தங்கம், ரீனியம் இரண்டின் உருகுநிலைக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் தங்கத்தில் ரீனியத்தைக் கலப்பது சாத்தியமில்லை என்று தங்கநகை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். தங்கத்தில் கலப்படம் இருந்தால் அதை தற்போதுள்ள எக்ஸ்ஆர்எஃப் மற்றும் பிஐஎஸ் சோதனைகளில் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால் கலப்படம் நடக்க வாய்ப்பில்லை என்பது இவர்களின் வாதமாகவுள்ளது.
ஆனால் ரீனியத்தைப் பொடியாக்கி தங்கத்தில் கலப்பது சாத்தியம் என்று விளக்குகின்றனர் வேதியியல் துறை மற்றும் நானோ டெக்னாலஜி பேராசிரியர்கள்.
இவற்றை எக்ஸ்ஆர்எஃப் போன்ற உபகரணங்களால் கண்டறிய முடியாது என்று கூறும் இவர்கள், அதைக் கண்டுபிடிக்க ''எப்மா'' போன்ற வேறு விதமான உபகரணங்கள் இருப்பதாக விளக்குகின்றனர். தங்கக் கலப்படத்தைக் கண்டறிய மண்டல வாரியாக மையத்தை அமைக்கலாம் என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு இவர்கள் வழங்கும் ஆலோசனையாகவுள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தில் ரீனியம் என்ற உலோக கலப்படம் நடப்பதாகவும், ரீனியம் கலந்த தங்கத்துக்கு 'ஹால்மார்க்கிங்' சான்று தரப்பட்டுள்ளதாகவும், கலப்படத்தை பரிசோதனை இயந்திரத்தால் கண்டறிய முடியவில்லை என்றும் 'டைனிக் பாஸ்கர்' செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவிலிருந்து ரீனியம் பொடி வருவதாகவும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் முகவர்கள் இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
'டைனிக் பாஸ்கர்' வெளியிட்ட செய்தியின்படி, இந்த உலோகப்பொடியை சீனாவிலிருந்து அனுப்பும் முகவரிடம் இந்த ஊடகத்தின் செய்தியாளர் பேசியபோது, தங்கத்தில் 25 சதவீதம் வரை ரீனியம் பொடியைக் கலந்தாலும் யாராலும் கண்டறிய முடியாது என்று அவர் கூறியிருக்கிறார்.
மும்பையிலிருந்து ஒரு முகவரிடம் ரீனியம் பொடியை இந்தச் செய்தி நிறுவனம் 100 கிராம் ரூ.5300க்கு (கூரியர் கட்டணம் ரூ.300 உட்பட) வாங்கியுள்ளது.
அதன்பின்பு அந்தப் பொடியை 7.830 கிராம் எடையுள்ள 24 காரட் தூய தங்கத்துடன் கலந்தபோது, அது 8.830 கிராமாக அதிகரித்தது. சோதனையில் அந்த கலவை 24-காரட் தங்கம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதனுடன் 0.75 கிராம் வேறொரு உலோகத்தைச் சேர்த்து 22 காரட் நகையைத் தயாரித்துள்ளனர். ராஜஸ்தானிய ராஜபுதன பாணியிலான 'தேசி ஆட்' எனப்படும் இந்த ஆபரணம், 9.580 கிராம் எடையுடன் உருவாக்கப்பட்டது.
உண்மையில் அதிலிருந்த தங்கத்தின் எடை 7.830 கிராம் ஆகவும், 20 காரட் தங்கமாகவும், அதன் தூய்மைத் தன்மை 81.73 சதவீதமாகவும் மட்டுமே இருந்த நிலையில், ''ஹால் மார்க்கிங்'' மையம் உள்ளிட்ட 6 சோதனைகளிலும் அதில் ரீனியம் கலந்திருப்பது கண்டறியப்படவில்லை என்று 'டைனிக் பாஸ்கர்' கூறியுள்ளது.
மாறாக புகழ்பெற்ற ஹால்மார்க் மையத்தில் பரிசோதிக்கப்பட்டபோது, அதற்கு '92K916' என்ற ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டதாகவும், அது 22 காரட் தங்கம் என்றும், தூய்மைத்தன்மை 91.6 சதவீதம் என்றும் சோதனை அறிக்கை தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு நகைக்கடையில், காரட் கண்டறியும் இயந்திரத்தைப் பயன்படுத்திச் சோதித்தபோது, திரையில் தங்கம் 93.70%, வெள்ளி 5.39% மற்றும் தாமிரம் 0.90% எனத் தெரிந்ததாகவும், ரீனியம் குறித்த எந்தக் குறிப்பும் இல்லை என்றும், பிரபல நகைக்கடைகளில் இருந்த இயந்திரங்களும் இதைக் கண்டறியவில்லை என்றும், அதனை 22-காரட் தங்கத்திற்கான விலையில் வாங்க கடைக்காரர்கள் தயாராயிருந்ததாகவும் அச்செய்தி கூறியுள்ளது.
'டைனிக் பாஸ்கர்' செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தங்கத்தில் ரீனியம் கலப்படம் என்ற தகவல் பரவி விவாதப் பொருளானது.
கோயம்புத்தூர் தங்கநகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தரும் தகவலின்படி, கோவையில் மட்டும் ஆயிரக்கணக்கான தங்கநகை தொழிற்கூடங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.
இதன் காரணமாகவே கோவை குறிச்சியில் தங்கநகை தொழில் பூங்கா ஒன்று அமைக்க முந்தைய திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது பரவி வரும் தங்கத்தில் ரீனியம் கலப்படம் என்ற தகவல், கோவை தங்கநகைத் தொழிலிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளதாக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கோவையிலுள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்க வந்திருந்த ஷோபிகாவிடம் பிபிசி பேசியது. பழைய நகைகளை மாற்றி, புதிய நகை வாங்க வந்திருந்ததாகக் கூறிய அவர், ''தங்கம் விலை மாற்றம் கண்டிருப்பதால் பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு, புதிய நகைகளை வாங்கலாம் என்று வந்திருக்கிறேன். என்னைப் போலவே பலரும் நகை வாங்க வந்திருக்கிறார்கள். ஆனால் தங்கத்தில் ரீனியம் கலப்பதாகப் பரவிய தகவலால் கொஞ்சம் பயம் ஏற்பட்டிருக்கிறது.'' என்றார்.
''அந்தக் காலத்தில் இருந்தே கோவை தங்கம் என்றால் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. இருந்தாலும் அவர்களிடம் வாங்கும் தங்கம் கலப்படமற்றது என்பதை துல்லியமாகக் கண்டறியும் சோதனை உபகரணங்களை வாங்கி தங்கத்தின் தரத்தை நகைக்கடைக்காரர்கள் உறுதிப்படுத்தினால் இன்னும் அதிக நம்பிக்கையுடன் நகை வாங்கலாம்.'' என்றார் ஷோபிகா.
கோவை தங்கநகை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 550 உறுப்பினர்களும், 130 இளைஞர் அணி உறுப்பினர்களும் இருப்பதாகக் கூறும் இச்சங்கத்தின் பொருளாளர் விக்னேஷ், கோவையில் மட்டும் ஒரு நாளுக்கு 100 முதல் 200 கிலோ வரை தங்க நகை உற்பத்தி செய்வதாகவும், மாதத்தில் 3 முதல் 4 டன் வரை உற்பத்தி நடப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து நகைகளுமே பிஐஎஸ் தரத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன என்கிறார் அவர்.




