே அரசியல் விவாதம் நிலவிவந்தது. இந்த நிலையில்தான் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்' என்ற தலைப்பில் பிரபல தமிழ் இணையதளத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் இன்று (நவம்பர் 6 ) கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

நூலகத்தின் நான்காவது தளத்தில் உள்ள தமிழ் நூல்களை ஆய்வு செய்தபோது, ஒரு பதிப்பத்தின் பெயரில் சுமார் 1,800 நூல்கள் இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, சூர்யா பாலு என்பவர் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 'நாலடியார் வாழ்வின் வழிகாட்டி' என்ற 300 பக்க நூலுக்கு 1,445 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற பதிப்பகங்கள் இதே அளவிலான நூல்களை சுமார் 350 ரூபாய்க்கு விற்பனை செய்வதுடன் ஒப்பிட்டு, இந்த விலை நிர்ணயம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த நூலில் நாலடியார் என்பவர் ஒரு கவிஞராகவும் தத்துவஞானியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், நாலடியார் என்பது சமண முனிவர்கள் இயற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பாகும்.

இதேபோல், 'மதுரைக்காஞ்சி ஓர் இலக்கியப் பயணம்' என்ற நூலில் மதுரைக்காஞ்சியை இயற்றியவர் குறித்துத் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரைக்காஞ்சியை இயற்றியவர் மாங்குடி மருதனார். ஆனால் குறிப்பிட்ட நூலில் வேறொரு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'பாரதியார் கதைகள்', 'கீழடி செப்பும் வரலாறு', 'தமிழ்நாடு ஒரு பார்வை' உள்ளிட்ட நூல்களிலும் அடிப்படையான வரலாற்றுத் தகவல்கள் தவறாக இடம்பெற்றுள்ளதாகப் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நூல்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.

நூலாசிரியர்களின் பெயர்கள் போலியானவை என்றும், நூல்களில் இடம்பெற்றுள்ள சர்வதேசத் தரப் புத்தக எண்களை (ISBN) இணையத்தில் தேடியபோது கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தப் புத்தகங்கள் எந்த நடைமுறையின் கீழ் தேர்வு செய்யப்பட்டன, எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டன, யார் ஒப்புதல் அளித்தனர் என்பன குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கு நூல்களைப் பரிந்துரைப்பதற்காக, முந்தைய திமுக ஆட்சியில் 2025ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதாக விஜய் தெரிவித்துள்ளார்.