(இந்த கட்டுரையில் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரக்கூடும்)

மென்மையான தென்றலும் குண்டூசி அளவுக்கான மெல்லிய சாரலும் என்னை நனைத்துக் கொண்டிருந்தன. காசி பற்றி வாசித்த விஷயங்களையும் செவிவழிச் செய்தியாகக் கேட்ட சில கதைகளையும் மனதுக்குள் அசை போட்டவாறே காசியை சுற்றிப் பார்க்க நடக்கத் தொடங்கினேன்.

காசி, பனாரஸ், வாரணாசி என பல பெயர்களில் அறியப்படும் இந்த நகரம் இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நகரில் மரணித்தாலோ அல்லது உடலைத் தகனம் செய்தாலோ மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஒரு சாராரிடம் உள்ளது. தமிழ் மற்றும் தமிழர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறது காசி.

காசியின் குறுகிய தெருக்களுக்குள் புகுந்து நடக்க ஆரம்பித்தேன். சாரைசாரையாய் வரும் மனிதர்கள், அவர்களுக்கு மத்தியில் வலம் வரும் மாடுகள் - சக மனிதர்களுக்கு வழிவிட கடுமை காட்டுபவர்கள் கூட மாடுகள் வருகையில் இரண்டு புறமும் பிரிந்து வழிவிடுகிறார்கள். மணி அடிக்கும் சைக்கிள்கள், ஹாரன் அடிக்கும் பைக்குகள் என பிரதான சாலைகளுக்கு இணையான பரபரப்பைக் கொண்டிருந்தன அந்தக் குறுகிய தெருக்கள்.

எதிரே வந்த மாட்டுக்கு வழிவிட முடியாமல் பின்னோக்கி இரண்டு எட்டு வைத்து ஒரு லஸ்ஸி கடையின் வாசல் படியில் ஏறிய போது, நீண்ட நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதைக் கண்டேன்.

ஒரு சடலம் வந்து கொண்டிருந்தது. மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் தங்க நிற துணி போர்த்தி, ஏதோ முழங்கிக்கொண்டே அந்த சடலத்தைக் கொண்டு சென்றனர். அப்போது அருகே இருந்த கடைக்காரரிடம் ஒன்றைக் கவனித்தேன். ஒரு நொடி கண்ணை மூடி தலையை கீழசைத்தவாறு பெருவிரல் நீங்க நான்கு விரலால் நெஞ்சில் கை வைத்து முணுமுணுத்தார். அவரின் அந்த அசைவு முன்னர் வாசித்த சங்க இலக்கியப் பாடலான ஒரு கலித்தொகை பாடலை எனக்கு நினைவுபடுத்தியது.

தலைவியும் தோழியும் பேசிக்கொள்ளும் இந்தப் பாடலில் மாற்றார் துயரத்தை தன் துயரமாகக் கருதும் பண்பாக வாரணாசி மக்களின் குணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கலித்தொகை மட்டுமல்ல சிலப்பதிகாரம், மணிமேகலை என பல்வேறு பழங்கால இலக்கிய நூல்களில் காசி பற்றி இது போல குறிப்புகள் உள்ளன. இது பழங்காலந்தொட்டே தமிழர்களுக்கும் அந்த நகரத்துக்குமான பரிச்சயத்தைக் காட்டக்கூடியதாக உள்ளது.

அடுத்ததாக, காசியின் பிரதான அடையாளமாகப் பார்க்கப்படும் காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் நுழைந்தேன்.

காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் தமிழர்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தக் கோவிலில் நான்கு வேளை பூஜை நடக்கும் நிலையில், அதில் மூன்று வேளை பூஜையை தமிழர்கள்தான் செய்கிறார்கள். காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் மூலம் தினமும் 3 வேளைக்கான பூஜை பொருட்கள் இந்தக் கோவிலுக்கு வழங்கப்படுகின்றன. இந்தப் பாரம்பரியம் நெடுங்காலமாகத் தொடர்வதாகக் கூறுகிறார் அந்தச் சத்திரத்தின் மேலாளர் கே.ஏ.விஸ்வநாதன்.

சத்திரத்தில் இருந்து கோவிலுக்குப் பூஜை பொருட்கள் கொண்டு செல்வதை 'சம்போ' என இவர்கள் குறிப்பிடுகின்றனர். பூஜைக்கான மலர், சந்தனம், பால் உள்ளிட்ட பல அபிஷேகப் பொருட்கள் தவில், நாதஸ்வரம் இசைத்து தினமும் 3 முறை சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுவதாக அதன் மேலாளர் கூறுகிறார்.

