நடிகர் சூர்யா நடித்துள்ள 'சீன்' திரைப்படம் இன்று (நவம்பர் 6) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் 'ரோமாஞ்சம்', 'ஆவேஷம்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஜித்து மாதவன், தமிழில் இயக்கியுள்ள முதல் திரைப்படம் இது.

இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லின், ஆனந்தராஜ், லால், பிரபல யூடியூபர் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

காவல் அதிகாரிக்கும் தொடர் கொலைகளில் ஈடுபடும் நபருக்கும் இடையிலான மோதலை நகைச்சுவையுடன் இந்தத் திரைப்படம் சொல்கிறது.

'சீன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன.

குற்றப்பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் திறமைசாலியான இன்பராஜ், தனக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாகக் காவல் பணியிலிருந்து விலக முடிவெடுக்கிறார்.

ஆனால், அவர் ஏற்கெனவே விசாரித்த வழக்குடன் தொடர்புடைய புதிய கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன.

இந்தக் கொலைகளின் பின்னணியில் இருக்கும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு மீண்டும் இன்பராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஈஸ்வரன் என்ற கொலையாளியாக நஸ்லின் நடித்துள்ளார். இன்பராஜின் விசாரணையில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நஸ்ரியாவும் இணைகிறார்.

இன்பராஜ் எதிர்கொள்ளும் தனிப்பட்ட பிரச்னை என்ன? கொலையாளியை அவர் எப்படிக் கண்டுபிடிக்கிறார்? இந்த விசாரணையில் அவருக்கு உதவியாக இருப்பவர்கள் யார்? என்பதே மீதிக் கதை.

"சீன் திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லின் ஆகிய மூவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக நஸ்ரியாவின் நகைச்சுவை நடிப்பும் நஸ்லினின் இயல்பான வில்லத்தனமும் கவனம் ஈர்க்கின்றன" என்ற கருத்தை என்டிடிவி தனது விமர்சனத்தில் முன்வைத்துள்ளது.

நஸ்ரியா நடித்துள்ள மாயா கதாபாத்திரம், கதாநாயகனுக்கு உதவியாக வருவதுடன் படத்தின் நகைச்சுவைக்கும் முக்கியப் பங்களிப்பை வழங்குவதாக அந்த விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

நஸ்லின் வழக்கமான வில்லன்களைப் போல ஆர்ப்பாட்டமான நடிப்பை வெளிப்படுத்தாமல், இயல்பான உடல்மொழியின் மூலம் அச்சத்தை ஏற்படுத்துவதாக தினமணி பாராட்டியுள்ளது.

சூர்யாவின் தந்தையாக நடித்துள்ள ஆனந்தராஜ் உள்ளிட்ட துணை நடிகர்களும் நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பலம் சேர்ப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

நஸ்ரியாவின் நடிப்பைப் பாராட்டியுள்ள தி இந்து, அவர் திறமையான சண்டைக் கலைஞராகக் காட்டப்படும் காட்சிக்குப் பிறகு, இரண்டாம் பாதியின் முக்கியமான தருணம் ஒன்றில் அந்தத் திறன் பயன்படுத்தப்படாதது திரைக்கதையில் கேள்வியை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஈஸ்வரன் கதாபாத்திரம் அச்சுறுத்தலாக இருந்தாலும், அவரது கொடூரத்தன்மையை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் அந்த நாளிதழ் விமர்சித்துள்ளது.

'சீன்' திரைப்படத்தை மிகவும் பொழுதுபோக்கான தொடர் கொலையாளி திரைப்படம் என்று தெரிவித்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஐந்துக்கு நான்கு நட்சத்திரங்களை வழங்கியுள்ளது.

வழக்கமான குற்றப் புலனாய்வுத் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, நகைச்சுவையையும் பரபரப்பையும் ஒன்றாகக் கையாண்டிருப்பது படத்தின் முக்கியச் சிறப்பம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜித்து மாதவன் தனது முந்தைய திரைப்படங்களைப் போலவே, வழக்கத்திற்கு மாறான மனிதர்களையும் அவர்களுக்கு இடையே நிகழும் சம்பவங்களையும் நகைச்சுவைக்குப் பயன்படுத்தியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.