இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எந்தவொரு அரசாக இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடமை என்று கூறியுள்ளார்.
திமுக செய்ததையே தவெக பின்பற்றியுள்ளது என்பதால், இதுதான் தமிழ்நாடு என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்று பிபிசியிடம் கூறினார் திமுக செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
மதநல்லிணக்கத்தில் தவெக அரசு உறுதியாக இருப்பது இந்த நடவடிக்கையால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பிபிசியிடம் கூறினார் விசிக பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார்.
கார்த்திகை தீபத்திருவிழா நாளில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையுச்சியிலுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்று இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. ஆனால் அது நிலஅளவைக்குரிய தூண் என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டு அதற்கு மறுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளன.
இந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதியன்று, கார்த்திகை தீபநாளன்று மலையுச்சியிலுள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைக் கட்டாயம் செயல்படுத்த வேண்டுமென்று பாஜக, இந்து அமைப்புகள் வலியுறுத்திப் போராடி வந்த நிலையில், அதைச் செயல்படுத்தக்கூடாது என்று தவெக கூட்டணிக்கட்சிகள் வலியுறுத்தின. இறுதியில் உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. மாறாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
அங்கு தீபம் ஏற்றப்படாததற்கான காரணத்தை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக மதுரை மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட நீதிமன்றங்களில் நடக்கவுள்ள சட்டப்பூர்வமான சவால்கள் ஒரு புறமிருக்க, இந்த நடவடிக்கையை எடுத்ததன் காரணமாக தவெகக்கு அரசியல்ரீதியாக ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்ததன் மூலமாக, தமிழக முதல்வர் விஜய் தெரிந்தே மாபெரும் வரலாற்று பிழையைச் செய்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்ததற்காக அரசு விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன் ஆகியோரும் இதனைக் கண்டித்து கடுமையாக பேட்டியளித்து, அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்றத் தீர்ப்புகளை அரசு தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அணுகக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ள 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறக்கணித்து தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்று செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தாமல் அரசு செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல என்று விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இதனால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் மாணிக்கம் தாகூர், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்றுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைக் காரணம் காட்டி பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பின்புலத்தோடு தேவையற்ற பதற்றத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும், வகுப்புவாத சக்திகளின் சதிகளையும் தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் இணைந்து முறியடித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில அரசுகள் கடைப்பிடிக்காததற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, ''தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிற்கு உள்ளது . என்ன விளைவு வந்தாலும் எதிர்கொள்வோம் என்று கடந்த காலத்தில் திமுக அரசும், அன்றைய முதல்வர் ஸ்டாலினும் உறுதியோடு நின்றதைப் போல இப்போதும் மாநில அரசு இந்த உத்தரவுகளுக்கு எதிராகத் தயங்காமல் சட்டப்பூர்வமான வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.