1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காசியில் கலகங்கள் நடந்து ஊரடங்கு போடப்பட்டிருந்த சமயத்திலும் உள்ளூர் நிர்வாகத்தின் சிறப்பு அனுமதி பெற்று உரிய நேரத்தில் 'சம்போ' சென்று வந்ததாக 1963-ல் வெளியிடப்பட்ட காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தின் நூற்றாண்டு விழா மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சத்திரம் குறித்து பேசிய கே.ஏ. விஸ்வநாதன், ''இன்று தினமும் 200 முதல் 400 பேர் வந்து செல்லும் சத்திரமாக இது செயல்பட்டு வருகிறது. சிக்ரா பகுதியில் புதிய சத்திரம் ஒன்றும் கட்டியிருக்கிறோம். அதுவும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது'' என்றார்.

நேரம் மதியத்தைக் கடந்திருந்தது. களைப்பு கால்களை தொற்றிக்கொள்ள தெருவோரக் கடையின் கச்சோரியும், லஸ்ஸியும் தற்காலிக தெம்பு தந்தன. வயிரை நிரப்பிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.

'எங்கிருந்து வர்றீங்க, சவுத்தில் இருந்து வர்றீங்களா' என வழிநெடுக விசாரித்த பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்கள் பைக்கில் ஏறுமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தனர். தெருக்களுக்குள் ஆட்டோ, கார் செல்ல முடியாததால் இங்கு பைக் டாக்ஸி தேவை அதிகம். அதே நேரம், மொழி சரிவர தெரியாதவர்களிடம் சற்று கூடுதல் கட்டணம் கேட்கும் போக்கில் காசி விதிவிலக்கல்ல. இன்றும் தமிழ் எழுத்து மற்றும் கட்டடக்கலை அடையாளங்களுடன் நின்று கொண்டிருக்கும் ஓர் இடத்தில் வந்து இறங்கினேன்.

சைவத் துறவி குமரகுருபரர் மீட்டெழுப்பிய கேதாரேஸ்வர் கோவில் கங்கையைப் பார்த்தபடி 'சிவ சிவ' என்ற தமிழ் எழுத்துகளுடன் கேதார் காட் பகுதியின் படித்துறையின் மேலே தொன்மையான வரலாற்றை ஏந்தி நின்று கொண்டிருந்தது.

உள்ளூர் நிர்வாகத்துக்குச் செலுத்தப்பட்ட வரி ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இந்தக் கோவிலுக்கும் குமரகுருபரர் மற்றும் குமாரசுவாமி மடத்துக்குமான தொடர்பு குறைந்தது 360 ஆண்டுகள் பழமையானது என்கிறார் காசி தருமபுர மடத்தின் கண்காணிப்பாளர் ராஜராஜன்.

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் தருமபுர ஆதீனத் தலைவர் விருப்பப்படி காசி சென்று, பின்னர் அங்கு சைவத்தொண்டு செய்ததாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட 'தமிழர் மரபில் காசி' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி விவரித்த ராஜராஜன், ''காசி வந்த குமரகுருபரர் கேதார் காட் பகுதியில் கங்கைக் கரையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு கனவு வந்திருக்கிறது. யாரோ ஒருவர் கனவில் தோன்றி 'எனக்கு கோவில் கட்டு' எனக் கூறி உள்ளார். கேதார் காட் அப்போது வனப்பகுதி போல இருந்துள்ளது. குமரகுருபரர் அந்தப் பகுதியை ஆராய்ந்த போது அங்கு கேதாரேஸ்வரர் என ஒரு சிவலிங்கம் இருந்துள்ளது. அது சுயம்புவாக உருவான லிங்கம் என காசி காண்டம் நூல் கூறுகிறது. கட்டடமாக இல்லாமல் குடிசை மட்டும் இருந்துள்ளது. அதை முழுமையான கோவிலாக மீட்டுருவாக்கம் செய்ய முடிவெடுத்த குமரகுருபரர், ஔரங்கசீப் அரசின் உள்ளூர் பிரதிநிதியிடம் நிலம் கேட்டு முறையிட்டார்'' எனக் கூறுகிறார்.

தன்னுடைய கல்வி அறிவினாலும் பண்பினாலும் டெல்லி பாதுஷாவின் பெருமதிப்பை குமரகுருபரர் பெற்றதாகவும், டெல்லி பாதுஷா குமரகுருபரருக்கு கேதார் காட்-டில் இடம் அளித்ததாகவும், பின்னர் தற்போது ஸ்ரீ குமாரசுவாமி மடம் என்ற பெயரில் அறியப்படும் மடத்தை குமரகுருபரர் நிறுவியதாகவும் 'தமிழர் மரபில் காசி' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படித்துறைகளில் நடப்பதும், தெருக்களுக்குள் நுழைவதுமாய் காசிக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன். கங்கையின் ஓசையும் மந்திர ஓசைகளும் மாறிமாறி காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.