ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 24) தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் எம்எல்ஏ மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்து, நியாயமான, பாரபட்சமற்ற மற்றும் விரைவான விசாரணை நடத்த டிஜிபி மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது.

முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளாரா என்பது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அரசு தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பெண் அதிகாரியே புகார் அளிக்காத நிலையில், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி வி. லட்சுமிநாராயணன் வாய்மொழியாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அருள் விக்னேஷ் மீதான பாலியல் வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி. நியமிக்கப்பட்டிருப்பதாகவும், ஐ.ஜி. காமினி இவ்வழக்கின் விசாரணையை கண்காணிப்பார் என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின்போது, பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் எந்தவொரு விஷயமும் அகற்றப்பட வேண்டும் என்று திங்கள்கிழமை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, தற்போது ஊடகங்களில் பரவி வரும் ஆபாசமான செய்திகள் மற்றும் பதிவுகள் ஏன் இன்னும் நீக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு, பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதுபோன்ற பதிவுகளை அரசே தாமாக முன்வந்து ஏன் நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியது.

அப்போது நீதிமன்றம், "இது தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் மறைமுகமாக அவமானப்படுத்தும் செயலாகும். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? புகார்தாரர் ஃபேஸ்புக் பதிவுகள் குறித்து புகார் தெரிவிக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளை நீங்களே ஏன் மேற்கொள்ளக் கூடாது என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறதே?" என்று கேள்வி எழுப்பியது.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் POSH சட்டத்தின்கீழ் உரிய குழு அமைக்கப்பட்டுள்ளதா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மாநில அளவில் இதுபோன்ற குழு அமைக்கப்படாமல் இருக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இதுவரை அக்குழு ஏன் அமைக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், "அவர் தலைமைச் செயலாளராக இருந்தாலும் சரி, துப்புரவுப் பணியாளராக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தப் பதவியில் இருந்தாலும் சரி, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை அவருக்கு உள்ளது. இந்தச் சம்பவம் நிச்சயமாக நடந்துவிட்டது என்று நான் கூறவில்லை. ஆனால், இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்" என்று தெரிவித்தது.

இதற்கிடையில், இந்த வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் எம்எல்ஏ சம்பந்தப்பட்டிருப்பதால், காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு மேலான அதிகாரி ஒருவர் விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

ஆபாசமான பதிவுகள் மற்றும் செய்திகள் இணையத்தில் பரவுவதைத் தடுக்கவும், அவற்றை நீக்கவும் காவல்துறையின் சைபர் பிரிவு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், வழக்கை விசாரிக்க அமைக்கப்படும் சிறப்புக் குழுக்கள் குறித்த விவரங்களையும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உள்ளகப் புகார் குழு குறித்த விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் டிசம்பர் 22ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 10, 2026 அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ்அப் மூலம் ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியாகத் தவறான கருத்துகளைக் கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

எம்எல்ஏ மது போதையில் ஐஏஎஸ் அதிகாரியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்றதாகவும், இது அத்துமீறி நுழையும் குற்றமாகும் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டார்.