உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், ஆனால் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான நபர்களின் பெயர்களை கோவில் நிர்வாகம் வழங்கவில்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக லைவ் லா இணையதளம் தெரிவித்துள்ளது.
உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில், வழக்கத்தின்படி அதிகாரிகள் நேற்று ஏற்றிய தீபம் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அந்தத் தீபத்தின் சுடரில் இருந்து தீபத்தூணில் உள்ள தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல், மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு முறையிட்டார்.
நாளையோ அல்லது நாளை மறுநாளோ மனுவைப் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நவம்பர் 24ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அன்றைய தினம் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்திலேயே மகாதீபம் ஏற்றப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று (நவம்பர் 25) காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் தரப்பில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தகவலை சட்டச் செய்திகளை வெளியிடும் லைவ் லா இணையதளம் தெரிவித்துள்ளது.
அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்தரப்பு இந்த விவகாரத்தை எழுப்புவதற்கு முன்பாகவே நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவது பொருத்தமாக இருக்கும் என்பதால் தாங்கள் இதை முன்வைப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறிய செயல் என்று தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டார். கோவில் அறங்காவலர் குழுவின் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கோவிலின் மரபு மற்றும் வழக்கத்தின்படி உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள இடத்தில்தான் தீபம் ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே ஏற்றப்பட்ட தீபத்தை எடுத்துச் சென்று தீபத்தூணில் ஏற்றியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதோடு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்றும் மற்றொரு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்காத நீதிபதி அரவிந்த் குமார், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைக் கோருபவர்கள் அதற்கான உரிய மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காகச் செல்ல வேண்டிய நபர்களின் பெயர்களை கோவில் நிர்வாகம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் நவம்பர் 20ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது முதல் நவம்பர் 24ஆம் தேதி மாலை வரை, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளுக்கு உட்பட்டு அந்த உத்தரவைச் செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதற்காக மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், மூன்றாவது கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் ஒவ்வோர் அம்சமும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபத்தூணுக்குச் செல்லும் குழுவில் இடம்பெற வேண்டியவர்களின் எண்ணிக்கை, அவர்கள் செல்ல வேண்டிய நேரம், பயன்படுத்த வேண்டிய வழி, அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறை, பார்வையாளர்களுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைகள் கோவில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், காவல் ஆணையர் ஆகியோருடன் நடத்தப்பட்டதாகவும், கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் எழுத்துபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி இரவு கோவில் செயல் அலுவலரிடம் இருந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்றதாக மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




