உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் கூட, திருப்பரங்குன்றம் மலை உச்சி மீது உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், கோவில் முன்பாக கூடிய இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில் தூணில் அருகே நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மலைப்பகுதியை நோக்கி சென்றனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அப்பகுதியில் 5,000-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் சன்னதி தெரு பகுதியில், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் நகர், மலைப்பகுதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பகுதிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றத்திற்குள் நுழையும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என களத்தில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் சிராஜ் தெரிவிக்கிறார்.
வழக்கமாகத் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு முன்புள்ள கல் மண்டபம் வரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், இந்த முறை வாகனங்கள் அந்தப் பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. கல் மண்டபத்திலிருந்து வெகு தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கோயிலுக்கு வழிபாடு நடத்த வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவுக்குச் செல்லும் வழி முழுவதும் காவல்துறையினரால் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரத வீதியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா மசூதியைச் சுற்றியும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று தடை உத்தரவு பிறப்பித்தார். நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை அனுமதியற்ற கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், மலை ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வழிபாடுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.
நெல்லையிலிருந்து பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திருப்பரங்குன்றம் நோக்கி வாகனத்தில் புறப்பட்டனர். வாகனம் மதுரை ரோடு கணபதி மில் சோதனைச் சாவடி அருகே சென்ற போது காவல்துறையினர் வாகனத்தை இடைமறித்தனர். "திருப்பரங்குன்றத்திற்குள் நுழையக் கூடாது என்று தடை உத்தரவு உள்ளது. எனவே நீங்கள் செல்ல முடியாது, உங்களை அனுமதிக்க மாட்டோம்" என காவல்துறையினர் கூறினர்.
அதனை அவர்கள் ஏற்காததால், நயினார் நாகேந்திரனுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "எந்தவித சட்டப்பூர்வ தடையுத்தரவும் இல்லாத நிலையில், என்னை வழிபாட்டிற்குச் செல்ல விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். கைது செய்வதாகக் கூறி எங்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுப்பது ஒரு தனிமனிதனின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25 மற்றும் 26-ன் படி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது விருப்பப்படி இறைவனை வழிபடவும், ஆன்மீக வழிபாடுகளைச் சுதந்திரமாக நடத்தவும் உரிமை உண்டு. ஆனால், தமிழகத்தில் இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், திருப்பரங்குன்றம் போன்ற திருத்தலங்களில் தீபம் ஏற்றுவதற்கும் வழிபாடுகளுக்கும் தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்." என்றார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்படும்போதே, திருப்பரங்குன்றம் செல்ல வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதனை மறுத்து மதுரைக்கு வந்துள்ளேன். நேராகத் திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்கிறேன். அங்கு என்னைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பது தெரிந்துதான் செல்கிறேன்" என்று கூறினார்.
இதேபோல், கோயம்புத்தூரில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட பாஜக மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எல்.முருகனை அன்னூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினருடன் அவர் வாக்குவாதம் செய்த காட்சிகளை ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அதேநேரத்தில், அங்கு தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக 'லைவ் லா ' செய்தி குறிப்பிட்டது.
ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதிப்பதை, அங்கு தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கம் என்ற கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட இறுதி அங்கீகாரமாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் லைவ் லா தெரிவித்துள்ளது.




