திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் சர்வே தூண்(GTS) அமைந்துள்ளதாக, தமிழ்நாடு அரசின் நில அளவைத் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள 484 நில அளவைக் கற்கள் நேரில் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது' என, அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'அவை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பை அளப்பதற்காக அமைக்கப்பட்ட முக்கோணவியல் நில அளவைத் தூண்கள்' எனவும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையின் உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது.
'இதன் அருகில் உள்ள தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம்' எனக் கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.
கார்த்திகை தீப நாள் நெருங்கி வருவதால், தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்' எனக் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்தநிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண், நிலப்பரப்பை துல்லியமாக அளப்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிலஅளவைத் தூண் (GTS)' என ஆய்வறிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் தீர்வைகள் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆகியவை இதனைத் தயாரித்துள்ளது.
பட மூலாதாரம், Tamil Nadu Departments of Survey and Settlement and Archaeology
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிலஅளவை தொடர்பான அனைத்து ஜிடிஎஸ் (Great trigonometrical survey) நிலையங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்துமாறு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு வருவாய்த்துறை அனுமதி அளித்துள்ளது. அதில், சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு அருகில் அமைந்துள்ள கல் தூண், நில அளவைக் கல் எனவும் தர்காவுக்கு கீழே அமைந்துள்ள இடமே 'விளக்கு ஏற்றும் தூண்' எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வரைபடமும் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ஜிடிஎஸ் நிலையத்தில் இருந்து நாகமலை, சதுரகிரி, கோபால்சுவாமி மலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பொன்னுருக்கி மலை மற்றும் பெருமாள் மலை உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட முக்கோண அளவீடுகளும் பிரிட்டிஷ் காலத்தில் உள்ள ஜிடிஎஸ் தொடர்பான அறிக்கையில் உள்ள மதிப்புகளுடன் ஒத்துப் போவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.
நில அளவைப் பணியில் முக்கோண அளவீட்டு முறை மூலம் ஜிடிஎஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஓர் அடிப்படைக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு அருகில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான கோணங்களை அளவிட்டுள்ளனர்.
மலைக் குன்றுகள் நிறைந்த நிலப்பரப்புகளில் தெளிவான கோடுகள் கிடைத்ததால் முக்கோண அளவீட்டுப் புள்ளிகளை நிர்ணயிப்பது எளிதாக இருந்துள்ளது. அதேநேரம், சமவெளிப் பகுதிகளில் தெளிவான கோடுகள் கிடைப்பது குறைவாக இருந்ததால் அதிக எண்ணிக்கையிலான ஜிடிஎஸ் நிலையங்களை ஆங்கிலேயர்கள் அமைத்துள்ளனர்.
அதன்படி, முக்கோணவியல் அளவீட்டை முதன்மை நிலையங்கள் மற்றும் சிறிய நிலையங்கள் என வகைப்படுத்தியுள்ளதாகக் கூறும் ஆய்வறிக்கை, 'பெரிய நிலையங்களில் 3 முதல் 4 அடி விட்டமும் 1 முதல் 14 அடி உயரமும் கொண்ட திடமான கற் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன' என்கிறது.
'இவை பொதுவாக குன்றுகள் அல்லது மேடுகள் போன்ற உயர்ந்த நிலப்பகுதிகளில் காணப்படுகின்றன. சமவெளிகளில் செங்கல் அடிப்படையிலான தூண்களைக் கொண்ட கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன' எனவும் கூறப்பட்டுள்ளது.
சமவெளிப் பகுதிகளில் சுமார் 35 அடி உயரமுள்ள மரக் கம்பங்களை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவற்றில் கோணங்களை அளவிடுவதற்கு தியோடலைட் கருவிகள் பொருத்தப்பட்டதாக அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Tamil Nadu Departments of Survey and Settlement and Archaeology
ஜி.டி.எஸ் நிலையங்களின் கட்டுமானத்தில் புள்ளிகள் மற்றும் மைய வட்டங்களைக் கொண்டு இடங்களைக் குறித்துள்ளனர். 'இந்தக் குறிப்புகள் அந்த இடத்திலேயே திடமான பாறை அல்லது கல் கட்டுமானக் கோவில்கள், குன்றுகள், மேடுகள் உள்ள தரையில் உறுதியான கற்களின் மீது பொறிக்கப்பட்டன' என ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த நிலையங்களை தரைக்கு மேலே உயர்த்துவதற்காக ஓர் அடையாளக் கல் தரையில் பதிக்கப்பட்டு அதன் மேல் ஒரு மேடை அமைக்கப்பட்டு அதன் மீது மற்றொரு அடையாளக் கல் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.




