இந்த நாள் நெருங்கி வரும் நிலையில், 'உலக அழிவு' குறித்த அச்சம் மீண்டும் சமூக வலைதளங்களிலும் பல ஊடக நிறுவனங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தேதி, பூமியின் மக்கள்தொகையின் எதிர்காலம் குறித்து மதிப்பீடு செய்து 66 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வுடன் தொடர்புடையது.
மூன்று ஆராய்ச்சியாளர்களால் 1960ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அமெரிக்காவின் 'சயின்ஸ்' இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது. இதற்கு 'உலக அழிவு: வெள்ளிக்கிழமை, நவம்பர் 13' என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
சுமார் 2,000 ஆண்டுகாலத் தரவுகளில் தாங்கள் கவனித்த அதே விகிதத்தில் உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்தால், தங்களது கணித மாதிரியின்படி 2026 நவம்பர் மாதத்தில் மனிதர்களின் எண்ணிக்கை கோட்பாட்டளவில் 'முடிவிலி'யை எட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்திருந்தனர்.
ஆனால், ஆராய்ச்சியாளர்கள் உண்மையிலேயே மனித இனத்தின் அழிவு குறித்துப் பேசினார்களா?
இந்தத் தேதிக்கு ஏதேனும் அறிவியல் முக்கியத்துவம் உள்ளதா? பூமியில் உலகளாவிய பேரழிவு அல்லது உயிர்கள் முடிவுக்கு வரும் நிகழ்வு ஒன்று நடைபெறுவதைக் குறிக்கிறதா?
இந்த ஆய்வை ஆஸ்திரிய-அமெரிக்க இயற்பியலாளர் ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர் தொடங்கினார்.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மின் பொறியியல் துறையில் பணியாற்றிய பாட்ரிசியா மோரா மற்றும் லாரன்ஸ் அமியோட் ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார்.
வரலாற்றில் மனித மக்கள்தொகை எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்திலிருந்து 1958ஆம் ஆண்டு வரையிலான 24 மதிப்பீடுகள் உட்பட உலக மக்கள்தொகை குறித்த வரலாற்றுத் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.
மக்கள்தொகை ஒரு நிலையான விகிதத்தில் வளர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதவில்லை.
மாறாக, அதிவேகமாக அதிகரிக்கும் மக்கள்தொகை அல்லது மிகை வளர்ச்சி என்ற கருத்தின் அடிப்படையில் ஒரு கணித மாதிரியை அவர்கள் முன்வைத்தனர்.
இந்த முறையில், மக்கள்தொகை அதிகரிப்பதுடன், அதன் வளர்ச்சி வேகமும் காலப்போக்கில் அதிகரிக்கிறது.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது, உதவி செய்துகொள்வது மற்றும் கூட்டணிகளை உருவாக்கிக்கொள்வது போன்ற திறன்கள், குறிப்பிட்ட சுற்றுச்சூழல் வரம்புகளை அவர்கள் கடக்க உதவுகின்றன என்று இந்த மாதிரி கருதுகிறது.
இதன் மூலம், அவர்கள் உயிர்வாழும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் திறன் அதிகரிக்கிறது.
வரலாற்றுத் தரவுகளுக்குப் பொருத்திப் பார்த்தபோது, தங்களது கணிதச் சமன்பாட்டின் அடிப்படையிலான மாதிரி 2026ஆம் ஆண்டில் 'சிங்குலாரிட்டி' எனப்படும் நிலையை எட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
இதேபோல், 2026 நவம்பர் 13ஆம் தேதி ஆய்வின் தலைப்பில் குறிப்பிடப்பட்டது. அதே அனுமானங்களின் அடிப்படையில், மக்கள்தொகை 'முடிவிலி'யை எட்டும் என்று கணிக்கப்பட்ட தேதியாக அது அமைந்தது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்த ஆய்வின் தலைப்பு உலக அழிவு குறித்த ஒரு தீர்க்கதரிசனமாகத் தோன்றலாம். ஆனால், அதன் உண்மையான பொருள் முற்றிலும் வேறானது.
பூமியுடன் ஒரு சிறுகோள் மோதுவது, சூரியனில் வெடிப்பு ஏற்படுவது, பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கம் அல்லது எரிமலை வெடிப்பு போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் கணிக்கவில்லை.
எந்தவொரு இயற்கைப் பேரிடராலும் மனித இனம் அழியும் என்பதற்கான தேதியையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
உண்மையில், தனது கணிதச் சமன்பாட்டின்படி மக்கள்தொகை முடிவிலியாக மாறும் ஒரு கற்பனையான கணிதப் புள்ளியை விவரிப்பதற்காகவே அவர் "உலக அழிவு நாள்" என்ற கருத்தைப் பயன்படுத்தினார். இயற்பியல் உலகில் இது சாத்தியமற்றது.




