விலங்குகளின் உலகம் அழகானது மட்டுமல்ல, பல நேரங்களில் மர்மங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதை நிரூபிக்கும் வகையிலான ஒரு சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை கேமராவில் பதிவாகியுள்ளது.

குஜராத்தின் சாசன் கிர் பகுதியில் காட்டுயிர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த மிஹிர் படேல் இந்தக் காட்சியைப் பதிவு செய்துள்ளார்.

இதை ஓர் 'அரிய காட்சி' என்று குறிப்பிடும் மிஹிர் படேல், கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக காட்டுயிர் புகைப்படம் எடுத்து வருவதாகவும், இதுபோன்ற ஒரு காட்சியை இதற்கு முன்பு நேரில் பார்த்ததில்லை என்றும் கூறுகிறார்.

ஒரு பெண் சிங்கத்தின் வாயில் உயிருடன் இருந்த குட்டி மான் ஒன்று காணப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் சிங்கம் அதைக் கொன்று உண்ணவில்லை. மாறாக, அந்த மான் குட்டியைக் காப்பாற்றியது.

வேட்டையாடும் இயல்புக்கு மாறாக இருந்த இந்தக் காட்சியைப் பார்த்த காட்டுயிர் புகைப்படக் கலைஞர் மிஹிர் படேல் வியப்படைந்தார்.

இதுகுறித்துப் பேசிய அவர், "அந்தப் பெண் சிங்கத்திற்குத் தாய்மை உணர்வு வெளிபட்டிருக்கலாம். அதனால்தான் குட்டி மானை வேட்டையாடாமல், மற்ற சிங்கங்களிடம் இருந்தும் அதைக் காப்பாற்றியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது" என்றார்.

உயிரியல் மருத்துவப் பொறியாளரான மிஹிர் படேலுக்கு காட்டுயிர் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.

இந்த அனுபவம் குறித்து அவர் பேசுகையில், "காட்டுயிர் புகைப்படங்கள் எடுப்பதற்காக ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை சாசன் கிர் மற்றும் குஜராத்தின் பிற காட்டுயிர் சரணாலயங்களுக்குச் செல்வேன். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி சாசன் கிர் பகுதியில் சஃபாரி சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட வழித்தட எண் 13."

"அப்போது காட்டுயிர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென காட்டிற்குள் இருந்து வெளியே வந்த ஒரு பெண் சிங்கத்தின் மீது என் பார்வை விழுந்தது. அதன் வாயில் ஒரு குட்டி விலங்கு இருந்தது."

"முதலில், அந்தப் பெண் சிங்கம் தனது குட்டியைத்தான் தூக்கிக்கொண்டு வருவதாக நினைத்தேன். ஆனால், கேமரா மூலம் 'ஜூம்' செய்து பார்த்தபோதுதான் அதன் வாயில் இருந்தது குட்டிமான் என்பது தெரிய வந்தது" என்றார்.

அதை அவர் விரிவாக விவரித்தார். "அந்தப் பெண் சிங்கம் குட்டி மானை வேட்டையாடியிருக்கவில்லை. குட்டி மான் உயிருடன் இருந்தது. கண்களை இமைத்துக் கொண்டிருந்ததுடன், சத்தமும் எழுப்பியது. அந்தக் காட்சியைப் பார்த்து நான் வியப்படைந்துவிட்டேன்."

"அந்த நேரத்தில் பெண் சிங்கம் தொடர்ந்து என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதனுடன் மற்றொரு சிங்கமும் இருந்தது. ஆனால், அந்தப் பெண் சிங்கம் குட்டி மானை அந்தச் சிங்கத்திடம் இருந்தும் விலக்கி வைத்திருந்தது. அதன் அருகில்கூட செல்ல விடவில்லை."

"இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். அந்தப் பெண் சிங்கத்துடன் ஒரு சிங்கக் குடும்பமே இருந்தது. அதில் நான்கு வளர்ந்த பெண் சிங்கங்களும், ஆறு முதல் ஏழு மாத வயதுடைய அவற்றின் குட்டிகளும் இருந்தன. ஆனால், வாயில் குட்டி மானை வைத்திருந்த பெண் சிங்கம் அந்தக் கூட்டத்தில் இருந்து தனியாகச் சென்று கொண்டிருந்தது" என விவரிக்கிறார் மிஹிர்.

"மற்ற சிங்கங்களும் பெண் சிங்கங்களும் அருகிலிருந்த நீர்நிலைக்குச் சென்று தண்ணீர் குடித்தன. ஆனால், இந்தப் பெண் சிங்கம் அவற்றுடன் சேரவில்லை. மாறாக, ஒட்டுமொத்தக் கூட்டத்தில் இருந்தும் விலகி, குட்டி மானைப் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தது."

"இந்த மான் குட்டியை எங்கேயாவது கீழே வைத்தால், மற்ற பெண் சிங்கங்களோ அல்லது அவற்றின் குட்டிகளோ அதைக் கொன்று தின்றுவிடும் என்று அந்தப் பெண் சிங்கம் உணர்ந்திருக்கலாம். அதனால்தான் அதை வாயில் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக் கூட்டத்திடம் இருந்தும் விலகிச் சென்றது."

"அந்தப் பெண் சிங்கம் மான் குட்டியைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் இருந்த பாதுகாப்பான ஓர் இடத்திற்குச் சென்றது."

"அப்போது, குட்டி மானை வாயில் வைத்தபடியே காட்டுக்குள் அமர்ந்ததையும் பார்த்தேன். ஆனால், பின்னர் அது அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது. அதனால், அந்தக் காட்சியை என்னால் கேமராவில் தொடர்ந்து பதிவு செய்ய முடியவில்லை. ஆனால், அது குட்டியைக் காப்பாற்றியிருந்தது. அதைக் கொன்று வேட்டையாடவில்லை" என்றார் மிஹிர்.

"பொதுவாக, மாமிசம் உண்ணும் விலங்குகள் தங்களின் இரையைத் தாடைகளால் மிகவும் இறுக்கமாகக் கவ்விப் பிடித்திருக்கும். ஆனால், இந்தக் காட்சியைப் பார்த்தபோது அந்தப் பெண் சிங்கம் குட்டி மானை வேட்டையாட நினைப்பதாக எனக்குத் தோன்றவில்லை" என்றும் மிஹிர் கூறுகிறார்.

"ஏனெனில், அது குட்டி மானை மிகவும் மென்மையாகப் பிடித்திருந்தது. இந்தச் சம்பவத்தின்போது ஒருமுறை குட்டி மானை சுமார் ஒரு நொடி தரையில் வைத்தது. பின்னர், மீண்டும் அதைச் சரியாகத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் செல்லத் தொடங்கியது" என்று அவர் விவரித்தார்.

தனது அனுபவம் குறித்தும், இந்தக் காட்சி எவ்வளவு அரிதானது என்பது குறித்தும் விவரித்த மிஹிர் படேல், "கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக காட்டுயிர்களைப் புகைப்படம் எடுத்து வருகிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு காட்சியை இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்றார்.