தாமிரபரணி ஆற்றில் தங்கக் கட்டிகள் அடங்கிய மூட்டை கிடைத்ததாகப் கூறப்படும் வழக்கில் சந்தேக வளையத்தில் உள்ள ஆறு பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.

"பிடிபட்ட 24 தங்கக் கட்டிகளில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முத்திரைகள் இடம்பெற்றுள்ளதால் கடத்தலுக்காக இவை கொண்டு வரப்பட்டிருக்கலாம்" எனக் கூறுகிறார், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர்.

திருட்டு மற்றும் திருடிய பொருட்களை தவறாகப் பயன்படுத்தியது என இரண்டு பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸ் வழக்குப் பதிவுசெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 24) சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள இந்தப் பகுதியில் கருப்பசாமி என்பவரிடம் இருந்து சுமார் 430 கிராம் அளவிலான தங்க நகைகளைக் காவல்துறை மீட்டுள்ளது. ஆனால், ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஆத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் பிரபாகரனிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, "ராமநாதபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகள் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை." எனக் கூறுகிறார்.

சிபிசிஐடி விசாரணைக்கு தொடக்கமாக, கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் அமைந்தது.

அங்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிலர் பிடிபட்டுள்ளனர்.

இவர்களில் குட்டி என்கிற சரவணன் மற்றும் அவரது உறவினர்களிடம் இருந்து சுமார் 33 தங்கக் கட்டிகள், 28 சவரன் நகைகள் மற்றும் 12 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

"தங்கக் கட்டிகளை தாமிரபரணி ஆற்றில் கண்டெடுத்ததாக பிடிபட்ட நபர் கூறி வருகிறார். அவர், தூத்துக்குடியில் வசிக்கும் காட்டு நாயக்கர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்" என, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செப்டம்பர் மாதம் அளித்த பேட்டியில் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளராக இருந்த சந்தீஷ் கூறியுள்ளார்.

"சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வல்காம்பி சுவிஷ் மற்றும் ஏர்கர் ஆகிய முத்திரைகளைக் கொண்ட 24 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மற்ற தங்கக் கட்டிகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தங்கம் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்தவை," என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கேணிக்கரை காவல் நிலைய எல்லையில் பிடிபட்ட ஐந்து பேரும் உறவினர்கள் என்றும் இவர்களில் மூன்று பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தங்கம் தொடர்பான முறையான ஆவணங்கள் எதையும் பிடிபட்ட நபர்கள் சமர்ப்பிக்கவில்லை. இவற்றுக்கு உரிமைகோரி யாரும் முன்வராததால் வழக்குப் பதிவு செய்து தங்கத்தைக் காவல்துறை பறிமுதல் செய்தது.

தங்கக் கட்டிகளை மாவட்ட கருவூல அதிகாரியின் பாதுகாப்பில் வைக்குமாறு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

தங்கக் கட்டிகள் பிடிபட்டது தொடர்பாக கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

"சுவிஸ் நாட்டு முத்திரை கொண்ட 24 தங்கக் கட்டிகள் உள்ளதால் இவை சட்டவிரோத வழியில் கொண்டு வரப்பட்டிருக்கலாம்,' என்ற சந்தேகம் சுங்கத்துறைக்கு உள்ளது. இதனால் சுங்கத்துறை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது" என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராமநாதபுரம் எஸ்.பி கூறியுள்ளார்.

தொடர்ந்து, "தங்கத்தைப் பறிமுதல் செய்த பிறகு இ-சாக்சியா செயலியைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்தோம். நீதிமன்றம் மூலமாக தங்கக் கட்டிகளை சுங்கத்துறையிடம் ஒப்படைப்போம்" என அவர் தெரிவித்துள்ளார்.

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு இ-சாக்சியா செயலி உதவுகிறது.

ராமநாதபுரத்தில் 33 தங்கக் கட்டிகள் பிடிபட்டதாக ஊடக செய்திகள் தெரிவித்த நிலையில், இவற்றின் அளவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக காவல்துறை மீது சந்தேகம் வலுத்ததால், கடந்த அக்டோபர் மாதம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.